வித்தியாசமான வரதட்சணை கேட்ட ஒடிஷா வாலிபருக்கு குவியும் பாராட்டுக்கள்
பணம், நகை, கார், வீடு என வரதட்சணை கேட்கும் இந்த காலக்கட்டத்தில் வித்தியாசமான வரதட்சணை கேட்ட ஒடிஷா வாலிபருக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த 33 வயது சரோஜ் காந்த் பிஸ்வால் தனது திருமணத்தின் போதுமணப்பெண்ணின் தந்தையிடம் எனக்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம். திருமணத்தின் போது ஆடம்பரமாக பூ அலங்காரம், பந்தல் அலங்காரம் தேவையில்லை. வாணவேடிக்கை வேண்டாம், அதற்கு பதிலாக 1001 மரக்கன்றுகள் வேண்டும் என்று கேட்டார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை திருமணத்தின் போது தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி ஒரு லாரி நிறைய பழ மரக்கன்றுகளை கொண்டு வந்து சரோஜ் காந்த் பிஸ்வாலிடம் வரதட்சணையாக கொடுத்தார்.
அவற்றை கிராம மக்களிடம் மணமக்கள் பரிசாக வழங்கினர். அனைத்து மரக்கன்றுகளையும் நட்டு வளர்த்து மரமாக வளர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து பிஸ்வால் கூறும்போது, “நான் வரதட்சணைக்கு எதிரானவன். மரம் வளர்ப்பு மற்றும் அதை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதை எனது திருமணத்தில் பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்தேன். அதன்படி கிராம மக்களிடம் மரக்கன்று பரிசளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன். நானும் எனது மனைவியும் ஆசிரியர்களாக இருக்கின்றோம். நாங்கள் இருவரும் மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துரைத்து ஊக்குவிப்போம். பொதுமக்களிடம் எடுத்துக்கூறி மரம் வளர்ப்பை ஊக்குவிப்போம்” என்றார்.