விண்வெளியில் மாதவிடாய் ஏற்படுமா?

விண்வெளியில் மாதவிடாய் ஏற்படுமா?

ladies2_2845152fகடந்த 50 ஆண்டுகளில் இதுவரை 50 பெண்கள் விண்வெளியில் பறந்திருக்கின்றனர். இதைக் கணக்கில் வைத்துக்கொண்டு பார்க்கும்போது நமக்கு இயல்பாகவே ஒரு கேள்வி மனதில் எழும்: விண்வெளியில் பெண்களின் மாதவிடாய்ச் சுழற்சியை எப்படிச் சமாளிப்பது?

‘என்பிஜே மைக்ரோகிரேவிட்டி’ என்ற இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வுக்கட்டுரை இது குறித்து அலசுகிறது. விண்வெளி வீராங்கனைகளில் பலர் விண்வெளியில் இருக்கும்போது தங்கள் மாதவிடாயைத் தள்ளிப்போடவே விரும்புகிறார்கள் என்று அது சொல்கிறது. குறிப்பாக, நிறைய நாட்கள் நீளும் விண்வெளிப் பயணம் என்றால் இந்தத் தேர்வை மேற்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். விண்வெளியில் மாதவிடாயைச் சமாளிப்பது எப்படி என்பது குறித்து மேற்கண்ட ஆய்வுக்கட்டுரை விவரிக்கிறது. உடலில் பதிக்கப்படும் கருத்தடை மருந்து, கருப்பைக்குள் செலுத்திவைக்கப்படும் சாதனங்கள் போன்ற நீடித்துச் செயல்படும் கருத்தடை வழிமுறைகளைப் பயன்படுத்துவது பலனளிக்கலாம் என்று அந்த ஆய்வு சொல்கிறது. இது விண்வெளிப் பெண்களுக்குச் சாதகமானது மட்டுமல்ல, பொருட்களை ஏற்றிச்செல்வதில் விண்கலங்களில் உள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடியது.

விண்வெளியில் மாதவிடாய் ஏற்படுவதில் உடல் சார்ந்து எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறார்கள் அந்த ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்களான வர்ஷா ஜெயினும் வர்ஜினியா ஈ. வோட்ரிங்கும். லண்டன் கிங்’ஸ் கல்லூரியைச் சேர்ந்த வர்ஷா ஜெயின் விண்வெளி மகப்பேறியல் நிபுணராக இருப்பவர். பேலர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த வோட்ரிங்கை விண்வெளி மருந்தியல் நிபுணர் என்று சொல்லலாம். (விண்வெளியில் கிட்டத்தட்ட ஈர்ப்பு விசையே இல்லாதிருப்பதால் உள்நோக்கிய மாதவிடாய் ரத்தப்போக்கு ஏற்படும் என்றும், வயிற்றில் இந்த ரத்தம் தேங்கி நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுபவையெல்லாம் கட்டுக்கதைகள் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.)

நாஸா பதிவுசெய்துவரும் வாய்மொழி வரலாற்றொன்றில் டாக்டர் ரேயா செடன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. 1980-களிலும் 1990-களிலுமாக மூன்றுமுறை விண்கலங்களில் சென்று வந்திருக்கும் விண்வெளி வீராங்கனை அவர். “முதன்முதலில் விண்வெளியில் யாருக்கு மாதவிடாய் ஏற்பட்டதென்று எனக்குத் தெரியாது. ஆனால், விண்வெளி சென்று திரும்பி வந்த பெண்கள், ‘விண்வெளியில் வரும் மாதவிடாய் என்பது பூமியில் வரும் மாதவிடாயைப் போலத்தான். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்’ என்றார்கள்” என்று ரேயா சொல்லியிருக்கிறார்.

விண்வெளியில் பறந்த முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையை 1983-ல் படைத்த சாலி ரைட் மற்றுமொரு வாய்மொழி வரலாற்றில் இப்படிக் கூறியிருக்கிறார்: “ஒரு வார காலம் நீடிக்கும் விண்வெளிப் பயணத்துக்கு எவ்வளவு டேம்பூன்களை ஏற்றிச்செல்வது என்பது குறித்துப் பொறியாளர்கள் அப்போது தலையைப் பிய்த்துக்கொண்டிருந்தார்கள். (டேம்பூன்: மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சுவதற்கான ஒருவித அணையாடை.) ‘100 வைக்கலாமா?’ என்று கேட்டார்கள். ‘அது சரியான எண்ணிக்கை இல்லை’ என்றேன். ‘பிரச்சினை ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்றார்கள். ‘அப்படியென்றால் நீங்கள் சொல்லும் எண்ணிக்கையில் பாதியைக் குறைத்துவிடுங்கள். எந்தப் பிரச்சினையும் இல்லை’ என்றேன் நான்” என்கிறார் சாலி. எனினும் விண்வெளியில் மாதவிடாய் என்பது பொருட்சுமை என்ற அளவில் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடியதுதான்.

“சர்வதேச விண்வெளி நிலையத்தின் அமெரிக்கத் தரப்பிலுள்ள கழிவகற்று அமைப்புகள் சிறுநீரிலிருந்து நீரைப் பிரிக்கக் கூடியவைதான். ஆனால், மாதவிடாய் ரத்தத்தை அவற்றால் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே, மாதவிடாய் தடுப்பு வழிமுறைகளை மேற்கொண்டிருக்கும்போதே மீறியும் இரத்தப் போக்கு ஏற்படுவதை இதனால் குறைக்க வேண்டியிருக்கிறது” என்றும் மேற்கண்ட ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. டாக்டர் எலன் பேக்கர், செரீனா அவ்நோன் போன்ற விண்வெளி வீராங்கனைகளையும் மேற்கண்ட கட்டுரையின் ஆசிரியர்கள் கலந்தாலோசித்துள்ளனர். “விண்வெளிப் பயணத்தின்போது மாதவிடாய் ஏற்படுவது ஒருவருடைய தனிப்பட்ட சுத்தத்துக்குச் சவால்விடுக்கக் கூடியது. உடலைச் சுத்தப்படுத்திக்கொள்வதற்கான நீர் குறைந்த அளவில் இருப்பதும். ஈர்ப்புவிசை மிகவும் குறைவாக உள்ள சூழலில் உடல் சுத்தத்துக்கான பொருட்களை (டேம்பூன் உட்பட) கையாள்வதும் நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது” என்கிறது கட்டுரை.

பூமியில் இருக்கும்போது 21 நாட்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை விண்வெளியில் இருக்கும்போதும் பெண்கள் ஆரம்பத்திலிருந்தே எடுத்துக்கொண்டுவருகின்றனர். ஆனால், சமீப காலமாக விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்ளும் காலம் என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. அப்படி இருக்கும்போது மூன்று ஆண்டுகள் நீளக்கூடிய பயணத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு மாத்திரை என்ற விகிதத்தில் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 1,100 மாத்திரைகள் தேவைப்படும் என்று அந்தக் கட்டுரை கூறுகிறது.

“விண்வெளியில் அவ்வளவு காலம் இருந்தால் மருந்துகளின் தன்மை பாதிப்படையாமல் இருக்குமா என்பது குறித்து இன்னும் சோதித்தறியப்படவில்லை. மேலும், விண்வெளியில் மிக மிக அதிகமாக இருக்கும் கதிர்வீச்சு காரணமாகவும் மருந்துகளின் தன்மையில் மாற்றம் ஏற்படுமா என்பதும் சோதித்தறியப்படவில்லை,” என்று அந்த ஆய்வுக்கட்டுரை சொல்கிறது. கூடுதலாக, அந்த அளவுக்கு மருந்து அட்டைகளின் பொதிகளைக் கற்பனை செய்துபாருங்கள். இதனால் ஏவுவாகனத்துக்கான சுமையையும் அவை அதிகரித்துவிடும். குப்பை மேலாண்மையிலும் பிரச்சினை ஏற்படும்.

நீண்ட காலக் கருத்தடை வழிமுறைகளுக்கான சாத்தியங்களைக் குறித்தும் அந்தக் கட்டுரை ஆசிரியர்கள் விவாதிக்கிறார்கள். மூன்று மாதங்கள் வரை பலன் தரக்கூடிய ஊசிமருந்துகளால் எலும்புகளில் உள்ள கனிமங்களின் அடர்த்தி குறைவதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. விண்வெளிப் பயணத்தின்போது எலும்புகளில் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படும் என்பது குறித்தும் தெளிவில்லை.

கருப்பைக்குள் வைக்கப்படும் ஹார்மோன் சாதனங்களையும் (இவை ஐந்து ஆண்டுகள் பலன் தரும்) உடலில் பதிக்கப்படும் கருத்தடை மருந்துகளையும் (இவை மூன்று ஆண்டுகள் பலன் தரும்) மேற்கண்ட ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளார்கள். இரண்டு வகைகளுமே நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். உடலில், அதாவது கையில் தோலுக்கு அடியில் பதிக்கப்படும் கருத்தடை மருந்துகளைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான பிரச்சினையை அந்த ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அப்படிப் பதித்து வைக்கப்படுபவை விண்கலத்துக்குள் இருக்கும் ஏதாவது திறன்மிக்க பொருட்களால் உரசப்பட்டு, எதிலாவது மாட்டிக்கொள்ளுமா என்றும் கேட்கிறார்கள். பூமியில் இருக்கும் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் ஏதுமில்லை.

கூடவே, ஆதிகாலப் பெண்களையும் தற்காலப் பெண்களையும் ஒப்பிட்டும் எழுதியிருக்கிறார்கள். ஆதிகாலத்தை விடவும் தற்போதைய பெண்கள் சிறு வயதிலேயே பருவமடைகிறார்கள். ஆனால், பருவமடைந்த காலத்திலிருந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகுதான் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். ஆதிப் பெண்களை விடக் குறைவான தடவைகளே கருத்தரிக்கிறார்கள். ஆதிப் பெண்களைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமான அளவில் மாதவிடாய்ச் சுழற்சியை தற்காலப் பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்றும் கட்டுரையாசிரியர்கள் எழுதுகிறார்கள். “தற்போது ஒரு பெண்ணின் ஆயுட்காலத்தில் சுமார் 450 முறை கருமுட்டை உற்பத்தியாகிறது. ஆதி காலத்திலோ வெறும் 160 முறைதான் ஒரு பெண்ணுக்கு அவள் ஆயுட்காலத்தில் கருமுட்டை உருவானது” என்கிறார்கள். இப்படியாக, விண்வெளிப் பெண்ணில் ஆரம்பித்து ஆதிப் பெண்ணில் முடிவடைகிறது இந்த ஆராய்ச்சிக் கட்டுரை.

Leave a Reply