வல்லரசை ஆளப் பிறந்த பெண்
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் மேகம் சூழ்ந்துவிட்டது. வளர்ந்த, வளரும் நாடுகள் பலவற்றில் பெண்கள் ஆட்சி செய்வதை இந்த உலகம் பார்த்துவிட்டது. ஆனால், உலகில் நீண்ட ஜனநாயகக் கட்டமைப்பைக் கொண்ட அமெரிக்காவில் இதுவரை தலைமை கீரிடத்தை ஒரு பெண் அலங்கரித்ததில்லை. இவ்வளவு ஏன்? இதுவரை பிரதானக் கட்சிகளின் வேட்பாளர்களாகக்கூட இருந்ததில்லை. முதல் முறையாக அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் பிராதன கட்சிகளில் ஒன்றான ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணமாக ஆராதிக்கப்படுகிறது. இதன் மூலம் சோகமான வரலாற்றுக்கு விடை கொடுப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது.
பெண்களுக்கு உரிமை
அமெரிக்காவில் அதிபர் ஆட்சி முறை 1788-ம் ஆண்டில் தொடங்கியது. 1920-க்கு முன்புவரை அமெரிக்காவின் சில மாகாணங்களில் மட்டுமே பெண்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். 1919-ம் ஆண்டில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு அமெரிக்கா முழுவதும் பெண்கள் வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டது. அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் இது ஒரு மைல் கல். தேர்தலில் பெண்கள் பங்கெடுப்பது பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்ட தருணத்தில் சம உரிமை கேட்டுப் போராடிய விக்டோரியா உட்ஹல் என்ற பெண் போராளி, 1872-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் சம உரிமைக் கட்சியின் சார்பாகப் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டார். இதுதான் அமெரிக்கத் தேர்தலில் பெண்கள் களமிறங்குவதற்குப் பிள்ளையார் சுழி.
அமெரிக்காவில் பல சிறிய கட்சிகளின் சார்பில் அமெரிக்க அதிபர், துணை அதிபர் தேர்தலில் போட்டியிடப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், பிரதானக் கட்சிகளான குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சிகளின் சார்பில் பெண்கள் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்பட்டதேயில்லை. அரிதாக 1964-ம் ஆண்டில் குடியரசுக் கட்சி சார்பில் மார்க்கெரட் சாஸி ஸ்மித் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல 1972-ம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் கறுப்பினப் பெண் ஷெர்லி ஜிஸ்ஹோம் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், வேட்பாளர் தேர்வில் இருவருமே தோல்வியடைந்தார்கள். இதனால், அதிபர் தேர்தலில் பிரதானக் கட்சிகள் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு வாய்க்கவில்லை.
வெற்றியை நோக்கி
2008-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு முந்தைய வேட்பாளர் தேர்வில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட பராக் ஒபாமா தேர்வு செய்யப்பட்டார். அந்த வேட்பாளர் தேர்வில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டுக் குறைந்த புள்ளிகள் வித்தியாசத்தில் ஒபாமாவிடம் தோல்வியடைந்தார் ஹிலாரி கிளிண்டன். ஒபாமா அதிபரானதும் எந்த ஈகோவும் பார்க்காமல் அவரது அமைச்சரவையில் வெளியுறவுத் துறையையும் அவர் கவனித்தார்.
ஆனால், அப்போது கோட்டைவிட்டதை இப்போது பிடித்துவிட்டார் ஹிலாரி. 2016-ம் ஆண்டுக்கான அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன், செனட் உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் இடையே போட்டி நிலவியது. ஆனால், கூடுதல் புள்ளிகள் பெற்று ஹிலாரி கிளிண்டன் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகியிருக்கிறார். இதன் மூலம் பிரதானக் கட்சி ஒன்றின் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமை ஹிலாரிக்குக் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 8 அன்று நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து ஹிலாரி களத்தில் இறங்கியிருக்கிறார். இந்தத் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெற்றால், வல்லரசு நாடான அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஹிலாரி தேர்ந்தெடுக்கப்பட்டதும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கட்சியினரிடையே ஹிலாரி பேசினார். “இதுவரை அதிபர் பதவிக்குப் பெண்கள் போட்டியிட்டதில்லை என்ற பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய கவுரவம். இது ஒரு வரலாற்றுச் சாதனை. இது உண்மையில் உங்களுடைய வெற்றி. நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாட்டின் முதல் பெண் அதிபராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், உங்களில் ஒருத்தியாக இருப்பேன். எனக்குக் கிடைத்த வாய்ப்பு, எதிர்காலத்தில் உங்களுக்கும் கிடைக்கும்” என்று சூளுரைத்தார் ஹிலாரி.