வான் மண் பெண் 10: இமயமலையின் நாயகி!

வான் மண் பெண் 10: இமயமலையின் நாயகி!

பலவிதமான உயிர்கள் நிறைந்த பகுதியைச் சுற்றுச்சூழலியலாளர்கள் ‘உயிர்ப்பன்மயப் பகுதிகள்’ என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

இப்படியான பகுதிகள் உலகில் 35 இடங்களில் உள்ளன. இந்தியாவில் இமயமலை, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகியவற்றில் ‘உயிர்ப்பன்மைய பகுதிகள்’ உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகள், மரங்கள் அடர்ந்த காடுகளைக் கொண்ட பகுதி. தொடர் விழிப்புணர்வால் அந்தப் பகுதி பெருமளவில் பாதுகாக்கப்பட்டுவருகிறது. ஆனால், இமயமலையின் நிலை வேறு. மரங்களுடன் பனிப்பாறைகளும் நிறைந்திருக்கும் பகுதி இது. இங்கு ஓரளவு விழிப்புணர்வு இருந்தாலும், புவி வெப்பமயமாதல் காரணமாகப் பனிப்பாறைகள் தொடர்ந்து குறைந்துவருகின்றன. பருவநிலை மாற்ற பாதிப்பின் முதன்மையான சாட்சியமாக இமயமலை விளங்குகிறது.

பனிப்பாறைகள் அதிக அளவில் உருகுவதற்கு முக்கியக் காரணம் அங்கு மேற்கொள்ளப்படும் வன அழிப்புதான். அதிக அளவில் மரங்களை வெட்டுதல், பணப் பயிர்களைச் சாகுபடி செய்தல் போன்றவற்றால் அங்கு மண் அரிப்பில் தொடங்கி, வெள்ளம் ஏற்படுவது வரை பல பிரச்சினைகளை இமயமலைப் பகுதியில் உள்ள மாநிலங்கள் சந்திக்கின்றன. இந்தக் காடு அழிப்புக் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் 1950-களிலேயே ஒரு பெண் தன் கட்டுரை மூலம் எச்சரித்தார். வெளிநாட்டில் பிறந்திருந்தாலும், தன் வாழ்க்கையை இந்தியாவில் அமைத்துக்கொண்ட அந்த மகத்தான பெண்மணியைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோமா?

பீத்தோவனின் ரசிகை

1892-ம் ஆண்டு நவம்பர் 22 அன்று இங்கிலாந்தில் பிறந்தார் மதலின் ஸ்லேட். அவருடைய தந்தை எட்மண்ட் ஸ்லேட் இங்கிலாந்துக் கடற்படையில் அதிகாரியாக இருந்தவர். மதலின் தன்னுடைய பால்ய காலம் முழுவதையும் தன் தாய் வழித் தாத்தாவின் வீட்டில்தான் கழித்தார். காரணம், அந்த வீட்டைச் சுற்றிப் பலவிதமான தாவரங்களைக் கொண்ட தோட்டம் இருந்தது. அங்கு நிறையப் பறவைகளும் விலங்குகளும் இருந்தன. அவற்றைப் பார்த்து ரசிப்பதும் அவற்றுடன் விளையாடுவதுமாகச் சின்ன வயதிலேயே அவர் இயற்கையின் பால் ஈர்க்கப்பட்டார்.

இயற்கை தவிர, இசை மீதும் அவருக்கு நாட்டம் இருந்தது. அதிலும் பீத்தோவனின் இசைக்கு அவர் தீவிர ரசிகை. அந்த இசை ஆர்வத்தின் காரணமாக அவரின் இளமைக் காலத்தில் இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகச் சில காலம் பணியாற்றினார்.

காந்தியின் மகள்

பீத்தோவன் மீதிருந்த ஆர்வம் காரணமாக அவரைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தார் மதலின். அப்போது ரோமன் ரோலந்த் எனும் எழுத்தாளர் பீத்தோவனைப் பற்றி எழுதிய புத்தகங்களை வாசித்தார். அந்தப் புத்தகங்களால் ஈர்க்கப்பட்ட மதலின், ரோமன் ரோலந்தைச் சந்திக்க விரும்பினார். இருவரும் சந்தித்தனர். அந்தச் சமயத்தில், காந்தியைப் பற்றி மதலினிடம் ரோமன் கூறினார். தொடர்ந்து காந்தியைக் குறித்து ரோலந்த் எழுதிய புத்தகத்தையும் மதலின் படித்தார். காந்தியின் பெருமைகளை அறிந்த மதலின், காந்தியுடன் இணைந்து பணியாற்ற விரும்பினார். தன் விருப்பத்தைக் கடிதமாக எழுதி காந்திக்கு அனுப்பினார். காந்தியும் சம்மதித்தார்.

அதைத் தொடர்ந்து மதலின் இந்தியாவுக்கு வந்தார். காந்தியைச் சந்தித்தார். அவரின் ஆசிரமத்தில் தங்கிப் பணியாற்றினார். இந்தச் சமயத்தில் தன் இசையார்வத்தை எல்லாம் பக்தி வழியில் செலுத்தத் தொடங்கினார் மதலின். அதன் காரணமாக ஒரு கட்டத்தில் தனது பெயரை மீரா பென் என்று மாற்றிக் கொண்டார். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியுடன் இணைந்து ஈடுபட்ட மீரா பென், மூன்று முறை சிறைக்குச் சென்றிருக்கிறார்.

1942 முதல் 1944-ம் ஆண்டு வரை ஆகா கான் அரண்மனையில் காந்தியுடன் சிறை வைக்கப்பட்டார் மீரா பென். சிறைவாசத்துக்குப் பிறகு இமயமலைப் பகுதியில் (இன்றைய உத்தர்கண்ட்) கிசாான் ஆசிரமத்தை நிறுவி வாழ்ந்துவந்தார். பின்னர், 1959-ம் ஆண்டு இங்கிலாந்து திரும்பிய அவர், அடுத்த ஆண்டே ஆஸ்திரியாவுக்கு இடம்பெயர்ந்தார். வியென்னாவில் சுமார் 22 ஆண்டுக் காலம் வாழ்ந்த அவர், 1982-ல் காலமானார். அதற்கு முந்தைய ஆண்டு இந்திய அரசு அவருக்கு ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கிச் சிறப்பித்தது. இவரை ‘இமயமலையின் நாயகி’ என்கிறார் சுற்றுச்சூழல் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா.

முதல் எச்சரிக்கை

காந்தியத்தின் பாதையில் சென்ற மீரா, சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டுவந்தார். உத்தர்கண்ட்டில் பசுலோக் ஆசிரமத்தை நிறுவிக் கால்நடை வளர்ப்பு, நிலமற்ற ஏழைகளுக்குப் பூமி தானத்தின் மூலம் நிலங்களைப் பெற்றுத் தருவது, மாற்று விவசாயம் போன்ற பணிகளை மேற்கொண்டுவந்தார். 1949-ம் ஆண்டு அங்கு வெள்ளம் ஏற்பட்டு ஆசிரமம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குதிரை சவாரி செய்து, புது ஆசிரமத்துக்கான இடத்தைத் தேடியலைந்தார் மீரா.

அந்தச் சமயத்தில் கங்கை நதி தோன்றும் இடம் உட்பட பல இடங்களில் சுற்றித் திரிந்தார். அப்போதுதான் காட்டழிப்பும் மாறும் நிலப் பயன்பாடுமே அந்தப் பகுதிகளில் அவ்வப்போது வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணம் என்பதை அறிந்தார். அதைத் தொடர்ந்து 1950-ம் ஆண்டு ஜூன் 5 அன்று, ‘தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ இதழில் ‘சம்திங் இஸ் ராங் இன் தி ஹிமாலயா’ என்ற கட்டுரையை எழுதினார் மீரா பென். இதன் மூலம் இமயமலைப் பகுதியில் காடழிப்பால் ஏற்படவுள்ள அபாயங்களைப் பற்றி எச்சரித்த முதல் நபராக மீரா அறியப்படுகிறார்.

அந்தக் கட்டுரையில் இப்படி எழுதியிருக்கிறார் மீரா: “ஒவ்வொரு வருடமும் வட இந்தியாவில் ஏற்படும் வெள்ளம் மோசமாகி வருகிறது. இந்த ஆண்டு மிகவும் மோசம். இது இமயமலையில் ஏதோ தவறு நேர்ந்திருப்பதைக் காட்டுகிறது. வனத்துடன் தொடர்புடைய ஏதோ ஒன்று அந்தத் தவறுக்குக் காரணமாக இருக்கிறது. பஞ்ச் ஓக் மரங்களுக்குப் பதிலாக சிர் பைன் மரங்களை வளர்ப்பதுதான் இந்த வெள்ளத்துக்குக் காரணமென்று அறிகிறேன்.

பஞ்ச் மரத்தின் இலைகள் உதிர்ந்து நிலத்தில் சேர்ந்து, அவை மழை நீரைச் சேகரித்துப் பூமிக்குள் அனுப்புகின்றன. தவிர பஞ்ச் ஓக் மரங்கள் உள்ளூர் மக்களுக்கு விறகுகளையும் தீவனத்தையும் தருகின்றன. ஆனால், சிர் பைன் மரங்கள் மழை நீரைச் சேகரிக்காது. இவை அருகிலிருக்கும் இதர தாவரங்களையும் வளர விடாது. அவை தொழிற்சாலைகளுக்குத் தேவையான பிசினை வழங்குகின்றன. அதனால் வனத்துறை இந்த மரங்களை இங்கு அதிகமாக வளர்க்கிறது. பஞ்ச் ஓக் மரங்களை அழிப்பது, இதயத்தை வெட்டி மரணத்தை ஏற்படுத்துவதற்கு ஒப்பானது”.

இந்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு மீராவின் மாணவராகச் சேர்ந்தார் சுந்தர்லால் பகுகுணா. இவர்தான் பிற்காலத்தில் மரங்களை வெட்டுவதைத் தடுக்கும் ‘சிப்கோ’ இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியவர். மேற்கண்ட காரணத்தையொட்டித்தான் ‘சிப்கோ’ இயக்கத்தின் தேவையும் உருவானது என்று கருதப்படுகிறது. மீரா பென் விடுத்த அந்த எச்சரிக்கையை அரசு மதிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அதற்கு 2013-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளமே சாட்சி!

Leave a Reply