வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டை அழகுபடுத்தலாமா?

வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டை அழகுபடுத்தலாமா?

பொதுவாக இப்போதெல்லாம் வாடகை வீடு நம் பட்ஜெட்டுக்கேற்ற தொகையில் அமைவதில்லை. அப்படியே அமைந்தாலும் அவை பழைய, பழுதுபட்ட வீடு அல்லது வசதிகள் குறைந்த வீடுகளாகத் திகழ்கின்றன. துணிந்து குடியேறிய பிறகு, வீட்டின் அழகு, உட்புறப் பயன்பாடு போன்றவற்றில் குறை இருப்பின், அவற்றை நினைத்து குமைந்து கொண்டே இருக்காமல், சில எளிய முறைகளைப் பயன்படுத்தி அழகுபடுத்திக் கொள்ளலாம். கையிலுள்ள கையிருப்பு சிறிதும் கரையாத வண்ணம் உங்கள் வீட்டைப் புதிய வீடு போல பொலிவுறச் செய்யலாம்.

வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீடுகளில் நிரந்தர மாற்றம் செய்ய அனுமதிப்பதில்லை. ஆனால், சிறுசிறு மாற்றங்கள்- வண்ணம் பூசுவது போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கின்றனர். அவ்வாறு அவர்கள் சம்மதித்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது அதைத்தான். விரும்பும் வண்ணத்தைப் பூசி வீட்டை உங்கள் மனம் கவர்ந்ததாக்க வேண்டியதுதான். சில இடங்களில் உரிமையாளர்களே புது வண்ணம் பூசி வீட்டை அளிக்கின்றனர். அடுத்ததாக காண்போர் கவனத்தைக் கவர்பவை ஜன்னல்கள். அவற்றுக்குப் புதிய திரைச்சீலைகள் இடலாம்.

வீடெங்கும் ஒத்த வண்ணமும் ஒரே டிசைன்களாலான திரைச்சீலைகளும் வீட்டுக்கு அழகான தோற்றம் தரும். வீட்டைக்காலி செய்யும்போது திரைச்சீலைகளைக் கழற்றி எடுத்துச் செல்லும் அனுகூலமும் உண்டு. மூங்கில் திரைச்சீலைகளிட்டால் வெயிலிலிருந்து பாதுகாப்பும் பாரம்பரியத் தோற்றமும் கிடைக்கும். ஜன்னல் ஓரங்களில் அழகிய தொட்டிகள் அமைத்து அவற்றில் இண்டோர் பிளாண்ட்ஸ் அமைத்தாலும் அழகாக இருக்கும்.

சுவரில் ஆணி அடிக்கத் தடை என்பது போன்ற தடைகளைத் தாண்டி வீட்டை அழகாக்க வேண்டும் என்பது மிகப் பெரிய சவால். சில நேரத்தில் பெயர்ந்த சுவர்களும் விரிசல் விட்ட தளமும் நம்மைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்துகின்றன. அவற்றைப் பழுது பார்க்க உரிமையாளர் அனுமதிக்கவில்லையெனில், அவற்றை மறைக்க முயலலாம். கார்பெட் அல்லது வினைல் ஷீட்கள் மூலம் தரையின் குறைகளை மறைக்கலாம். சுவர்களில் அழகிய ஓவியங்கள் அல்லது கண்ணாடிகள் அமைத்து சுவர்களின் குறைகளை மறைக்கலாம். மிகப் பெரிய கண்ணாடிகளை அமைப்பதால் அறைகள் பளிச்சென்று அதிக வெளிச்சத்துடன் பெரியதாகத் தெரியும். நீங்கள் ஒளிப்பட விரும்பி என்றால் அணிவகுத்தாற்போல் பல ஒளிப்படங்களை மாட்டிக் கொள்ளலாம்.

சுவர்களை வால் பேப்பர் கொண்டு மாற்றி அமைக்கலாம். நம் கையைக் கடிக்காத வகையில் குறைந்த விலையில் வால் ஸ்டிக்கர்கள் கிடைக்கின்றன. இந்த ஸ்டிக்கர்கள் சுவரின் குறைகளை மறைப்பதுடன் நமது ரசனையையும் எடுத்தியம்புகின்றன. பறவைகள், மரங்கள், கார்ட்டூன்கள் என நீளும் இவற்றின் பட்டியல் குழந்தைகளின் விருப்பத் தேர்வாகும். வீடு பழையதாக இருந்தால் என்ன?

அறைக்கலன்கள் புதியதாக இருந்தால் வீட்டின் பழைய தோற்றம் மங்கிவிடும். அதனால் புதிய, அழகிய சோபா, சுவர்க்கடிகாரம், டீப்பாய் , கட்டில் போன்றவற்றால் அறைகளை அழகுபடுத்துங்கள். விளக்குகளும் அழகு சேர்ப்பவையே. தொங்கும் காகித விளக்குகூட வீட்டின் அழகை ஒரு படி உயர்த்திவிடும். கொஞ்சம் பணமும் நேரமும் ரசனையும் இருந்தால் எப்படிப்பட்ட வீட்டையும் அழகிய இல்லமாக்கிவிடலாம்.

ஒரு சிறிய யோசனை, செய்யும் மாற்றங்கள் யாவும் குறைந்த விலையில், அதிகச் செலவு பிடிக்காத வகையில் இருக்க வேண்டும். வீடு சொந்தமானது அல்ல, எந்நேரமானாலும் மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சில நேரத்தில் ஒரு வீட்டில் பயன்படுத்திய பொருள், மற்றொரு வீட்டில் பயன்படுத்த ஏதுவாக இல்லாமலிருக்கலாம்.

அது போன்ற சூழலில் அவற்றை அட்டைப்பெட்டியிலிட்டுப் பாதுகாக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பிறிதொரு நேரம் அவை உபயோகமாக இருக்கலாம். வாடகை வீடானாலும் நம்முடைய தனித்தன்மையுடன் அவற்றை அலங்கரித்தால் சொந்த வீடு போலவே கண்களையும் உள்ளத்தையும் கவரும்.

Leave a Reply