வாஜ்பாய் அஸ்திக்கு ரஜினி அஞ்சலி செலுத்தாதது ஏன்?
ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் தன் மீது பாஜக முத்திரை குத்தப்பட்டுள்ளதால் அதனை தவிர்க்கவே, நடிகர் ரஜினிகாந்த் பாஜக கட்சியில் இருந்து விலகி இருக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி சென்னை வந்தபோதும் அதற்கு ரஜினி அஞ்சலி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வர உள்ளதாக தனது ரசிகர்களிடம் உறுதிப்பட தெரிவித்தார். அன்றிலிருந்தே அவரது நடவடிக்கைகள் அனைத்தும் ஊடகங்களாலும் பொதுமக்களாலும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்தை பாஜகத்தான் பின்னணியில் இருந்து இயக்குகிறது எனவும், ரஜினியை வைத்து பாஜக தமிழகத்தில் நுழைய பார்க்கிறது எனவும் சமூக ஊடகங்களில் திமுக, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற எதிர்கட்சிகள் எதிர்மறையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவாளர்களும், நண்பர்களும் அவர் மீது பாஜக முத்திரை குத்தப்படுவதைப் பற்றி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, ரஜினிகாந்த் பாஜகவிடமிருந்து சற்று விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், சென்னை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமரும் பாஜக கட்சியின் மூத்த தலைவருமான வாஜ்பாயின் அஸ்தி அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், ரஜினிகாந்த் இதுவரை அஞ்சலி செலுத்த வரவில்லை. வாஜ்பாய் மறைவிற்கு ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் மட்டும் இரங்கல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.