வாழைப்பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லதல்ல. வாழைப்பழத்தில் இருக்கும் சர்க்கரை உடலுக்கு உடனடி ஆற்றல் கொடுக்கக்கூடியது.
அதில் அமிலத்தன்மையும் இருப்பதால் குடல் இயக்கமும் பாதிக்கப்படும். சர்க்கரையும், அமிலத்தன்மையும் இணைந்து குடலுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்திவிடும். அதனால் காலை வேளையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல.
ஏதேனும் ஒரு உணவை சாப்பிட்ட பிறகு வேண்டுமானால் வாழைப்பழம் சாப்பிடலாம். வெறுமன வாழைப்பழம் சாப்பிடாமல் ஆப்பிள் போன்ற மற்ற பழங்களுடன் கலந்து சாப்பிடுவது சிறப்பானது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவு உள்ளது. இயற்கையாகவே அமிலங்களும் உள்ளடங்கி இருக்கிறது. பிற பழங்களுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடும்போது அதில் இருக்கும் அமிலங்களின் வீரியம் குறையும்.
வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடும்போது, அதில் இருக்கும் மக்னீசியம், ரத்தத்தில் கலந்துவிடும். இதனால் ரத்தத்தில் மக்னீசியத்தின் அளவு அதிகரித்துவிடும். அதன் காரணமாக கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு ரத்தத்தில் சமநிலையில் இருக்காது. அதன் தாக்கம் இதயத்தில் எதிரொலிக்கும். இதய ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துவிடும்.
ஆயுர்வேதத்தின்படியும் வெறும் வயிற்றில் வாழைப்பழம் மட்டுமின்றி எந்த பழத்தையும் சாப்பிடுவது சிறந்ததல்ல. மேலும் பழங்கள் விளைவிப்பதற்கு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை பழங்களில் படிந்திருக்கும். அப்படி இருக்கும்போது வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு உகந்ததல்ல
அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் உடலில் படிந்து நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும். ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்களை கொண்டுள்ளன. அவை உடலுக்கு நன்மை தந்தாலும், எந்த நேரத்தில் எப்பொழுது எவற்றுடன் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமானது. பழங்களை சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுவதன் மூலம் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறலாம். ஆரோக்கியத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.