வாராக் கடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எஸ்ஸார் ஸ்டீல் விற்பனை மீதான இடைக்கால தடை நீக்கம்

வாராக் கடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எஸ்ஸார் ஸ்டீல் விற்பனை மீதான இடைக்கால தடை நீக்கம்

எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை விற்பது தொடர்பான நடவடிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை குஜராத் உயர் நீதிமன்றம் நேற்று விலக்கியது. கடனைத் திருப்பி செலுத்தாத எஸ்ஸார் ஸ்டீல் நிறுவன சொத்துகளை விற்பதற்காக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மேற்கொண்ட நடவடிக்கை தொடர வழி ஏற்பட்டுள்ளது.

எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் உள்ளிட்ட 12 நிறுவனங்கள் ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகையை வங்கிகளுக்கு திரும்ப செலுத்தவில்ல.இந்நிறுவனங்களின் சொத்துகளைக் கையகப்படுத்தி, அவற்றை விற்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கடந்த ஜூன் 13-ம் தேதி ரிசர்வ் வங்கி கடன் கொடுத்த வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திவால் மசோதா சட்டத்தின்படி வாராக் கடனை வசூலிக்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்க வங்கிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

ரிசர்வ் வங்கி உத்தரவுக்கு தடை விதிக்குமாறு எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 4-ம் தேதி மனுத் தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிபதி, அடுத்த உத்தரவு வரும்வரை எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை விற்கும் நடவடிக்கையை எடுக்கக் கூடாது என தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஜி. ஷா, இனிமேலும் தடையை நீட்டிக்க முடியாது என்றும் வங்கிகள் விற்பனை நடவடிக்கையை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டார். வங்கிகளின் மொத்த வாராக் கடனில் தற்போது திவால் மசோதா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 12 நிறுவனங்கள் திரும்ப செலுத்த வேண்டிய கடன் தொகை 25 சதவீதமாக உள்ளது.

Leave a Reply