விவசாயக் கடன் தள்ளுபடியால் எதிர்கால கடன் நிலுவைகள் சிக்கலாகும்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கவலை
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதால் எதிர்காலத்தில் கடன் நிலுவைகளை திரும்ப பெறுவதில் சிக்கல் உருவாகும் என எஸ்பிஐ ஆய்வு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இதுவரை அளிக்கப்பட்டுள்ள விவசாயக் கடன் தள்ளுபடியால் நாட்டின் எதிர்கால கடன் திருப்ப நடவடிக்கைகளில் பாதிப்பு உருவாகும். மேலும் விவசாயக் கடன் தள்ளுபடிகளால் மாநிலங்களில் பொருளாதாரம் மோசமான அளவில் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மாநிலங்கள் இதுவரை அறிவித்துள்ள விவசாயக் கடன் தள்ளுபடி தொகை மொத்தம் ரூ.1.31 லட்சம் கோடியாக உள்ளது என்றும் அறிக்கை கூறியுள்ளது. இதில் உத்தர பிரதேச அரசு அதிகபட்சமாக ரூ.36,359 கோடி விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மஹாராஷ்டிர அரசு ரூ.30,500 கோடியும், ஆந்திர பிரதேசம், தெலங்கானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் அதிக கடன் தள்ளுபடிகளை அளித்துள்ளன.
கடன் தள்ளுபடிகளால் எதிர்காலத்தில் கடன் நிலுவைகளை திரும்பப் பெறுவதில் எதிர்மறையான விளைவுகள் உருவாகும். 2008-09 ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பட்ஜெட்டில் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2009 நிதியாண்டில் விவசாய துறையின் வாராக்கடன் அளவு அதிகரித்தது. மத்திய, மாநில அரசுகளில் கடன் தள்ளுபடி நடவடிக்கைகளால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயத் துறையில் வாராக்கடன் சிக்கல் நீடித்தது என்று எஸ்பிஐ வங்கியின் மூத்த பொருளாதார ஆலோசகர் செளம்ய கந்தி கோஷ் கூறினார்.
எதிர்கால கடன் நிலுவைகளைத் திரும்ப பெறுவதில் சிக்கல் உருவாகும் என்பதுடன், கடனை தள்ளுபடி செய்பவர்கள் மாநில பொருளாதாரத்தையும் மோசமான நிலைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த பாதிப்பு பஞ்சாப் மாநிலத்தில் மோசமான எதிர் விளைவுகளை உருவாக்கும். இதனால் மாநிலத்தின் நிதிப்பற்றாக்குறை 4.8% (ஜிடிபியில்) அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்த மாநிலங்கள் தங்களது பட்ஜெட்டில் பல ஆண்டுகளாகவே விவசாயக் கடன் தள்ளுபடிகளை செய்து வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட எந்த ஒரு ஆண்டிலும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கவில்லை. ஆனால் தற்போது பல மாநிலங்களில் நிதி பற்றாக்குறை நிலைமை மோசமாக இருக்கும் என்பதை பார்க்க முடிகிறது என்றும் கூறினார்.
ஆனால் தற்போதைய விவசாயக் கடன் தள்ளுபடிகளில் குறிப்பிடத் தகுந்த விஷயம், பெரும் பாலான மாநிலங்கள் விவசாய கடன் தள்ளுபடிக்கான வரம்பை ரூ.1 லட்சத்துக்குள் என நிர்ணயித் துள்ளன. இதற்கும் மேல் வாங்கப் பட்ட கடன் தொகையை செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளன. இதனால் கடனை திரும்ப செலுத் தும் பழக்கத்தில் பெரிய மாறுதல் கள் இருக்காது என்று அவர் மேலும் கூறினார்.