விஜய், ஜெயம் ரவி இந்த கதையில் நடிக்க யோசித்தனர்: சுசீந்திரன்
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜீனியஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இந்த சந்திப்பின்போது சுசீந்திரன் பேசியதாவது:
நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக தான் இருந்தது. நான் இந்த கதையையும் , கதாபாத்திரத்தை பற்றியும் பலரிடம் ஒன் லைனாக கூறியுள்ளேன். அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதை எப்படி கதையாக மாற்றுவது என்று பல வருடங்களாக யோசித்து வந்தேன். அது கதையாக மாறிய பின்பு ஜீனியஸ் கதையை விஜய் , அல்லு அர்ஜுன் , ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் இந்த கதையை கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது ஆனால் அவர்களால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை.
கடைசியாக இந்த கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ஜீனியஸ் படமாக வந்துள்ளது. இப்படம் மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். எனக்கு ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற ‘பி.கே’ திரைப்படம் மிகவும் பிடிக்கும். அந்த படத்தின் பாதிப்பில் தான் நான் இப்படத்தை இயக்கியுள்ளேன். இப்படம் ‘பி.கே’ போல மெசேஜ் சொல்லும் என்டர்டேயினாராக இருக்கும். இப்படத்தின் கதை அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்குவில் வெளியிட முடிவு செய்துள்ளோம். ரோஷனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் , ஹீரோவாகவும் அறிமுகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி’
இவ்வாறு சுசீந்திரன் பேசினார்