விண்ணைத் துளைக்கும் ஸாராவின் அம்புகள்!

விண்ணைத் துளைக்கும் ஸாராவின் அம்புகள்!

20ரியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா, மரகானா மைதானம். ஒவ்வொரு நாட்டுக்கும் பெருமை சேர்த்த வீரர்களும் வீராங்கனைகளும் பெருமிதம் பொங்க தங்கள் நாட்டுக் கொடியை ஏந்தியபடி வந்துகொண்டிருந்தனர். அவர்களைவிடவும் கூடுதல் பெருமிதத்துடன் கொடியை ஏந்திவந்தார் அந்தப் பெண். அவர், இரானைச் சேர்ந்த வில்வித்தை வீராங்கனை ஸாரா நெமாத்தி. அவர் வந்துகொண்டிருந்தது சக்கர நாற்காலியில்.

ஒலிம்பிக் போட்டியில் கொடியை ஏந்திச் செல்லும் இந்தக் கௌரவம், அவருக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். கட்டுப்பாடுகள் மிகுந்த இஸ்லாமிய நாடான இரானின் சார்பில் பாராலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கம் வென்றவர் ஸாரா.

பாராலிம்பிக் போட்டிகளின் வில்வித்தைப் பிரிவில் துல்லியமாக இலக்கைத் துளைத்த சாதனையையும் அவர் புரிந்துள்ளார். விளையாட்டு வழியாகப் பெண்களுக்கான அதிகாரத்தை வென்றெடுத்ததற்கான அடையாளமாக ஐ.நா. தூதுவராகவும் ஸாரா அறிவிக்கப்பட்டுள்ளார்.

முடங்காத கனவு

இன்றைக்கு அவர் ஒரு மாற்றுத்திறன் வீராங்கனைதான் என்றாலும், ஒலிம்பிக் போட்டிகளில் சாதாரணமானவர்களுடன் போட்டியிடவே ஸாரா நெமாத்தி விரும்பினார். கால்கள் முடங்குவதற்கு முன், தேக்வாண்டோவில் பிளாக் பெல்ட் தகுதி பெற்ற வீராங்கனை அவர்; இரான் தேசிய அணிக்கும் தகுதி பெற்றிருந்தார். ஒலிம்பிக் தேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்பதே அவரது கனவாக இருந்தது.

திடீரென ஒரு அசம்பாவிதம் குறுக்கிட்டது. 18 வயதில் நேரிட்ட கார் விபத்தில் ஸாரா படுகாயமடைந்தார். முதுகெலும்பு அடி வாங்கியது, இரண்டு கால்களும் முடங்கிப் போயின. அதற்குப் பிறகு தேக்வாண்டோ பற்றி நினைப்பது சாத்தியமில்லாமல் போனது.

“ஒரு பியானோ கலைஞருக்குக் கைகள் எவ்வளவு அவசியமோ, அப்படித்தான் தேக்வாண்டோ வீராங்கனைக்குக் கால்களும்” என்று கூறிய அவரே, பெரும் மனஉறுதியுடன் அந்தத் துயரத்தைக் கடந்தார்.

கால்கள் முடங்கியதால் தன் ஒலிம்பிக் கனவுகளை ஸாரா முடக்கிக் கொள்ளவில்லை. விளையாட்டைத் துறக்க அவர் தயாராக இல்லை.

வலிமை தந்த வில்

“அந்த அசம்பாவிதம் நடந்த பிறகு மனம் தளர்ந்துவிடக் கூடாது, என் குடும்பத்துக்காக வாழ்ந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். எனக்குள் இருந்த விளையாட்டை மீட்டெடுக்கப் பேராற்றல் தேவைப்பட்டது. அதை நான் கைகொள்ள மேற்கொண்ட முயற்சிகளின்போது, அனுபவித்த துயரத்தைப் பார்த்து அப்பாவும் அம்மாவும் ரொம்பவே கலங்கிப் போனார்கள். இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, நம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கினேன். வில்வித்தைப் போட்டிகளில் பங்கேற்பது என்ற முடிவுக்கு வந்தேன்.

அப்போது நான் பேசாமல் முடங்கி யிருக்கலாம். ஆனால், வாழ்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள நான் ஆசைப்பட்டேன். வலிமையின் அர்த்தத்தை வில்வித்தை என் மனதில் ஏற்றியது” என்று தான் மீண்ட கதையைச் சொல்கிறார்.

துணிச்சலான பங்கேற்பு

வில்வித்தைப் போட்டிகளில் அவர் பயிற்சி பெற ஆரம்பித்து ஆறே மாதங்களில் சாதாரணமானவர்களுடன் போட்டியிட்டுத் தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். சர்வதேச அளவிலும் சாதாரணமானவர்களுடன் துணிச்சலாக வில்வித்தைப் போட்டிகளில் ஸாரா பங்கேற்க ஆரம்பித்தார்.

நான்கரை ஆண்டு கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகு 2012 லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் வில்வித்தையில் வென்ற தங்கப் பதக்கம், அவரது பெருமையை உலகுக்கு எடுத்துரைத்தது. அடுத்ததாக, ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முறைப்படி தகுதி பெற்றார். அதை அங்கீகரிக்கும் வகையில் நாட்டுக் கொடியை ஏந்திச் செல்லும் கௌரவத்தை இரான் அவருக்கு வழங்கியது. விபத்து நடைபெற்று 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது ஒலிம்பிக் கனவு நனவானது.

இதில் பதக்கம் ஏதுமின்றி அவர் வெளியேறிவிட்டாலும், அடுத்த மாதம் பிரேசிலில் நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். நடப்பு பாராலிம்பிக் ரிகர்வ் பிரிவு வில்வித்தை சாம்பியன் அவரே. அவரைத் தவிர, ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வேறு யாரும் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை.

களம்கண்ட திருமணம்

ஸாராவின் திருமணமும் பாராலிம்பிக் விளையாட்டுக் களத்தில் நடைபெற்றது, மிகவும் பொருத்தமானதுதான். லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் அவர் தங்கம் வென்ற பிறகு, இரான் வில்வித்தை வீரர் ரோஹம் ஷஷாபியுடன் லண்டன் ஒலிம்பிக் கிராமத்தில் சக வீரர், வீராங்கனைகள் குழுமியிருக்க திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

முதுகுத்தண்டுக் குறைபாடு உடையவர் களுக்கான சங்கத்தில்தான் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். தங்கள் காதலையும் விளையாட்டு வாழ்க்கையையும் அங்கேதான் அவர்கள் கண்டெடுத்தார்கள். ரோஹம் அடிப்படையில் ஒரு எலெக்ட்ரீஷியன். 2001-ல் வேலைக்களத்தில் இருந்தபோது, கீழே விழுந்த ஒரு பெரிய கோல் அவரது முதுகுத்தண்டைப் பதம் பார்த்தது. அந்த விபத்துதான் ரோஹம்மையும் வில்வித்தை வீரராக்கியது.

“எந்தப் பிரச்சினை வந்தாலும் இருவரும் சேர்ந்து எதிர்கொண்டால், அதை நிச்சயம் தகர்த்துவிடலாம் என்றுதான் நாங்கள் மாறிமாறி சொல்லிக்கொள்வோம். வில்வித்தையைப் பொறுத்தவரை நான் அதிர்ஷ்டசாலி. மற்ற வில்வித்தை வீராங்கனைகள் கணவருடன் இணைந்து பயிற்சி பெறவோ, கூடுதல் நுட்பங்களைத் தெரிந்துகொள்ளவோ முடியாது. ஆனால் ரோஹம் உலகச் சாம்பியன் எனும்போது, எனக்கு வேறு என்ன வேண்டும்?

வாழ்க்கையிலோ உடலிலோ நேரும் எந்தவொரு சிக்கலுக்கும் நாம் முடங்க வேண்டியதில்லை. மகிழ்ச்சிக்கான பாதை பல வாசல்களைக் கொண்டது. அது எதுவெனத் தேர்ந்தெடுப்பது நம் முயற்சியை மட்டுமே பொறுத்தது” – பொருத்தமாக முடிக்கிறார் ஸாரா.

யார் முதல் இரான் பெண்?

கட்டுப்பாடுகள் மிகுந்த இஸ்லாமிய நாடான இரானின் கொடியை ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக ஏந்திச் சென்ற பெருமையை வில்வித்தை வீராங்கனை ஸாரா நெமாத்தி பெற்றிருப்பதாக, கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. அந்தச் செய்தி முற்றிலும் தவறு.

ஒலிம்பிக் போட்டிகளில் இரான் நாட்டின் கொடியை ஏந்திச் சென்ற முதல் பெண், துப்பாக்கி சுடும் வீராங்கனை லிடா ஃபாரிமன். 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தப் பெருமையை அவர் பெற்றார். அது மட்டுமல்ல இரானில் 1979-ம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் பெண்ணும் அவர்தான்.

Leave a Reply