வானத்துடன் உரையாடிய கட்டிட நிபுணர்

வானத்துடன் உரையாடிய கட்டிட நிபுணர்

8நவீன இந்தியாவின் மகத்தான கட்டிடவியல் நிபுணர் சார்லஸ் கொரிய ஜூன் 16-ம் தேதி மும்பையில் காலமாகிவிட்டார். இந்த மரணத்தால், நகர்ப்புறத் திட்டமிடலில் மேதையாக இருந்த ஒருவரை நம் நாடு இழந்துள்ளது.

இருபது லட்சம் பேருக்கு வீடுகளை ஒதுக்கி, உலகிலேயே பெரிய நகரங்களில் ஒன்றான நவி மும்பையின் நிர்மாண கர்த்தா இவர்தான். நகர்ப் புற மேம்பாடு மற்றும் குறைந்த செலவில் வீட்டுக் கட்டுமானம் தொடர்பாக இவர் உருவாக்கிய திட்டங்களைச் சரியாக அமல்படுத்தினால் இந்தியாவில் ஏழைகள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் மட்டும் அல்ல மூன்றாம் உலக நாடுகளின் ஏழைக் குடியிருப்புகளிலேயே பெரும் ஏற்றத்தை உருவாக்கியிருக்க முடியும். இதற்காகத்தான் 1984-ல் மும்பையில் நகர்ப்புற வடிவமைப்பு ஆய்வு நிறுவனத்தை உருவாக்கினார்.

இவரிடம் இருந்த சுதந்திர உணர்வு, வளம்குன்றா வளர்ச்சி மீதான ஈடுபாடு, இந்தியக் கலாசாரத்தில் வேரூன்றிய தன்மை ஆகிய பண்புகள், சுதந்திர இந்தியாவில் இவர் வடிவமைத்த கட்டிடங்களை வேறுபடுத்திக் காட்டின.

இவர் தனது வாழ்நாள் முழுவதும் கண்ணாடிகள் நிறைந்த கட்டிடத்தை வடிவமைப்பதில்லை என்று உறுதிபூண்டிருந்தார். வானுக்கும் காற்றுக்கும் இடம் தரும் கட்டிட வெளிகளை மிகவும் விரும்பினார். ஒளிக்கும் காற்றுக்கும், பருவநிலைக்கும் ஏற்ற கட்டிடங்களையே அவர் கட்டினார்.

குறைந்த செலவில் எளிய வீடுகள், பெரிய கல்வி நிறுவனங்கள், அதி நவீன ஆய்வு நிறுவனங்கள், தொழில் நகரங்கள் முதல் கலாசார மையங்கள் வரை இவர் அளித்த பங்களிப்புகள் இந்தியா முழுக்க இவர் பெயர் சொல்பவை.

அகமதாபாத்தில் உள்ள புகழ்பெற்ற காந்தி ஸ்மாரக், கோவாவின் கலாகேந்திரா, புதுடெல்லியின் தேசிய கைவினை அருங்காட்சியகம், போபாலின் பாரத் பவன், ஜெய்பூரில் உள்ள உள்ள ஜவகர் கலா கேந்திரா ஆகியவை இவரது கட்டிடத் திறனுக்கும், கலையுணர்வுக்கும் எடுத்துக்காட்டுகள்.

சமீப ஆண்டுகளாக, நீர் மறுசுழற்சி, புதுப்பிக்கத்தகுந்த எரிபொருள்ஆற்றல், கிராமப்புற வீடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.

கொரிய வடிவமைத்த கட்டிடங்கள் தம்மைச் சுற்றியுள்ள உலகோடு தொடர்பு கொண்டிருப்பவை. அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கட்டப்படுபவை.

அந்த இடத்தின் பருவநிலைக்கும் அங்குள்ள வளங்களுக்கும் ஏற்றவை. அகமதாபாத்தில் அவர் குறைந்த வருவாய் பிரிவினருக்காகக் கட்டிய ட்யூப் ஹவுஸ் வீட்டுக்குக் குளிர்சாதனப் பெட்டிகள் தேவையில்லை. அந்த வீடுகளின் வடிவமே குளிர்ந்த காற்றை உள்ளிழுத்து காற்றோட்டத்திற்கு வழிவகுப்பதாய் இருந்தது.

நிழல்கள், ஈரக்காற்று, உஷ்ணத்தை உள்வாங்கும் தன்மை, குளிரைத் தக்கவைக்கும் தன்மை, சூரிய ஒளியின் தடத்தைத் தொடர்வதற்கு ஏற்றாற்போல கொரிய தனது கட்டிடங்களை வடிவமைத்தார்.

இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்து, ஜப்பான், மொரீஷியஸ், போர்சுகல், கனடா போன்ற பல நாடுகளிலும் முக்கியமான கட்டிடங்களை வடிவமைத்துள்ளார்.

கத்தார் தோஹா நகரில் இஸ்லாம் கலைகளுக்கான மையக் கட்டிடத்தை வடிவமைத்துள்ளார். ஈச்ச மரங்களுக்கு இடையே உள்ள அந்தக் கட்டிடக் காட்சி முழுவதும் அதன் அருகே அமைக்கப்பட்டுள்ள செயற்கைக் குளத்திலும் விழுந்து பிரதிபலிப்பதைப் பார்க்கும் அதுவும் ஒரு ஓவியம் போலவே விரியும்.

அருங்காட்சியங்கள், வீட்டுத் திட்டங்கள், நகரத் திட்டங்கள், வியாபாரத் தலங்கள் போன்ற பல தளங்களில் இவர் பங்களித்துள்ளார். சென்னையில் உள்ள சுந்தரம் ஃபைனான்ஸ் தலைமையகம், எம்ஆர்எஃப் தலைமையகம் ஆகிய கட்டிடங்கள் கொரிய வடிவமைத்த பெருமைகொண்டது.

சார்லஸ் கொரிய நிஜாம்கள் ஆட்சி செய்த செகந்திராபாத்தில், 1930-ல் பிறந்தவர். மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தபின்னர் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் பயின்றார்.

கட்டிடவியல் வடிவமைப்பு சார்ந்து இவர் செய்த பெரிய பணி, அகமதாபாத்தில் உள்ள சமர்மதி ஆஸ்ரமத்தில் உள்ளே காந்தி ஸ்மாரக் சங்கராலாயா என்ற பெயரில் மகாத்மா காந்தி நினைவு அருங்காட்சியத்தை உருவாக்கியதுதான்.

பாரம்பரியப் பொருட்களைக் கொண்டு நவீனக் கட்டுமானத் தொழில்நுட்பத்தையும் சேர்த்து கட்டிய அருங்காட்சியகம் அது. எல்லாப் புறங்களிலும் திறந்திருக்கும் அந்த அருங்காட்சியகம் இன்றும் அங்கே வரும் பார்வையாளர்களுக்கு ஆன்மிக ஆற்றலைத் தர வல்லதாக உள்ளது.

Leave a Reply