வளரும் பெண்களுக்கு தேவையான முக்கிய உணவு

வளரும் பெண்களுக்கு தேவையான முக்கிய உணவு

பால், தயிர் பிடிக்காத குழந்தைகளுக்குக்கூட சீஸ் பிடிக்கிறது. பிரெட்டில் தொடங்கி, பீட்ஸா போன்ற நவீன உணவுகளில் மட்டுமின்றி, இட்லி, தோசைக்குக்கூட சீஸ் கேட்டு அடம்பிடிக்கிற குழந்தைகளைப் பல வீடுகளில் பார்க்கலாம்.

எப்படியோ உணவு உள்ளே போனால் போதும் என அம்மாக்களும் சீஸுக்கு ‘நோ’ சொல்வதில்லை. எடைக் குறைப்பு ஆலோசனைகளில் தடை விதிக்கப்படும் உணவுகளில் முதலிடம் சீஸுக்கு. யார் எவ்வளவு சீஸ் சாப்பிடலாம், எந்த வகையான சீஸ் சாப்பிடலாம், சீஸ் தரும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி விரிவான தகவல்கள் பகிர்கிறார், உணவியல் நிபுணர் சௌமியா.

சீஸ் வகைகள்

ஹலோமி (Halloumi), ப்ளூ (Blue), ப்ரீ (Brie), புராட்டா (Burrata)… என 500-க்கும் மேற்பட்ட சீஸ் வகைகள் இருப்பதாக உலகளாவிய உணவுப் பொருள்கள் தரக் கூட்டமைப்பு உறுதி செய்கிறது. இதில், சோடியம் குறைவான சீஸ், கொழுப்புச்சத்துக் குறைவாக உள்ள சீஸ், உப்புச்சத்துக் குறைவாக உள்ள சீஸ் முதலியவை தற்போது மார்க்கெட்டில் அதிகம் கிடைக்கின்றன.

சீஸ்… கவனத்தில் கொள்க

அசைவ உணவுப் பிரியர்களுக்குத் தேவையான கொழுப்புச்சத்து, கறிகளில் இருந்து கிடைத்துவிடும். எனவே, சீஸ் சாப்பிட விரும்பும் அசைவப் பிரியர் களும் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களும் குறைந்த கொழுப்புச்சத்துள்ள சீஸ் வகைகளை மட்டும் சாப்பிடுவது நல்லது.

தொடர்ந்து, உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் சைவ உணவு மட்டும் உட்கொள்பவர்கள், அவர்களின் டயட்டுக்கு ஏற்ற அளவில் சீஸ் சாப்பிடலாம். குறிப்பாக சைவப் பிரியர்கள், கால்சியம் சத்து அதிகம் பெருகுவதற்கு சீஸ் மட்டுமில்லாமல், பால் உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது. சீஸ் கெட்டுப்போகாமல் இருக்க, குளிர்ந்த, பதப்படுத்திய நிலையில் அதை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

கொழுப்புச்சத்து அதிகமுள்ள (Full fat cheese) சீஸ்களை வாரத்துக்கு ஒருமுறைக்கு மேல் சாப்பிடக் கூடாது. சீஸ் வாங்கும்போது அதிலுள்ள கொழுப்பின் அளவைப் பார்க்க வேண்டும். 100 கிராம் சீஸில் 17.5 கிராம் அளவுக்குக் கொழுப்பு இருந்தால் அது அதிகபட்ச அளவு, 3.1 கிராம் முதல் 17.5 கிராம் வரை இருந்தால் நடுத்தர அளவு, மூன்று கிராமுக்கும் குறைவாக இருந்தால் குறைந்த கொழுப்பு.

எப்படி, எப்போது சாப்பிடக் கூடாது?

ஸ்வீட்டோடு சேர்த்து சீஸ் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடுவது, பல் சொத்தை, பல் ஈறுகளில் வலி போன்ற பல் சார்ந்த பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் இப்படித்தான் தரப்படுகிறது. பெற்றோர் இதைத் தவிர்த்துவிட வேண்டும்.

கடைகளில் செய்யப்படும் பீட்சா, பர்கர் போன்றவற்றில் அதிகக் கொழுப்புச்சத்துள்ள சீஸ்தான் உபயோகப்படுத்தப்படும். எனவே, அவற்றையும் தவிர்த்துவிடலாம்.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், பி.சி.ஓ.டி பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமனாக இருப்பவர்கள் (Obesity), இதயப் பிரச்னை உள்ளவர்கள் உணவில் சீஸ் சேர்த்துக்கொள்ளக் கூடாது. இரவில் சீஸ் சாப்பிடுவது செரிமானம் மற்றும் அஜீரணக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.

வெண்ணெய், சீஸ்… இரண்டும் வேறு வேறு

சீஸ் என்றவுடன், பலரும் வெண்ணெயை இத்துடன் சேர்த்துக் குழப்பிக்கொள்வதுண்டு. வெண்ணெய் என்பது பாலைக் கடைந்து தயாரிக்கப்படும் பொருள். இதில், மோர், பால் கொழுப்பு, தண்ணீர் முதலியவற்றின் சத்துகள் இருக்கும். சீஸ் என்பது, உறைந்த தயிரை வடிகட்டிய பிறகு கிடைக்கும் பகுதி. அதில் இருக்கும் நீரின் அளவைப் பொறுத்து, இது வகைப்படுத்தப்படும்.

இன்று பர்கர், பீட்சா, சாண்ட்விச், சாலட் போன்றவற்றில் மட்டுமன்றி, தோசை, பிரெட் போன்றவற்றில்கூட சீஸ் வகைகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். அதே நேரத்தில் அதிகமாக சீஸ் சாப்பிட்டால், உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்துவிடும் என்ற பயமும் பலருக்கு உண்டு. அதையெல்லாம் மீறி, சீஸின் அந்த புளிப்புச்சுவைக்காகவே அதனை உட்கொள்பவர்கள் அதிகம். இப்போதெல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் அதிகக் கொழுப்புச்சத்துள்ள உணவுப் பொருள்களே அதிகம் விற்கப்படுகின்றன. எனவே, அவற்றை உட்கொள்வது ஆபத்து என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். `அந்தக் கொழுப்பு, அசைவ உணவான கோழிக்கறியில் சேர்ந்திருக்கும் கொழுப்பைவிடவும் ஆபத்தானது’ என்றும் சொல்கிறார்கள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சே. எனவே, சரியான அளவு, சரியான வகை சீஸை சரியான வயதில் உட்கொள்ள வேண்டியது அவசியம். குறைந்த கொழுப்புச்சத்துள்ள சீஸ், இதய பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், எலும்பு பாதிப்புகள் போன்ற பல பிரச்னைகளில் இருந்து உடலைக் காக்கும். குறிப்பாக, சீஸில் உள்ள லினோலிக் அமிலம் மற்றும் ஒமேகா 3 அமிலம், புற்றுநோய் பாதிப்பை உருவாக்கும் செல்களைக்கூட எதிர்த்துப் போராடுமாம்.

Leave a Reply