வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளும் கொரோனா நோயாளிக்ள் என்ன செய்ய வேண்டும்?

கொரோனாவின் லேசான பாதிப்பிற்கு ஆளாவோர் உடனடியாக மருத்துவமனைகளுக்கு வரத்தேவையில்லை. அவர்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம். இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

லேசான பாதிப்பில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்களுக்கு 7 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் நீடித்தால் டாக்டரை கலந்தாலோசித்து குறைந்த அளவிலான ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.

* 60 வயதுக்கு மேற்பட்டோர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நாள்பட்ட நுரையீரல் அல்லது கல்லீரல் அல்லது சிறுநீரக நோய், பெருமூளை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவாலும் பாதிக்கப்படுகிறபோது, டாக்டரின் ஆலோசனை பெற்றுத்தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆக்சிஜன் செறிவு குறைந்தால், மூச்சுத்திணறலால் அவதியுற்றால் உடனே ஆஸ்பத்திரியில் சேர்ந்து விட வேண்டும்.

* வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் சூடான நீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும் அல்லது 2 முறை ஆவி பிடிக்க வேண்டும்.

* தினமும் 4 முறை பாரசிட்டமால் 650 மி.கி. மாத்திரை எடுத்தும் காய்ச்சல் குறையாதபோது, டாக்டரை கலந்தாலோசிக்க வேண்டும். அவர் தினமும் 2 முறை நாப்ராக்சன் 250 மி.கி. மாத்திரை எடுக்க பரிந்துரைக்கலாம்.

* 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல் தொடர்ந்தால் புடசோனைட் மருந்தை தினமும் 2 முறை வீதம் 5 முதல் 7 நாட்களுக்கு இன்ஹேலர் மூலம் உள்ளிழுக்க வேண்டும்.

கொரோனா வைரஸ்

* ரெம்டெசிவிர் போன்ற மருந்தை டாக்டர் பரிந்துரை பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் ஆஸ்பத்திரி அமைப்பில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* கொரோனா நோயாளியை வீட்டில் கவனிப்போர், நெருங்கிய தொடர்பில் இருப்போர் நெறிமுறைகள்படி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* நோயாளிகள் வீட்டில் நல்ல காற்றோட்டமுள்ள அறையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். எப்போதும் அவர்கள் 3 அடுக்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நோயாளியும், பராமரிப்பாளரும் என்-95 முகக்கவசம் அணிவது நல்லது.

* எச்.ஐ.வி. நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், புற்றுநோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் டாக்டர்களின் மதிப்பீட்டுக்குப் பின்னர்தான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள பரிந்துரைக்கப்படுவார்கள்.

* நோயாளிகள் வீட்டில் நன்றாக ஓய்வு எடுப்பதுடன் நிறைய பானங்களை குடிக்கலாம்.

* வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட நோயாளிகள் உடல்நிலை மோசமடைந்தால் உடனே டாக்டரிடம் தெரியப்படுத்த வேண்டும்.

* வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள் அறிகுறிகள் தோன்றி 10 நாட்களான பின்னர் அல்லது அறிகுறியற்றவர்கள் கொரோனா மாதிரி எடுக்கப்பட்ட 10 நாட்களுக்கு பின்னர், 3 நாட்கள் காய்ச்சல் இல்லாத நிலையில் வெளியே வந்துவிடலாம். வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டது முடிவு அடைந்தபின்னர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply