வாசிம் அக்ரம் மீது சரமாரி துப்பாக்கி சூடு. நூலிழையில் உயிர் தப்பினார்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சென்ற கார் மீது நேற்று மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் வாசிம் அக்ரம் நூலிழையில் உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் வாசிம்அக்ரம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற இவர் தற்போது இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பயிற்சி அளிப்பதற்காக தனது வீட்டில் இருந்து தேசிய ஸ்டேடியத்திற்கு தனது காரில் சென்றார். வாகன நெரிசல் அதிகம் உள்ள கராசா என்ற பகுதியில் சென்றபோது, அவரது கார் மீது மற்றொரு கார் திடீரென மோதியது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்ரம் தனது காரை நிறுத்தினார். அப்போது அந்த காரில் இருந்து வந்த மர்மநபர் அக்ரம் கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக துப்பாக்கியின் புல்லட்டுகள் அக்ரம் மீது படவில்லை. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இதுபற்றி அக்ரம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ஸ்டேடியத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
தன் மீதான தாக்குதல் குறித்து அக்ரம் கூறுகையில், “என் கார் மீது துப்பாக்கியால் சுட்டது நிச்சம் ஒரு அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும். அவரது கார் பதிவெண்ணை குறித்து காவல்துறையிடம் கொடுத்துள்ளேன். விசாரணை நடந்து வருகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை” என்று கூறினார்