வாழ்வைச் செழிக்கவைக்கும் சென்னிமலை ஆண்டவர்!
தன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு, பொருள் செல்வத்தோடு ஞானச் செல்வத்தையும் அருளும் வகையில், ஞான தண்டாயு தத்தை தன் வலத் திருக்கையில் ஏந்தி, இடத் திருக்கரத்தை இடையில் பொருத்தி, பேரொளியும், பெருங் கருணையுமாக அழகு தரிசனம் தருகிறார் முருகப்பெருமான். மலைகளில் தலைமையானது என்று பொருள் தரும் சென்னி மலையில்தான் அழகு முருகன் இப்படி அற்புதக் காட்சி தருகிறார்.
ஈரோட்டில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் சுமார் 28 கி.மீ தொலைவில் உள்ளது சென்னிமலை.
புராணக் காலத்தில் அனந்தன் என்ற நாக ராஜனுக்கும் வாயு தேவனுக்கும் இடையில் ஒரு பலப்பரீட்சை நடந்தது. அனந்தன் மகாமேரு பர்வதத்தை உறுதியாகச் சுற்றிப் பிடித்துக்கொண்டான். அனந்தனின் பிடியிலிருந்து மேருமலையை விடுவிக்க வேண்டி, வாயுதேவன் எதிர்த்துத் தாக்கினார். அவ்வளவில் மேருமலையின் சிகரப் பகுதி முறிந்து, பறந்து சென்று பூந்துறை நாட்டில் விழுந்தது. அந்தச் சிகரப் பகுதிதான் சிகரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி என்றெல்லாம் அழைக்கப்பட்டு, தற்போது சென்னிமலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த மலையில்தான் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,749 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது முருகப்பெருமான் அருளும் திருக்கோயில். இந்த ஊருக்கு மற்றுமொரு வரலாற்றுப் பெருமையும் இருக்கிறது. அது தமிழ்நாட்டின் மிக முக்கிய சுதந்திரப் போராட்டத் தியாகியான திருப்பூர் குமரன் பிறந்த ஊர் என்பதுதான்.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன், சிறந்த முருகப்பக்தரான சிவாலயச் சோழன் என்ற மன்னருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்குவதற்காக, முருகப்பெருமானே நேரில் வந்திருந்து, தன்னைத்தானே பூஜித்து, மன்னனின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கியதாக ஒரு நம்பிக்கை காலம்காலமாகப் பக்தர்களிடையே நிலவுகிறது.
அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக இல்லாமல், பக்தர்கள் எளிதில் ஏறிச் செல்ல வசதியாக 1,320 படிக்கட்டுகள் அமையப் பெற்றிருக்கின்றன. அடிவாரத்தில் இருந்து சில படிகள் ஏறியதுமே கடம்பவனேஸ்வரர், கந்தர், இடும்பன் ஆகியோரின் சந்நிதிகளை ஒரே வரிசையில் தரிசிக்கலாம். பின்னர் தொடர்ந்து வள்ளியம்மன் பாதம் என்ற மண்டபத்தைக் கடந்து மேலே சென்றால், `முத்துக்குமார சாவான்’ என்னும் மலைக் காவலர் சந்நிதி அமைந்திருக்கிறது. அதற்கடுத்ததாக வரும் ஆற்றுமலை விநாயகர் சந்நிதியையும் தரிசித்துவிட்டு, மேலே சென்றால், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி எழுந்தருளியுள்ள திருக்கோயிலை அடையலாம். திருக்கோயிலின் தெற்கு பிராகாரத்தில் மார்க்கண்டேஸ்வரர், இமயவள்ளி சந்நிதியும், தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதியும், வடக்கில் காசி விசுவநாதர், விசாலாட்சி சந்நிதியும் அமைந்திருக்க, இவர்களுக்கு நடுவில் நாயகனாய் அருட்காட்சி தருகிறார் முருகப்பெருமான்.
உலகம் முழுவதும் முருக பக்தர்களால் அனுதினமும் பக்திப் பூர்வமாகப் பாராயணம் செய்யும் கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய ஸ்ரீபாலன் தேவராயசுவாமிகள் இந்தத் திருக்கோயிலுக்கு அருகில் உள்ள மடவளாகம் என்னும் பழைமை யான ஊரைச் சேர்ந்தவர் என்றும், கந்தசஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய சென்னிமலை திருக்கோயில் தான் உகந்த இடமென்று முருகப் பெருமானின் அருளாணையால் உணர்ந்து, இந்தத் திருக்கோயிலில்தான் கந்தசஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ததாகவும் ஒரு செவிவழிச் செய்தி நிலவுகிறது.
இந்தக் கோயிலில், ஞான தண்டாயுதபாணியாக முருகப் பெருமான் திருக்காட்சி தந்தாலும், இரண்டு தேவியரும் தனிச் சந்நிதியில் அருள்கிறார்கள். மூலவர் ஞான தண்டாயுதபாணி சந்நிதிக்குப் பின்புறம் இருக்கும் படிக்கட்டுகளின் வழியாக மேலே சென்றால், வள்ளி, தெய்வானை ஆகியோரின் சந்நிதிகளைத் தரிசிக்கலாம். இருவரும் அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயர்களுடன் சென்னிமலையில் தவம் இருந்து முருகப் பெருமானை மணந்துகொண்டதாக ஐதீகம். இருவரின் திருமேனிகளும் பிரபையுடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்டிருப்பது சிற்பக்கலையின் தனிச்சிறப்பு.
தினமும் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற் காகவும், நைவேத்தியம் தயாரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் தீர்த்தம் மலையடிவாரத்தில் இருந்துதான் கொண்டு வர வேண்டும். இதற்காகவே இரண்டு காளைகள் பராமரிக்கப்படுகின்றன. தினமும் இந்தக் காளைகள் மூலம்தான் தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது.
சென்னிமலை முருகப்பெருமானைத் தொடர்ந்து வழிபட்டுவரும் பக்தர்கள், தங்களின் குடும்பத்தில் நடைபெறும் எந்த ஒரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், கோயிலுக்கு வந்து மூலவருக்கு அர்ச்சனை செய்து, முருகப் பெருமானின் சிரசுப்பூ உத்தரவு கிடைத்த பிறகே முடிவு செய்கிறார்கள். திருமணமான தம்பதியர் சந்தான பாக்கியம் வேண்டி, மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும், தீர்க்கசுமங்கலியாக இருப்பதற்குச் சந்நிதியின் முன்பு நின்று மாங்கல்யச் சரடு கட்டிக்கொள்வதும் வழக்கமாக இருக்கிறது. அதேபோல் இந்தக் கோயிலில் அமைந்திருக்கும் புளியமரத்தில் `சந்தானகரணி’ என்னும் ஸித்திப் பொருள் இருப்பதாகவும், அந்த மரத்தினடியில் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள், கோயிலுக்கு வந்து முருகப்பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம் நீங்கிவிடும் என்பதும் பக்தர்களது நம்பிக்கை.
இந்தக் கோயிலுக்கு அருகில், ஸ்ரீபிண்ணாக்குச் சித்தர் குகை அமைந்துள்ளது. நவகிரகங்களில் சுக்கிரனைப் பிரதிபலிக்கும் இவரை, வெள்ளிக் கிழமைகளில் தொடர்ந்து வழிபட்டால், சுக்கிர தோஷம் விலகும் என்கிறார்கள் பக்தர்கள். இங்கு மாதம்தோறும் உத்திரத்தன்று `ஸ்ரீமஹா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவியின் சென்னிமலை ஸ்ரீபிண்ணாக்கு சித்தர் அன்னதான அறக்கட்டளை’ சார்பாக விசேஷ அபிஷேக ஆராதனையும் அன்னதானமும் நடைபெற்று வருகின்றன.
வரும் வைகாசி விசாகத் திருநாளில், சென்னிமலைக்குச் சென்று அழகன் முருகனைத் தரிசிப்பதோடு, சித்தர்பெருமானின் திருவருளையும் பெற்று வாருங்களேன்.