வாராக் கடனை ஒழித்துக் கட்ட என்ன வழி?
ஏறக்குறைய 9,000 கோடி ரூபாயை திரும்பத் தராமலே விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை பூதாகரமாக வெடித்திருக்கிறது. பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் மட்டுமே 3.61 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, வங்கிகளிடம் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்பத் தராதவர்களின் (Wilful Defaulters) எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. 2002-ம் ஆண்டில் ரூ.6,291 கோடியாக இருந்த இந்த வகைக் கடன் கடந்த 13 ஆண்டுகளில் ரூ.56,521 கோடியாக உயர்ந்திருக்கிறது.
வங்கிகளுக்கு கொஞ்சம்கூட வாராக் கடன் இருக்கக் கூடாது என்பது யதார்த்தத்துக்கு எதிரான எதிர்பார்ப்பு. நூறில் ஓரிருவருக்கு வாங்கிய கடனை திரும்பத் தரமுடியாத நிலை ஏற்படுவது இயற்கையே. ஆனால், இன்றைக்கு வங்கிகளின் வாராக் கடனைப் பார்த்தால், இது இயற்கையாக வந்ததல்ல என்பது தெளிவாகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக வங்கிகளின் வாராக் கடன் கணக்கு வழக்கில்லாமல் உயர்ந்ததற்கு அரசியல்வாதிகளின் தலையீடுதான் முக்கிய காரணம். அதிலும் குறிப்பாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஐந்தாண்டு காலத்தில் (2009-2014) வங்கிகள் யாருக்குக் கடன் தரவேண்டும் என்பதை முடிவு செய்வதில் அரசியல் தலையீடு அதிகமாகவே இருந்தது. ‘இன்னாருடன் வங்கிக்கு சென்றால், அவர் உங்களுக்கு எவ்வளவு கடன் வாங்கித் தருவார். அதில் அவருக்கு இவ்வளவு தந்துவிடுங்கள்’’ என்கிற ரீதியில் சிலர் பேசித் திரிந்ததெல்லாம் இந்த சமயத்தில்தான்.
இந்த சூழ்நிலையைப் புரிந்துகொண்ட சில வங்கி உயரதிகாரிகள், சில சதவிகித பணத்தை லஞ்சமாக வாங்கி, பல நூறு கோடிகளை கொட்டிக் கொடுத்தார்கள்.
அன்று தொடங்கிய இந்த வங்கிக் கொள்ளை இன்றும் நின்றபாடில்லை. கடந்த பத்தாண்டுகளில் இந்தப் பிரச்னை வேகமாக அதிகரித்து வருவதைத் தடுக்கும் முக்கிய நடவடிக்கைகள் எதையும் மத்திய அரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் எடுக்கவில்லை. ஆரம்பத்திலேயே இந்த பிரச்னையை தீவிரமாகக் கையாண்டிருந்தால், வாராக் கடன் என்கிற கள்ளிச் செடி இன்றைக்கு ஆலமரம் போல வளர்ந்திருக்காது.
காலம் இன்னும் கடந்துவிடவில்லை. வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாமல் இருப்பவர்களை அழைத்து, அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள சொத்துக்களை கைப்பற்றி, உடனடியாக விற்க வேண்டும். இவர்களுக்கு மேற்கொண்டு எந்த வங்கியிலும் கடன் தரக்கூடாது. லஞ்சம் வாங்கி கடன் தரும் வங்கி அதிகாரிகளுக்கு உடனே சிறை தண்டனை அளிக்க வேண்டும். வாராக் கடனுக்கு எதிராக சட்டங்கள் தீவிரமாக்கப்படாவிட்டால், இந்தியா தீவிர பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டி வரும்!