வில்லங்கச் சான்றிதழ் விவரங்கள் என்னென்ன?
வில்லங்கச் சான்றிதழ் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட வேண்டும். வில்லங்கச் சான்றிதழில் அச்சொத்தின் குறிப்பிட்ட காலத்துக்கான பரிமாற்றங்கள் விவரமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏதேனும் கடன் வாங்க வேண்டுமானால் அச்சொத்தின் 30 ஆண்டுக்கான வில்லங்கச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். தனியார் வங்கிகளில் 13 ஆண்டுக்கான வில்லங்கச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் 4 வகையான புத்தகக் கணக்குகள் உள்ளன. புத்தகம் 1 (Book 1) பதிவேட்டில் கட்டாயம் பதிவுசெய்யும் ஆவணங்கள் குறிப்பிடபட்டிருக்கும். அதாவது கிரய ஒப்பந்தம், கிரயப் பத்திரம், பாகப் பிரிவினைப் பத்திரம், விடுதலைப் பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம், தானப் பத்திரம், அடமானப் பத்திரம், அடமான ரசீதுப் பத்திரம், நீதிமன்ற இணைப்பு ஆணை போன்றவற்றிற்கான பத்திரங்கள் வில்லங்கச் சான்றிதழில் இடம் பெறும். இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத பவர் பத்திரத்திற்கான விவரங்கள் 01.11.2010 முதல் தமிழ்நாட்டில் வில்லங்கச் சான்றிதழில் இதற்கான விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுவாக மற்ற மாநிலத்தில் பவர் பத்திரங்கள் புத்தகம் 4 ( Book IV) பதிவு செய்யப்படும். ஆனால் தமிழ்நாட்டில் 01.11.2010 முதல் பவர் பத்திரங்கள் . புத்தகம் 1-ல் (Book 1) பதிவேட்டில் பதிவுசெய்யப்படுகின்றன.
பவர் பத்திரத்தில் சொத்துக்கான விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் அதாவது தேதி மற்றும் பத்திர விவரங்கள், பகுதி எண், புத்தக எண், பக்க எண், பத்திர எண் அப்பத்திரத்தில் இடம் பெற்றிருக்கும். அனைத்து நபர்களின் பெயர்களும் வில்லங்கச் சான்றிதழில் குறிப்பிடப்படடிருக்கும்.
கணினி வில்லங்கச் சான்றிதழ்
இந்தியாவில் 7 மாநிலங்களில் மட்டும்தான் கணினி மூலம் வில்லங்கச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் எந்தெந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது என்ற விவரங்கள் கீழ் வருமாறு:
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா: 1.1.1980 முதல்
தமிழ்நாடு : 1.1.1987 முதல்
கேரளா : 1.1.1992 முதல்
குஜராத் : 1.1.1994 முதல்
கர்நாடகா : 1.4.2004 முதல்
ஓடிசா : 1.5.2010 முதல்
பாண்டிச்சேரி :1.1.2006 முதல்
பிற மாநிலங்களில் தற்போதுகூட கையால் எழுதப்பட்ட வில்லங்கச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ஒரு சொத்துக்கான குறிப்பிட்ட காலத்துக்கு வில்லங்கம் ஏதும் இல்லை என்றால் (NIL) வில்லங்கச் சான்றிதழ் வழங்கப்படும்.
வில்லங்கச் சான்றிதழ்
இந்தியாவில் தற்போது 6 மாநிலங்களில் தான் வில்லங்கச் சான்றிதழ்கள் ஆன்லைனில் சரிபார்க்கும் வசதி உள்ளது. இச்சேவை ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ளது. ஆன்லைன் வில்லங்கச் சான்றிதழுக்கான விவரங்களைக் கீழ்க்கண்ட இணையதளத்தில் சரிபார்க்க முடியும். தமிழ்நாடு: www.tnreginet.net (1.1.1987) முதல்