வந்தாச்சு அட்சய திருதியை… தங்கத்தில் முதலீடு செய்ய தகதக டிப்ஸ்!

வந்தாச்சு அட்சய திருதியை… தங்கத்தில் முதலீடு செய்ய தகதக டிப்ஸ்!

Gold Loan
அடுத்த சில நாட்களில் அட்சய திரிதியை வரவிருக்கிறது. இந்த நாளில் நம்மவர்கள் கொஞ்சமாக தங்கத்தை நகையாக வாங்காமல் இருப்பதில்லை. அதிலும் பெண்கள் இந்த நாளில் ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்கியே தீரவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

அழகுக்கு அழகு சேர்ப்பதுடன், நினைத்த நேரத்தில் விற்றோ அல்லது அடமானம் வைத்தோ, திடீர் செலவுகளை சமாளிக்கலாம் என்பதே தங்கத்தில் அதிகமானவர்கள் முதலீடு செய்வதற்கு முக்கிய காரணம்.

தங்க முதலீடு லாபகரமானதாக இருக்குமா?

தங்கத்தில் முதலீடு செய்வது 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை குறிப்பிடத்தக்க அளவு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், மற்ற முதலீடுகளைவிட தங்கம் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 29% அளவுக்கு லாபம் தந்தது. மேலும், தங்கத்தின் மீதான முதலீடு நீண்ட காலமாக ஆண்டுக்கு 10 சதவிகிதத்தைவிட கொஞ்சம் குறைவாக லாபம் தந்திருக்கிறது.

எப்படி வாங்கலாம்?

தங்கத்தை வெறும் நகையாகத்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வேறு வகைகளிலும் வாங்கலாம் என்பது இன்றும் பலருக்கும் தெரியாத விஷயமாகவே இருக்கிறது. தங்கத்தில் எப்படி சரியாக முதலீடு செய்வது என்பதைப் பார்ப்போம்

நகைகள் வாங்குவது!

தங்க நகைகளை வாங்குவதன் மூலம் தங்கத்தில் முதலீடு செய்வது ஆண்டாண்டு காலம் நாம் பின்பற்றும் வழக்கமாகும். தங்க நகைகள் வாங்கும்போது மொத்த கொள்முதல் செலவுடன் (மொத்த செலவில் 10 முதல் 20 சதவிகிதம் வரை இருக்கலாம்) தயாரிப்பு செலவுகளும் சேர்ந்திருக்கும். அதாவது, செய்கூலி மற்றும் சேதாரமாக நீங்கள் கணிசமானதொரு தொகையை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

நீங்கள் வாங்கிய நகையை அதே நகைக்காரரிடம் விற்கும்போது அவர் சந்தை விலைக்கு அல்லது அதைவிடக் கொஞ்சம் குறைவான விலைக்கு வாங்கிக்கொள்வார் என்றாலும் சேதாரம் அல்லது அழுக்கு என்கிற பெயரில் குறிப்பிட்ட அளவு தங்கத்தைக் கழித்துவிடுவார். இதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய லாபத்தின் அளவு குறையும். ஆனால், மக்களில் பலர் இந்த விஷயத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை. இதனால் மிகுந்த நஷ்டத்துக்கு உள்ளாகிறோம் என்பது சாதாரண மக்களுக்குப் புரிவதே இல்லை.

தங்க நாணயம் மற்றும் தங்கக் கட்டிகளில் முதலீடு!

தங்க நகைகள் வாங்குவதைவிட தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளில் முதலீடு செய்வதும் ஒரு சிறந்த முதலீடுதான். நகைக் கடைகளிலும் வங்கிகளிலும் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

வங்கிகள் தங்க காசுகளை விற்றாலும், அவற்றை வங்கிகள் திரும்ப வாங்கிக் கொள்வதில்லை. நகைக் கடைகள் திரும்ப வாங்கிக் கொண்டாலும், பணமாக திரும்பக் கிடைக்காது. மீண்டும் நகையாகவே வாங்கவேண்டும் என்று நகைக்கடைகள் வற்புறுத்துகின்றன. தங்கக் கட்டிகளைப் பொறுத்தவரை, மிக அதிகமான பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உகந்தது.

தங்க நகைகளாக இருந்தாலும் சரி அல்லது தங்க நாணயம் மற்றும் கட்டிகளாக இருந்தாலும் சரி, இவற்றை வாங்கி, வீட்டில் பத்திரமாக வைத்திருப்பது பெரும் கவனம் செலுத்த வேண்டும். இவை மதிப்பு மிகுந்தது என்பதால் திருடு போவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

கோல்டு இ.டி.எஃப் (Gold ETF)

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இருக்கும் பல வகையான முதலீட்டு முறைகளில் இந்த கோல்டு இ.டி.எஃப்.-ம் முக்கியம் வாய்ந்ததாகும். இதில் முதலீடு செய்யப்படும் பணத்தைக் கொண்டு தங்கம் வாங்கி வைக்கப்படும். தங்கத்தின் விலை உயர்வு அல்லது குறைவுக்கேற்ப நம் முதலீட்டின் மதிப்பு மாறும்.

பொதுவாக, யூனிட் கணக்கில் (ஒரு கிராம் தங்கத்துக்கு இணையானது) இதில் முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு மற்றும் டிரேடிங் கணக்கு அவசியம். டீமேட் பராமரிப்புக் கட்டணத்தை நாம் கட்ட வேண்டும்.

மேலும், இதனை வாங்கும்போதும், விற்கும்போதும் தரகருக்கான கட்டணத்தை செலுத்தியாக வேண்டும். வாங்கிய யூனிட்களை விற்றபின் பணமாகத் திரும்பக் கிடைக்குமே தவிர, தங்கமாகக் கிடைக்காது.

கோல்டு ஃபண்ட் (Gold Fund)

கோல்டு ஃபண்ட் என்பதும் மேற்சொன்ன கோல்டு இ.டி.எஃப். போன்றதே. டீமேட் கணக்கு இல்லை, டிரேடிங் கணக்கு இல்லை என்பவர்கள் இந்த கோல்டு ஃபண்ட் மூலம் முதலீடு செய்யலாம். இதில் ஒருமுறை முதலீடு செய்வதற்கு ரூ.5,000 குறைந்தபட்ச தொகையாக இருக்கிறது. எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ரூ.500, ரூ.1,000 என்கிற அளவில் செய்யலாம்.

கோல்டு இ.டி.எஃப் மற்றும் கோல்டு ஃபண்ட் திட்டங்கள் காகித வடிவில் இருப்பதால் பராமரிப்பதற்கு எளிது. திருடு போய்விடும் என்கிற பயமில்லை.மேலும் செய்கூலி, சேதாரம் என்கிற எந்தப் பிரச்னையும் இல்லை. வேண்டும் என்கிறபோது உடனே விற்கவும் முடியும்.

பங்கு அடிப்படையிலான தங்க முதலீடு (Gold Stocks)

நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்யாமல், தங்க சுரங்க நிறுவனங்கள் மற்றும் தங்கத்தைப் பிரித்தெடுப்பது மற்றும் மார்க்கெட்டிங் செய்வது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வதாகும். இந்த நிறுவனங்கள் எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே நமக்குக் கிடைப்பது லாபமா அல்லது நஷ்டமா என்பது முடிவாகும்.

ஆனால் மேற்சொன்ன நான்கு முதலீடுகளில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துக்கேற்ப உங்கள் லாப, நஷ்டம் அமையும். எனவே, அதிக ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் மட்டுமே இதில் முதலீடு செய்யலாம். இதற்கு டீமேட் கணக்கு வேண்டும். அதற்கு ஆண்டு பரிவர்த்தனைக் கட்டணம் கட்ட வேண்டும்.

ரிஸ்க்கே வேண்டாம் என்கிறவர்கள் கோல்டு இ.டி.எஃப். அல்லது கோல்டு ஃபண்ட் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்வது நல்லது.

அட்சய திருதியையின் போது தங்கம்தான் வாங்க வேண்டுமே ஒழிய தங்க நகையாகத்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. இந்த அட்சய திருதியை முதல் தங்கத்தை நகையாக வாங்காமல், வேறு வழிகளிலும் வாங்க முயற்சிப்போம்.

Leave a Reply