விஜய்மல்லையா-அருண்ஜெட்லி சந்திப்பு குறித்து ராகுல்காந்தி கூறும் திடுக்கிடும் தகவல்
வங்கிக் கடனைப் பெற்றுக் கொண்டு திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவில் இருந்து வெளிநாடு தப்பிச் செல்ல உதவியது, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தான் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிலதிபர் மல்லையா மற்றும் நிதியமைச்சர் ஜெட்லி இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக விமர்சித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்து சென்ற போது ஒரு சில விநாடிகள் மட்டுமே மல்லையாவுடன் பேசியதாக ஜெட்லி கூறுவது உண்மையல்ல என்றும், மல்லையா- ஜெட்லி இடையிலான சந்திப்பை காங்கிரஸ் தலைவர் ஒருவர் பார்த்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
லண்டன் செல்வதற்கு முன்பாக ஜெட்லியை சந்தித்துப் பேசிய மல்லையா, வெளிநாடு செல்வது பற்றி அவரிடம் தகவல் தெரிவித்ததாகவும், ஆனால், அந்த செய்தியை சிபிஐ அல்லது அமலாக்கத்துறைக்கு தெரிவிக்காமல், ஜெட்லி இருந்தது ஏன்? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மல்லையா விவகாரத்தில் நிதியமைச்சர் ஜெட்லி பொய் சொல்வதாகவும், இந்த விவகாரத்தில் சிபிஐக்கு அதிகாரமிக்க ஒரு நபரால் நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக, மல்லையாவுக்கு எதிராக சிபிஐ தயாரித்த கைது உத்தரவு நோட்டீஸ், எதற்காக வெறும் தகவல் நோட்டீஸ் என மாற்றப்பட்டது எனவும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். மல்லையாவை தப்பவிட்டதற்கு பொறுப்பேற்று அருண்ஜெட்லி பதவி விலகி வேண்டும் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.