வீடு மாற போகிறவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்
ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குக் குடிபோவதென்பது, எல்லோர் வாழ்விலும் நிகழக்கூடிய ஒரு சம்பவம்தான். பணி நிமித்தம் வேறு மாநகருக்கு மாறிப் போவது, பிழைப்புக்காகக் கிராமத்திலிருந்து வருவது, குழந்தைகளின் பள்ளிக்கூடம், பணிபுரியும் அலுவலகம் – இவற்றுக்காக ஒரே ஊரிலேயே வேறு இல்லத்துக்குச் செல்வது இதுபோன்ற பல காரணங்களுக்காக இடம் பெயர நேரிடுகிறது.
இதுபோல வீட்டை மாற்றும்போது மனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்:
விலை மதிப்புள்ள பொருட்களை முதலிலேயே பத்திரப்படுத்தி விடுங்கள். தங்க நகை, வெள்ளிப் பாத்திரங்கள், வீடு சம்பந்தமான ஆவணங்கள் போன்றவற்றைத் தனியாக வையுங்கள்.
விலை உயர்ந்தவை இல்லைதான், ஆனால் இன்றைய காலத்தில் அத்தியாவசியமான பான் கார்டு, ஆதார் அட்டை, பற்றுக் கடன் அட்டைகள், மருத்துவ அறிக்கைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் இவற்றையும் ஒரு பெட்டிக்குள் வைத்துவிடுங்கள். (அடையாளம் தெரிவதற்காகப் பெட்டி மேல் ஒரு தாளை ஒட்டிவிடுங்கள்.)
சோபா, நாற்காலி, பீரோ போன்றவற்றை எடுத்துச் செல்லும்போது சோபா உறைகள், பீரோவிலுள்ள உடைகள் போன்றவற்றைப் பிரித்து வையுங்கள். இத்தகைய கனமான பொருட்களைக் காலின் கீழ் வேறு ஏதாவது மாட்டி அழுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
புது வீட்டுக்குக் குடிபோனவுடன், உடனடியாகத் தேவைப்படும் சமையல் சாமான்களைத் தனிப் பையில் கொண்டுபோவது அவசியம். மைக்ரோ வேவ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் போன்றவற்றைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கை தேவை.
சில பொருட்கள் மீது ஒருவித உணர்வுபூர்வமான தொடர்பிருக்கும். மர டெஸ்க், பழைய மர இழுப்பறை, புராதன குக்கர் இவற்றை எடுத்துப் போகும்போது சம்பந்தப்பட்ட பெரியவர்களின் மனம் நோகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
மேலே குறிப்பிட்டவை போலத்தான், ஸ்தோத்திர நூல்கள், கேசட்டுகள் போன்றவை. என்னதான் சகலமும் கணினியில் பார்க்கலாம் என்றாலும் கணினி மூலம் தெரிந்துகொள்வது அனைவராலும் இயலாது. பெரிய பையில் போட்டு மேலே எழுதிவிடுங்கள். புது இல்லத்தில் குடியேறிய பின்பு மண்டையைக் குடைந்துகொள்ள வேண்டாம்.
கணினி, மடிக் கணினி, சலவை இயந்திரம், பிரிட்ஜ் – இவற்றைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுங்கள். மேலும், புதிய இல்லத்தில் எந்தெந்தப் பொருட்களை எங்கெங்கு வைக்க வேண்டும் என்று முன்பே தீர்மானியுங்கள். அவ்விதம் செய்தால்தான் வேலையாட்களின் பணி எளிதாக அமையும். (முன்கூட்டியே குடும்ப அங்கத்தினர்களுடன் பேசிக் கலந்து ஆலோசிப்பது நல்லது).
இன்வெர்ட்டர், டி.வி. பிற மின்சாதனப் பொருட்களைக் கொண்டுபோகும்போது, குடும்ப உறுப்பினர்கூடச் செல்வது அவசியம்.
கடைசியாக ஒரு விஷயம், இன்றைய நவீனக் கணினி சூழ் உலகில் எல்லா விவரங்களும் கைப்பேசி மூலம்தான் கிடைக்கின்றன. கைப்பேசியுடன்தான் உங்கள் முந்தைய வீட்டின் முகவரி இணைந்திருக்கும். மேலும், காசோலைகள், புதுப்பிக்கப்பட்ட அட்டைகள் எல்லாம் வீடு தேடி வருகின்றன. எனவே, இரண்டும் ஒத்துப்போகின்றனவா என்று கவனிக்க வேண்டும்.
இன்னொன்று, நீங்கள் வீடு மாற்றுவது ஒரு தற்காலிக ஏற்பாடு என்றால், (பழைய தளத்தை இடித்துக் கட்டுவதுபோல) அதற்கேற்றாற்போல் உங்கள் செயல்முறை அமைய வேண்டும். புது வீடு முந்தைய தபால் மண்டலத்திலேயே இருந்தால் வழக்கமான தபால்காரரிடம் சொல்லிவிடலாம். பிரச்சினை ஏதுமில்லை.
மேலும், இந்நாளில் அலுவலக விஷயமாகவோ விடுமுறையை அனுபவிக்கவோ வெளிநாடு செல்கிறார்கள், அத்தகைய சூழல் நேரும் பட்சத்தில் பாஸ்போர்ட்டில் என்ன முகவரி இருக்கிறதென்று உறுதி செய்து கொள்ளுங்கள். குறிப்பாக, கடவுச் சீட்டின் தேதி காலாவதியாகும் தேதி நெருங்கியிருந்தால், உடனே நடவடிக்கை எடுங்கள்.
வாழும் சூழலுக்கேற்ப வீடு இடம்பெயர்வது தவிர்க்க இயலாதுதான். அதே நேரம் அதற்கேற்ப நாமும் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பல ஆயிரம் ஆண்டுகள் முன், திருவள்ளுவர் “பொருள் கருவி காலம் வினைஇடனோடைந்து/இருள் தீர எண்ணிசெயல்” (குறள் 675 பொருட்பால்) விந்தையாக அக்குறள் இன்றைய காலத்தில் முற்றிலும் வேறு தன்மையில் பொருந்துகிறது.
Keywords
இடம் பெயர்தல் வீடு மாற்ற