விஜயபாஸ்கர் ரெய்டில் சிக்கிய எடப்பாடி பழனிச்சாமி. விஸ்வரூபம் எடுக்கும் ரூ.89 கோடி விவகாரம்
ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்புடன் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் ஆகியோர்களின் பெயர் அடங்கிய முக்கிய ஆவணம் ஒன்று சிக்கியுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர், நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் ஒருசில முக்கிய நபர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். விஜய பாஸ்கரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களின் வீடுகள், அலுவலகங்களும் இந்த ரெய்டில் தப்பவில்லை.
இந்நிலையில் ரெய்டு முடிந்தவுடன் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறிய வருமான வரித்துறை அதிகாரிகள் அதில் ஒரு முக்கிய ஆவணம் ஒன்றை பத்திரிகைகளுக்கு அளித்துள்ளனர். அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்துறை அமைச்சர் வேலுமணி, நிதியமைச்சர் ஜெயக்குமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் தொடர்பு வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது.
ஒவ்வொருவரின் பெயர்கள் அவர்கள் கவர வேண்டிய ஓட்டுகளின் எண்ணிக்கை, அதற்காகச் செலவிட வேண்டிய தொகையும், அவர்களிடம் வழங்கப்பட்ட பணம் எவ்வளவு என்பது பற்றி அந்த ஆவணத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணம் தமிழக அரசியலில் பெரும் சுனாமியை ஏற்படுத்தி வருகிறது. ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறையீட்டில் முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சரின் ஆட்களே ஈடுபட்டுள்ளதால் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.