விரத நாளில் படிக்கவேண்டிய திருக்கதை!
ஐஸ்வரியங்கள் அனைத்தையும் கொடுக்கக்கூடிய வரலட்சுமி விரதம் தொடர்பான திருக்கதை இது.
பத்ரச்ரவா என்றொரு மன்னன் இருந்தான். அவன் மனைவியான சுசந்திரிகா, குணம், கல்வி, தர்மம், கற்பு என அனைத்திலும் முதன்மை வகிப்பவள். இவர்களுக்கு ஏழு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். பெண் குழந்தையின் பெயர் சியாமா.
அரசியான சுசந்திரிகாவின் நற்குணங்களும் நற்செயல்களும் அவள் மேல் கருணை கொள்ளுமாறு மகாலட்சுமிதேவியைத் தூண்டின.
வெள்ளிக்கிழமை துவாதசி அன்று மகாலட்சுமிதேவி, பழுத்த சுமங்கலி ஒருத்தியின் வடிவில் அரசியின் அந்தப்புரத்தில் நுழைந்தாள். வயிறாரச் சாப்பிட்டு, வாய்நிறைய தாம்பூலத்துடன் இருந்த அரசி, “சுமங்கலியே, யார் நீங்கள்? எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டாள். அவளை நோக்கிக் கையை நீட்டிய மகாலட்சுமி, “சுசந்திரிகா! நீ நல்லவள்; உத்தமி. எனினும் ஸ்ரீதேவியின் அவதார தினமான இன்று வயிறு புடைக்கச் சாப்பிட்டு விட்டு, வாய் நிறையத் தாம்பூலம் சுவைத்துக் கொண்டிருப்பது நியாயமா?” என்று கேட்டாள்.
எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும், அவர்கள் செய்த தவற்றைச் சுட்டிக்காட்டினால், கடுங் கோபம் வந்துவிடும். சுசந்திரிகா மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? அவளுக்கும் கோபம் வந்துவிட்டது. கையை ஓங்கி, அந்தச் சுமங்கலியின் கன்னத்தில் அறைந்தாள். சுமங்கலி, கண்களில் நீர் வழிய அந்த இடத்தில் இருந்து அகன்றாள்.
உள்ளே நுழையும் போது அவளைப் பார்த்தாள் சியாமா. இப்போது திரும்பி வருவதைக் கண்டு, “அம்மா! ஏன் அழுகிறீர்கள்? என்ன வேண்டும்” என்று கேட்டாள்.கண்களைத் துடைத்துக்கொண்ட அந்தப் பழுத்த சுமங்கலி, “பெண்ணே! உன் தாயாருக்கு நல்லது சொல்ல வந்தேன். ஆனால், அவளோ என்னை அடித்து அவமானப்படுத்திவிட்டாள். எனவே, திரும்பிப் போகிறேன்” என்றாள்.
“அந்த நல்லதை எனக்குச் சொல்லிக்கொடுங்களேன்” என்ற சியாமா, சுமங்கலி வடிவில் இருந்த மகாலட்சுமியை உட்கார வைத்து உபசரித்தாள். மகாலட்சுமியின் மனம் குளிர்ந்தது. வரலட்சுமி விரதம் கொண்டாட வேண்டிய வழிமுறைகளை சியாமாவுக்கு உபதேசித்தாள். அன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சியாமா, தவறாமல் வரலட்சுமி பூஜையைச் செய்து வந்தாள்.
அதேநேரம், லட்சுமிதேவியை அவமதித்ததால் சியாமாவின் பெற்றோரிடம் இருந்த செல்வங்கள் அனைத்தும் வெகு வேகமாகக் கரையத் தொடங்கின. மன்னன் மனம் அதிர்ந்தான். ராஜ்ஜியம் கையை விட்டுப் போவதற்குள் மகளுக்கு மனம் செய்துவிடவேண்டும்’ என்று தீர்மானித்தவன், மாலாதரன் என்ற மன்னனுக்கு மகளைத் திருமணம் செய்துவைத்தான்.
புகுந்த வீடு போனபின்பும் சியாமா, வரலட்சுமி பூஜையை நிறுத்தவில்லை. அதன் பலனாக, அவளின் கணவன் மாலாதரன் ஐஸ்வரியக் கடலில் நீந்தினான். சியாமாவின் பெற்றோரோ… பகைவர் களால் விரட்டப்பட்டு, நாட்டைவிட்டு ஓடினார்கள். உணவுக்கும் உடைக்கும் வழியின்றி ஊர் ஊராகத் திரிந்தார்கள்.
தகவல் அறிந்த சியாமா வருந்தினாள். அவர்கள் தங்கியிருந்த இடத்துக்குத் தன் சேவகன் மூலம் உணவு அனுப்பி வந்தாள். நாட்கள் நகர்ந்தன. ஒருநாள்… பெரிய பாத்திரம் ஒன்றில் தங்க நாணயங்களை நிரப்பி, பெற்றோரிடம் கொடுத்த சியாமா, “இதை வைத்துக்கொண்டு எங்காவது போய் பிழைத்துக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள் நகர்ந்ததும் அந்தப் பாத்திரத்தைத் திறந்து பார்த்தான் மன்னன். உள்ளே கரித்துண்டுகளே நிரம்பியிருந்தன. வருந்திக் கதறினார்கள் அவர்கள். சியாமாவுக்குத் தகவல் தெரிவித்தார்கள். உடனே அவளுக்கு, தன் தாய், வீட்டுக்கு வந்த சுமங்கலியை அடித்து அவமதித்தது நினைவுக்கு வந்தது. ஆகவே, தன் அன்னையை அழைத்து விவரங்களைச் சொல்லி, வரலட்சுமி விரதத்தை பூஜை முறைகளுடன் செய்யுமாறு கூறினாள்.
மகளின் வார்த்தைகளைக் கேட்டு மனம் வருந்திய தாய், “இனி, வரலட்சுமி விரதம் இருந்து அந்தத் தாயை வழிபடுவேன்” என்றாள். அதன்படியே செய்தாள். லட்சுமியின் கருணையால் நாளுக்கு நாள் நன்மைகள் விளைந்தன. அவள் கணவனுக்கு படைபலம் பெருக, பகைவன் நாட்டைவிட்டு ஓடினான். ராஜ்யலட்சுமி மன்னனிடம் வந்துசேர்ந்தாள்.
அனைத்தையும் அறிந்து சியாமா மகிழ்ந்தாள். ஆனால் அவள் கணவனோ, “சியாமா! உன் பெற்றோர் எல்லாவற்றை யும் இழந்து பஞ்சைப் பராரிகளாக ஆகி அலைந்த தைப் பார்த்தாய் அல்லவா? போகட்டும்! உன் பிறந்த வீட்டில் இருந்து என்ன கொண்டு வந்தாய்?” என்று இழிவாகப் பேசி இடித்தான்.
சியாமா கலங்கவில்லை. “என்ன கொண்டு வந்தேன் என்பதை நாளை சாப்பிடும்போது சொல்கிறேன்” என்றாள்.
மறுநாள், உணவு நேரம். கணவனது இலையில் கனிவோடு உணவு வகைகளைப் பரிமாறினாள் சியாமா. சுவைத்துப் பார்த்த மாலாதரன் முகம் மாறினான். “ஒன்றில்கூட உப்பு இல்லையே. மனிதன் தின்பானா இதை” என்று கடுகடுத்தான்.
“உப்பு என்பது சாதாரண பொருள்தான். அதிகமாகக் கூட நாம் உபயோகப்படுத்துவதில்லை. மிகக் குறைவாகத் தான் உணவில் சேர்க்கிறோம். ஆனால், அது இல்லா விட்டால், உயிரைக் காக்கும் உணவே உபயோகம் இல்லாமல் போய் விடுகிறதே. அதுபோல்தான் வரலட்சுமி விரதமும். ஒரு ராஜ்ஜியத்துக்கு வரலட்சுமி விரதம் மிக முக்கியமானது. அதைத்தான் நான் பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வந்தேன்” என்று விளக்கினாள் சியாமா.
உண்மை உணர்ந்த மாலாதரன், மனமகிழ்ச்சியுடன் அன்று முதல் வரலட்சுமி விரதம் மற்றும் பூஜையில் பங்கெடுத்துக்கொண்டான். அவனது தேசம் மேலும் மேலும் வளம் பெற்றது. மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.