வாடிக்கையாளருக்குத் தெரியாமல் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் களவு போனா போலீஸ்ல புகார் கொடுக்கலாம்; ஆனா, நாம பணம் எடுக்காமலேயே நம்ம வங்கிக் கணக்கில இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாக எஸ்.எம்.எஸ் வந்தா எப்படியிருக்கும்? பகீரென்று இருக்குமல்லவா…?
நம்மில் சிலபேருக்கு இப்படி நிகழ்ந்திருக்கலாம். இது எப்படி நடந்திருக்கும் என யோசிப்போம். யாராவது நம்ம பாஸ்வேர்டையோ, பின் நம்பரையோ திருடியிருக்கலாமோ? இருக்காது என்பது நமக்குத் தெரிந்தாலும் வங்கி ஒப்புக்கொள்ள வேண்டுமே! என்ன இது, பகல் கொள்ளையா இருக்கே எனக் கோபம் கோபமாக வரத்தானே செய்யும்? வாடிக்கையாளர் தொடர்பு மையத்துக்கு போன் செய்து, அவர்களுக்கு இதைப் புரிய வைத்து இழப்பீடு கேட்க வேண்டியதை நினைத்தாலே எரிச்சலாக இருக்கும். நள்ளிரவில் கத்தியைக் காட்டிக் கொள்ளை அடிப்பவனுக்கும் இந்த வங்கிக்கும் என்ன வித்தியாசம் எனத் தோன்றும்.
கவலை வேண்டாம்…! உங்களுக்குத் தெரியாமல், உங்கள் அனுமதி இல்லாமல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, திருட்டுத்தனமாகப் பணம் எடுக்கப்பட்டு இருந்தாலோ அல்லது வங்கியின் தொழில்நுட்பக் கோளாறினால் அது நடந்திருந்தாலோ, அதற்கான இழப்பீட்டை அந்த வங்கியே முழுமையாகக் கொடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இப்போது சொல்லியிருக்கிறது.
சொல்லப்போனால், இது சம்பந்தமாக வாடிக்கையாளர், வங்கிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டியதுகூட தேவையில்லை. வங்கியே இந்த இழப்பைச் சரிசெய்ய வேண்டும். அதுவும், இது நடந்த பத்து நாள்களுக்குள் வாடிக்கையாளரின் கணக்கில் இந்தப் பணம் வரவு வைக்கப்பட வேண்டுமாம். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில் இதைப்பற்றி தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது.
இதுதவிர, இதுபோன்ற ஏனைய இழப்புகளைப் பொறுத்தவரை, சம்பவம் நடந்த மூன்று நாள்களுக்குள் வங்கிக்குத் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அப்படித் தெரிவிக்கும்பட்சத்தில், வங்கி முழுமையாக இழப்பீடு கொடுக்க வேண்டும். ஒருவேளை, அதற்குப் பின்னர் கொஞ்சம் தாமதமாகத் தெரிவித்தாலும் கவலையில்லை. என்ன… தொகை கொஞ்சம் குறைவாகக் கிடைக்கும், அவ்வளவுதான்.
பணம் எடுக்கப்பட்டு மூன்று நாள்களுக்குள் நம்மால் தெரிவிக்க முடியவில்லை என வைத்துக்கொள்வோம். அடுத்த நாள் அதாவது, நான்காம் நாளில் இருந்து ஏழு நாள்களுக்குள் வங்கிக்குத் தகவல் தெரிவித்தால், ரூ.25,000 வரை கொடுக்கப்படும். இதிலும்கூட, அடிப்படைச் சேமிப்புக் கணக்குக்கு ரூ.5,000 வரையில் மட்டுமே தரப்படும். சேமிப்புக் கணக்குகள், கிஃப்ட் கார்டு, சிறு குறு நிறுவனங்களின் நடப்புக் கணக்கு, ஓ.டி கணக்கு, ஆண்டுக்குச் சராசரியாக ரூ.25 லட்சம் வரைக்குள் வங்கிக் கணக்கில் இருப்பு வைத்திருக்கக் கூடிய தனிநபர்களின் இதர நடப்புக் கணக்கு, ஓ.டி. கணக்கு, ரூ.5 லட்சம் வரை வரம்பு உள்ள கடன் அட்டை மீதான இழப்புகளுக்கு உச்ச வரம்பு ரூ.10,000 மட்டுமே.
ரூ.5 லட்சத்துக்கு மேல் வரம்புள்ள கடன் அட்டைகள், இதர நடப்புக் கணக்கு ஆகியவற்றைப் பொறுத்த வரை, இந்த உச்ச வரம்பு ரூ.25,000 வரையில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் முடிய வில்லை; பணம் எடுக்கப்பட்டு 7 நாள்களுக்குப் பின்னர் வங்கியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட் டால், அந்தந்த வங்கியின் சட்டதிட்டங்களுக்கேற்ப முடிவெடுக்கப்படும். எனவே, இங்கு முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், களவு நடந்தவுடன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவவளவு சீக்கிரம் வங்கிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதுதான்.
அது எப்படி சாத்தியம் என்றுதானே கேட்கிறீர்கள்?
வங்கிக் கணக்கோடும் நம் கடன் அட்டை யோடும் நம் கைபேசி எண்ணைப் பதிவுசெய்து வைத்திருப்போம் அல்லது வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை நம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும்போதும் அல்லது நம் கடன் அட்டை பயன்படுத்தப்பட்டுப் பணம் செலவாகும்போதும் ஒரு அலர்ட் வரும். நாம் பணம் எடுக்கவில்லை என்றால் உடனே அதைப் பார்த்து, உடனடியாக அதை வங்கியின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டியது அவசியம்.
மின்அஞ்சல் மூலமாகப் பணம் எடுக்கப்படும் போதும் அலர்ட் செய்யும் வசதி உண்டு. அதையும் கவனமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். சரி, ஒருவேளை நாம் வெளிநாடு சென்றிருக்கும்போது பணம் எடுக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது? உங்கள் தொலைபேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருப்பீர்கள். எஸ்.எம்.எஸ் வராமல் போகலாம். இ-மெயிலும் வராது. அப்போது என்னாகும்? இதுவும் அந்தந்த வங்கிகளின் கொள்கைப்படியே முடிவெடுக்கப்படும்.
இது சம்பந்தமான நமது பிரச்னைகளை, நாம் வங்கிகளுக்குத் தெரிவிக்க முயல்வது வீண் வேலை. எங்கு புகார் கொடுப்பது, அதற்கான தொலைபேசி எண் என்ன, முகவரி என்ன, மின் அஞ்சல் முகவரி என்ன எனக் கண்டுபிடிப்பதற்குள் அலுத்துப் போய் விட்டுவிடுவோம் நாம்.
அதுதானே வேண்டும் அவர்களுக்கும். ஆனால், இனிமேல், இதற்கென 24 மணி நேர டோல் ஃப்ரீ போன் நம்பர், இமெயில், போன், எஸ்.எம்.எஸ் போன்ற வசதிகளைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இது சம்பந்தமாக வங்கிகள் நமக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ். அல்லது இ-மெயிலிலேயே நாம் திரும்ப பதில் அளிக்கும் வசதியும் இனி இருக்க வேண்டும்.
ஏனெனில், பெரும்பாலான சமயங்களில் நமக்கு போன் செய்து அடிப்படை தகவல்களை கேட்டே நம்மைக் கொன்றுவிடுவார்கள். அவர்கள் அனுப்பும் மெயிலிலோ அல்லது குறிஞ்செய்திலேயே நாம் திரும்பப் பதில் அளிக்கும் வசதி இருக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி இப்போது. இது மிக எளிதானது. வங்கிகளின் பொறுப்பற்ற தன்மையை இது ஓரளவுக்காவது மாற்றும் என எதிர்பார்க்கலாம்.
இந்த நடவடிக்கை மூலமாக மின்னணுப் பரிவர்த்தனையை மேலும் பாதுகாப்பானதாக ஆக்க முயற்சி செய்கிறது ரிசர்வ் வங்கி. ஆனாலும், நம்மைப் பொறுத்தவரை, முடிந்த அளவுக்கு நம்மைத் தற்காத்துக்கொள்வது அவசியம்.
எனவே, இதுவரை எஸ்.எம்.எஸ் அலர்ட்டுக்குப் பதிவு செய்துகொள்ளாதவர்கள் இனியாவது செய்வது அவசியம். அதேமாதிரி நம் மின்அஞ்சல் முகவரியையும் பதிவு செய்து வைத்துக்கொள்வதும் அவசியம்.ஒவ்வொருமுறை எஸ்.எம்.எஸ் அல்லது மின்னஞ்சல் வரும்போது தவறாமல் படித்துச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
பாஸ்வேர்டு மற்றும் கிரெடிட் கார்டு பின் நம்பர்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். யாரோ கேட்டார்கள், பதற்றத்தில் சொல்லி விட்டேன் என்று சொல்லிவிட்டு, பிற்பாடு பணம் போச்சே என்று பரிதவிக்காமல் இருப்பது நம் கையில்தான் இருக்கிறது!
நாம் உஷாராக இருந்தால் நம்மை யாரும் ஏமாற்ற முடியாது
Thanks to Vikatan.com