வரிக்கு எதிராக வேலுநாச்சியார் போல் போராடுவோம். விஷால்
திரைப்படத்துறையினர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே 28% வரி விதித்துள்ள நிலையில் தற்போது மாநில அரசு கேளிக்கை வரியாக 10% விதித்துள்ளது. இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடந்த 6ஆம் தேதி முதல் எந்த புதிய திரைப்படமும் ரிலீஸ் செய்வதில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இந்த நிலையில் இன்று சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் அவர்களின் நாடகத்திற்கு விஷால் உள்பட நடிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நாடக விழாவில் பேசிய விஷால், ‘வரி செலுத்த முடியாது என பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக வேலுநாச்சியார் போராடியது போல, தமிழக அரசுடன் போராடி கேளிக்கை வரிக்கு விலக்கு பெறுவோம்’ என்று கூறினார்
28% ஜிஎஸ்டி வரி விதித்த மத்திய அரசை எதிர்த்து நடிகர் சங்கம் போராடாமல் 30% கேளிக்கை வரியை 10% ஆக குறைத்தது மட்டுமின்றி திரையரங்கு கட்டணத்தையும் 25% ஏற்றிய தமிழக அரசை எதிர்த்து திரையுலகினர் போராடுவது முரண்பாடின் மொத்த உருவமாக இருப்பதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.