வீட்டின் தோற்றத்தை மாற்ற வேண்டுமா?
நீண்டகாலமாக வீட்டின் தோற்றத்தை மாற்ற வேண்டும் என்று மாற்ற வேண்டும் நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? ஆனால், நேரம் கிடைக்கவில்லை, எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை என்று தயங்கிக்கொண்டிருக்கிறீர்களா? வீட்டுக்குப் புத்துணர்ச்சியான அலங்காரம் செய்வதொன்றும் அவ்வளவு பெரிய கடினமான வேலையல்ல.
வார இறுதியில் கொஞ்சம் மனதுவைத்து நேரம் ஒதுக்கினாலே போதும். உங்கள் வீட்டின் தோற்றத்தைப் புத்தும்புதிதாக மாற்றிவிடலாம். வீட்டின் தோற்றத்தை மாற்றுவதற்கு சில யோசனைகள்…
பூக்களே தொடக்கம்
பூக்கள் இல்லாத அலங்காரம் முழுமை பெறாது. அதனால், உங்கள் வீட்டின் வரவேற்பறையில் உள்ள பூச்சாடி பொலிவிழந்து போயிருந்தால் அதை மாற்றுங்கள். வீட்டில் பூச்சாடியே இல்லையென்றால் புதிதாக ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். தினமும் காலையில் உங்களுக்குப் பிடித்த பூக்களைப் பிடித்த வண்ணங்களில் போட்டுவையுங்கள். இது உங்கள் வீட்டை வண்ணமயமாக மாற்றுவதுடன், உங்கள் நாளையும் வண்ணமயமாக மாற்றும்.
இடமாற்றம் நல்லது
நீண்ட காலமாக ஒரே இடத்தில் வைத்திருக்கும் அறைக்கலன்களை நகர்த்தி வேறுவிதமாக வையுங்கள். இப்படி அறைக்கலன்களை மாற்றிவைப்பது வீட்டுக்கு உடனடியாகப் புதிய தோற்றத்தைக் கொடுக்கும்.
புதிய வண்ணம்
வீட்டின் அலமாரிகளுக்கு முடிந்தால் உங்களுக்குப் பிடித்த ‘பளிச்’ வண்ணத்தை அடியுங்கள். வண்ணமடிக்கப் பிடிக்கவில்லையென்றால் இப்போது புதிதாகக் கிடைக்கும் ‘பேட்டர்ன் வால்பேப்பர்’களை அலமாரிகளுக்கு உட்புறத்தில் ஒட்டலாம்.
வாசகங்களாலும் அலங்கரிக்கலாம்
வாசலில் உங்களுக்குப் பிடித்த, உங்களை வெளிப்படுத்தும் வாசகங்கள் இருக்கும் மிதியடியை வாங்கிப் போடுங்கள். இது வீட்டுக்குள் நுழையும்போது உங்களுக்கு மட்டுமல்லாமல் வீட்டுக்குப் புதிதாக வருபவர்களுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
குளியலறைத் துண்டுகள்
குளியலறைத் துண்டுகளைப் புதிதாக மாற்றுங்கள். இந்தத் துண்டுகள் கண்களைக் கவரும் வண்ணங்கள் இருப்பது நல்லது. குழந்தைகளுக்கும் ஏற்ற மாதிரி ‘கார்ட்டூன்’ கதாபாத்திரங்கள் இருக்கும் புதிய துண்டுகளை வாங்கி வையுங்கள்.
நுழைவாயில் முக்கியம்
நுழைவாயிலில் வைத்திருக்கும் காலணிகள் அடுக்கி வைக்கும் அலமாரிகள் பழையதாகிவிட்டால், அதை யோசிக்காமல் மாற்றிவிடுங்கள். இப்போது நிறைய புதிய வடிவமைப்புகளில் குறைந்த விலையில் காலணி அலமாரிகள் கிடைக்கின்றன. அத்துடன், வாசலில் பொருட்கள் வைத்திருக்கும் அலமாரிகளின் தோற்றத்தையும் மாற்றுங்கள்.
கதவுகள் செய்யும் மாயம்
உங்கள் வீட்டின் கதவுகள் பல ஆண்டுகளாக ஒரே வண்ணத்தில் இருக்கின்றனவா? கதவுகளைப் பல வண்ணங்களில் வடிவமைக்க இப்போது வழிகள் இருக்கின்றன. இரண்டு ‘கான்டராஸ்ட்’ வண்ணங்களை வைத்துக் கதவுகளில் புதுமையாக வடிவமைக்கலாம்.
புதிய திரைச்சீலைகள்
சந்தையில் இப்போது ‘கிராஃபிக் ஃப்ளோரல்’ வடிவமைப்பு திரைச்சீலைகள் பிரபலமாக இருக்கின்றன. ஜன்னல்களுக்கு இந்த வகையான திரைச்சீலைகளைப் பயன்படுத்துவது வீட்டுக்கு உடனடியாகப் புத்தம்புதுத் தோற்றத்தைக் கொடுக்கும்.
சுவர்களிலும் வாசகங்கள்
வீட்டின் சுவர்களை அலங்கரிக்க ‘வால்பேப்பரை’ மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஒரு வெள்ளை ‘கார்ட்’டில் அச்சடிக்கப்பட்ட அழகான வாசகங்களை ஒட்டிவைக்கலாம். இவற்றை ‘டைபோகிராஃபிக் பிரின்ட்ஸ்’ என்று சொல்கிறார்கள். உங்களுக்குப் பிடித்தமான வாசகங்களை இணையத்தில் ‘டவுன்லோட்’ செய்து அச்சகத்தில் கொடுத்து அச்சடித்து வாங்கிக்கொள்ளலாம்.
தரைவிரிப்புகளும் பேசும்
அறையின் தரைவிரிப்பை மாற்றினால் அதுவே அறைக்கு ஒரு அட்டகாசமான தோற்றத்தைக் கொடுத்துவிடும். அடர்நிறங்களில் ‘ஜியோமெட்ரிக்கல்’ வடிவமைப்பில் கிடைக்கும் தரைவிரிப்புகள் இப்போதைய டிரண்டாக இருக்கின்றன.
வீட்டுச் செடிகள்
வீட்டுக்குள் செடிகளை இதுவரை வளர்க்கவில்லையென்றால், இனிமேல் வளர்க்கத் தொடங்குங்கள். செடிகளின் பசுமை வீட்டின் தோற்றத்தை மாற்றுவதற்கு எளிமையான வழி. அத்துடன், வீட்டுக்குள் வரும் காற்றை இந்தச் செடிகள் சுத்தப்படுத்துவதால் இப்போது வீட்டுக்குள் செடி வளர்க்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது.