வலிகளைப் போக்கும் எண்ணெய் குளியல்

வலிகளைப் போக்கும் எண்ணெய் குளியல்

8வர்மக்கலை மருத்துவத்தில் மனித உடலில் ஏற்படக்கூடிய வலிகளை காண்போம். வலிகளில் முதுகு வலி, தண்டு வலி என்பது ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் இந்த வலியால் அவதிப்படுகிறார்கள். அதிலும் அதிக வலியால் அவதிப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்கள்தான். இருப்பினும் இது நிரந்தர அவதியில்லை, நாளடைவில் சித்த வர்ம சிகிச்சை முறையில் விரைவில் குணப்படுத்த முடியும்.

மனிதன் நிமிர்ந்து நிற்கவும், முன், பின்பாக வளைவதற்கும், நெளிவதற்கும் முதுகு எலும்பு தான் மிகவும் உதவுகிறது. இந்த முதுகெலும்பு என்பது ஒரு தனி எலும்பாக தெரிந்தாலும், இது ஒரு தனி எலும்பு கிடையாது. 33 எலும்புகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போன்ற அமைப்பை உள்ளடக்கியதுதான் முதுகு எலும்பு.

முந்தைய காலங்களில் முதுகு தண்டு வலி, நடுமுதுகு வலி போன்ற வலிகள் உள்ளது என்று கூறியவர்கள் குறைவாகதான் இருந்தார்கள். 30, 40 வருடங்களுக்கு முன்பெல்லாம் வயதானவர்கள் மட்டும் தான் இந்த வலிகள் உள்ளது என்று கூறுவார்கள். ஆனால் இன்றைய கால கட்டங்களில் இளம் வயது உள்ளவர்களும் இந்த வலிகள் உள்ளதாக கூறுகின்றார்கள்.

உடலின் இடுப்புக்கு கீழ் பகுதியில் உள்ள நரம்புகளும் மற்ற இடங்களில் உள்ள நரம்புகளும் முதுகு எலும்பின் தண்டுவடம் வழியாகத்தான் மூளைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்த நரம்புகள்தான் நம் உடலில் ஏற்படுகின்ற தொடு உணர்வுகள், உணர்ச்சிகள், மற்றும் வலிகளை உடனே மூளைக்கு தெரிவிக்கின்றன. 33 அடுக்குகளின் இரு புறங்களில் ஜெல்லி போன்ற சவ்வு பிசுபிசுப்பு தன்மையுடனும், ஈரப்பதத்துடனும் இருக்கின்றன. இவை இங்கு உள்ள எலும்புகள் உராயாமல் இருப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.

முதுகெலும்பின் தண்டுவடத்திலும், உடலில் எந்த இடத்திலும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று நினைத்து நம் முன்னோர்கள் வாரம் ஒருமுறை சனிக்கிழமை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையை பின்பற்றி வந்தனர். வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இரு முறையோ உடலில் எண்ணெய் தேய்த்து குளித்து வந்தோம் என்றால் உடலில் எலும்புகளின் இணைப்புகளில் இருக்கும் மஞ்ஜையோ, சவ்வோ, பிசுபிசுப்பு தன்மையோ போன்ற எதுவும் என்றும் குறையாது. இரு எலும்புகளில் இணைப்பு பகுதியிலும், முதுகெலும்பின் இணைப்பு, இரு ஓரங்களிலும் சவ்வு பிசுபிசுப்பு தன்மை இருக்கும் வரையில் வலிகள் வருவது இல்லை. இது போன்ற இடங்களில் சவ்வு பிசுபிசுப்பு தன்மை குறையும் போதுதான் வலிகள் ஏற்படுகின்றன.

இந்த வலிகளுக்கு சவ்வு பிசுபிசுப்பு தன்மையும், ஈரப்பதமும் குறைவது தான் காரணம். இதனால் வலிகளால் அவதிப்படுகிறார்கள். எலும்பு தேய்மானம் என்பது உடலில் எந்த பகுதியிலும் எந்த இடங்களிலும் ஏற்படாது. இன்றைய நடைமுறையில் உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையை யாரும் பின்பற்றுவது கிடையாது. முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் எல்லோரும் எண்ணெய் தேய்த்து குளித்து வந்ததினால் இது போன்ற வலிகளால் அதிகம் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஆண்கள் சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து குளித்தால் மூட்டு வலி, முதுகுவலி, முதுகு தண்டு வலி, இடுப்பு வலி, ஆண்மை குறைவு, மலச்சிக்கல், தூக்கமின்மை போன்றவைகள் ஏற்படாது.

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் ஈரப்பதமும், எண்ணெய் பிசுபிசுப்பும் இருந்து கொண்டே இருக்கும். இத னால் உடல் உள்உறுப்புகள் அதிகம் பாதிக்காது. உடல் பலமும், மனம் பலமும் எண்ணெய் குளியலினால் நமக்கு கிடைக்கிறது. ஒரு சிலர் எண்ணெய் தேய்த்து குளித்தால் சளி, ஜலதோஷம் பிடிக்கும் என்று நினைத்து எண்ணெயை உடலில் பயன்படுத்துவது கிடையாது. இவர்கள் தான் இன்று அதிகம் மூட்டு வலி, முதுகு தண்டு வலி, இடுப்பு வலி போன்ற வலிகள் உள்ளதாக கூறுகின்றனர்.

நாம் உண்ணுகின்ற உணவில் இருந்து சத்து பிரிக்கப்பட்டு 4-வது நாள் தான் உடலில் இருக்கும் சவ்வு மஞ்சைக்கு செல்கிறது. எனவே நாம் உண்ணும் உணவு இயற்கை உணவாகவும், நல்ல சத்து உள்ள உணவாகவும் இருப்பது மிகவும் அவசியம். முதுகெலும்பின் தண்டு வடப்பகுதி மற்றும் உடலில் நடு முதுகு பகுதியில் உடல் எடை அதிகம் ஆவதாலும் முதுகுத் தண்டு வடத்தில் வலி ஏற்படலாம்.

பெண்களுக்கு கர்ப்ப காலத்திலும் முதுகு வலி ஏற்படலாம். அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ் காலணி அணிவதாலும் முதுகுவலி, குதிக்கால் வலி வரலாம். முதுகெலும்பின் இரு புறமுள்ள சவ்வு குறைந்தாலோ அல்லது தசைகளில் இறுக்கம் ஏற்பட்டாலோ முதுகு அசையும் போது வலியும் வேதனையும் ஏற்பட்டு முதுகை அசைய விடாமல் இருக்குமாறு செய்யும். இது போன்ற வலி உள்ளவர்களுக்கு சித்த வர்ம இலக்கு முறையில் வர்ம புள்ளிகளை தூண்டியும் இவ்வலிகளை சரி செய்யலாம். வலியுள்ள இடத்தில் வர்ம வசவு தைலம் தேய்த்து இந்த வலிகளை குணப்படுத்தலாம்.

வலிகளும் 5 வர்ம புள்ளிகளும்

முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நாள் தாமதிக்காமல் உடனே கவனிக்க வேண்டும். 5 வர்ம புள்ளிகளைக் கொண்டு சரி செய்யலாம். கால தாமதம் செய்தால் நோய் குணமடைவதற்கும் தாமதம் ஆகும்.

முதுகு வலி, முதுகு தண்டு வலியுள்ளவர்களுக்கு நோய் தீர்க்கும் 5 வர்ம புள்ளிகள் வருமாறு:-

1. சுழி வர்மம், 2 கர்ணா முடிச்சு வர்மம், 3. நட்டல் வர்மம், 4. கச்சை வர்மம், 5. பூட்டு வர்மம்.

1. முதல் வர்மமான சுழி வர்ம புள்ளியை தூண்டினால் – தோள்களுக்கு ரத்த ஓட்டம் சீராகும், கைகளுக்கு ரத்த ஓட்டம் பரவும். கழுத்து வலியும் சரியாகும். மூளையும் சுறுசுறுப்பு அடையும்.

2. கர்ணா முடிச்சு வர்ம புள்ளியை தூண்டினால் கழுத்து வலி, தோள்பட்டை வலிகள், முதுகு வலி, குதிக்கால் வலி சரியாகும்.

3. நட்டல் வர்ம புள்ளியை தூண்டினால் வாத நோயும், வாய்வுத் தொந்தரவும் தீரும். கை, கால் பலம் பெறும். முதுகு எலும்புகளில் அனைத்து வலிகளும் சிக்கலும் தீரும்.

4. கச்சை வர்ம புள்ளியை தூண்டினால் இடுப்பு சார்ந்த வலி குறையும். மலம், ஜலம் சீராகும்.

5. பூட்டு வர்ம புள்ளியை தூண்டினால் இடுப்புக்கு வலு சேர்க்கும். கால்களை பலப்படுத்தும். கால்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கும்

Leave a Reply