வீடு வாங்க முன் பணம் திரட்டுவது எப்படி?

வீடு வாங்க முன் பணம் திரட்டுவது எப்படி?

tax-benefits-of-second-home-loan2சொந்த வீடு வாங்கும் எல்லோரும் கையில் காசை வைத்துக்கொண்டு வாங்குவதில்லை. வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடனை வாங்கியே பலரும் சொந்த வீட்டை வாங்குகிறார்கள். ஆனால், வங்கிகள்கூட வீடு வாங்க கேட்கும் முழுத் தொகையையும் வழங்கிவிடுவதில்லை. 80 சதவீதத் தொகையை வங்கிகள் வழங்கும். எஞ்சிய 20 சதவீதத் தொகையை நம் கையிலிருந்துதான் வழங்க வேண்டும். இந்த 20 சதவீதத் தொகையைத் திரட்டுவதற்குள் பலருக்கும் போதும்போதும் என்றாகிவிடும். ஆனால், இந்த 20 சதவீதத் தொகையைத் திரட்டச் சில எளிய வழிமுறைகள் உள்ளன. அதைத் திட்டமிட்டுச் செயல்படுத்தினால், சிரமமில்லாமல் தொகையைத் திரட்டிவிடலாம்.

உதாரணமாக 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்குகிறோம் என்றால், நம் கையிலிருந்து 4 லட்சம் வரை கொடுக்க வேண்டியிருக்கும். இது இல்லாமல் பத்திரப் பதிவு செலவுக்கு என சுமார் 1 லட்சம் செலவாகும். வீடு வாங்க நினைக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டுவது என்பது கடினமான காரியம்தான். இதுபோன்ற பெரிய தொகையைத் திரட்டப் பெரும்பாலும் வீட்டில் உள்ள நகைகளை விற்று விடுவார்கள் அல்லது அடமானம் வைத்துவிடுவார்கள். அதையும் மீறி வட்டிக்குக் கடன் வாங்குதல், பூர்விக நிலத்தை விற்பது எனப் பல்வேறு நடவடிக்கைகளை நடுத்தரக் குடும்பங்கள் மேற்கொள்ளும். ஆனால், இப்படி இல்லாமல் வேறு வழியில் இந்தத் தொகையைத் திரட்டலாம். ஆனால், இதை உடனடியாகத் திரட்ட முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.

வாடகை வீட்டில் இருக்கும் ஒருவர் சொந்த வீடு வாங்க வேண்டும் என முடிவு செய்வதாக வைத்துக்கொள்வோம். அதற்கான முன்பணத்தை அவர் எப்படித் திரட்டலாம் என்று பார்ப்போம். சென்னை போன்ற பெரு நகரங்களில் வீட்டு வாடகை சராசரியாக 6 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரை இருக்கும். எனவே, மாதந்தோறும் இந்தத் தொகையைச் சேமித்தால் குறிப்பிடத்தக்க அளவு பணத்தைச் சேமிக்கலாம். வாடகைக்கு இருந்துகொண்டு அதெப்படி சாத்தியம்?

வாடகை வீட்டில் குடியிருந்தால் ஒவ்வொரு மாதமும் அதற்கான வாடகையை வழங்கித்தான் ஆக வேண்டும். இதுவே வீட்டைக் குத்தகைக்கு (லீஸ்) எடுத்தால் பணம் மிச்சமாகும். எல்லா ஊர்களிலுமே வீட்டை லீஸூக்கு விடுவது பழக்கத்தில் உள்ளது. வீட்டை 2 அல்லது 3 லட்சம் ரூபாய்க்கு லீஸ் எடுத்து 2 ஆண்டுகள் வரை வீட்டில் குடியிருக்க முடியும். லீஸ் காலம் முடியும்போது வீட்டை லீஸூக்கு விட்டவர் நாம் வழங்கிய பணத்தைத் திரும்பவும் வழங்கிவிடுவார். இந்தக் காலகட்டத்தில் மாதந்தோறும் வாடகைப் பணமும் நாம் வழங்கியிருக்க மாட்டோம். இந்த வாடகையையும் வங்கியில் செலுத்தி சேமித்துவந்தால், இரண்டு ஆண்டுகள் கழித்து நம் கையில் பெருந்தொகை இருக்கும். பணத்தைத் திரட்ட இது ஓர் வழி.

சரி, வீட்டை லீஸூக்கு எடுக்க குறிப்பிட்டத்தக்க தொகை வேண்டுமே, அதற்கு எங்கே போவது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கு இன்னொரு வழி உள்ளது. உதாரணமாக 6 ஆயிரம் ரூபாய் மாத வாடகை உள்ள ஒரு வீட்டை லீசுக்கு எடுக்க அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய்வரை தேவைப்படலாம். இதுபோன்ற சமயத்தில் சம்பந்தப்பட்ட நபர், வங்கியில் தனி நபர் கடன் பெறலாம். இந்தக் கடனை மாதந்தோறும் செலுத்திவிடலாம். வாடகை கொடுப்பதற்குப் பதிலாக இந்தத் தொகையை மாத தவணையில் கடனை அடைக்கலாம். ஒருவர் 2 லட்சம் ரூபாய் தனி நபர் கடன் பெற்று, அதனை 2 ஆண்டுகளில் செலுத்துவதாக இருந்தால், அதிகபட்சமாக மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு வீட்டுக்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய்வரை வாடகை கொடுக்கும் ஒருவர், மாதம் தோறும் வாடகை கொடுக்காமல் 10 ஆயிரம் ரூபாய் செலுத்துவது ஓரளவுக்கு சாத்தியமான விஷயம்தான்.

இதில், சாதகமான விஷயம் என்னவென்றால், 2 ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் லீசுக்கு எடுத்த வீட்டுக்காக வங்கியில் கடன் 2 லட்சம் ரூபாய் அவருக்கு முழுவதும் சொந்தமாகிவிடும். வங்கிக் கடனுக்கான மாதாந்தரத் தவணையும் 2 ஆண்டுகளில் முடிந்து விடும். அதற்குப் பிறகு ஒரு ஆண்டில், அதே லீஸ் வீட்டில் தங்கும் பட்சத்தில், வாடகைத் தொகை அல்லது வங்கிக் கடனுக்கான மாதத் தவணை செலுத்த வேண்டியிருக்காது. எனவே அவரால் அந்த ஒரு ஆண்டில் மேலும் ஒரு லட்சம் ரூபாய் சேர்த்துவிட முடியும். ஒரு வீட்டை லீசுக்கு எடுத்த 3 ஆண்டுகளில், அந்த நபரிடம் 3 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கையிருப்பு இருக்க வாய்ப்புண்டு. முன் பணம் சேமிக்க இதுவும் ஒரு வழிமுறை.

ஒருவேளை கையில் தொகை இருந்தும் வீடு வாங்குவது தள்ளிப்போனால், இந்தத் தொகை செலவாகிவிடுமே எனக் கவலைப்படத் தேவையில்லை. அந்தப் பணத்துடன், மேலும் ஒரு லட்சத்தைச் சேர்த்து வேறு ஒரு வசதியான வீட்டை, லீஸூக்கு எடுத்துக்கொள்ள முடியும் அல்லது அதே வீட்டில் இருக்க விரும்பினாலும் இருக்க முடியும். அதற்கு வீட்டின் உரிமையாளரிடம் பேசி லீஸ் தொகையை அதிகரித்துக்கொள்ளலாம். இது இரண்டு விதங்களில் லாபமளிக்கும். முதலில் லீஸ் தொகை அதிகரிப்பதால், வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை வேறொருவருக்கு வாடகை அல்லது லீஸூக்குவிட விரும்ப மாட்டார். இரண்டாவது, லீஸ் தொகையை அதிகரிப்பதன் மூலம், சம்பந்தப்பட்ட நபருக்கு, அதிக அளவு தொகை அந்த வீட்டைக் காலி செய்யும்போது கிடைக்கும். அதோடு வாடகைப் பணமும் மிச்சமாகும்.

இப்படிக் கையிலிருக்கும் தொகையைக் கொண்டு எப்போது வேண்டுமானலும் வங்கியில் எஞ்சிய தொகையைக் கடனாக வாங்கி சொந்த வீட்டை வாங்கிவிட முடியும். ஆனால், நீண்ட காலத் திட்டத்தின்படியே இந்த வழிமுறையைச் செயல்படுத்த முடியும். குறுகிய காலத்தில் வீடு வாங்குவது என்றால் முடியாது.

Leave a Reply