வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு: உங்களுக்கு என்ன பலன்?

வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு: உங்களுக்கு என்ன பலன்?

நவம்பர் மாதத்தில் 500 மற்றும் 1000 நோட்டுகள் பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று பொதுவாகப் பேசப்பட்டு வந்தது. பண மதிப்பு நீக்கத்தின் மூலம் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியதால், தற்போது வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்துள்ளன.

வழக்கமாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை (ரிசர்வ் வங்கியிடம் வணிக வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம்) குறைக்கும்போதெல்லாம் வீட்டு வட்டிக் கடன் குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்படுவது வாடிக்கை. இப்போது வங்கிகள் தானாகவே வட்டிக் குறைப்பைச் செய்திருக்கின்றன. வீட்டுக் கடன் குறைப்பு மூலம் இது யாருக்குப் பயன் தரும்? வீட்டுக் கடன் குறைப்பின்போது தவணைத் தொகை குறையுமா அல்லது தவணைக் காலம் குறையுமா?

தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டியை எஸ்பிஐ, ஐசிஐசிஐ உள்ளிட்ட பல வங்கிகளும் ஹெச்டிஎப்சி, இந்தியா பில்ஸ் போன்ற வீட்டு வசதி நிறுவனங்களும் கணிசமாகக் குறைத்துள்ளன. பொதுவாக வீட்டுக் கடனுக்கான வட்டிக் குறைப்பு என்பது வாடிக்கையாளர்களுக்குச் சாதகமான அம்சமே. எப்போதுமே வீட்டுக் கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கும்போது தவணைத் தொகை குறையாது. தவணைக் காலம்தான் குறையும். தற்போதைய வட்டிக் குறைப்பு மூலம் சுமார் 30 முதல் 36 மாதங்கள் தவணையில் குறைய வாய்ப்பு உள்ளது. அதாவது, ஒருவர் 20 ஆண்டு கால தவணையில் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், 17 ஆண்டுகள் தவணையைச் செலுத்தினால் போதுமானது.

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். இது வீட்டுக் கடனைக் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு உதவுமா? தற்போதைய நிலையில் 25 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என்ற கால அவகாசத்தில் தவணையைச் செலுத்துபவர்களுக்கு நிச்சயமாக உதவும். ஆனால், கடனைத் திரும்பக் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளவர்களுக்குப் பெரிய அளவில் பயன் இருக்காது.

இப்போது பெரும்பாலும் வீட்டுக் கடன்கள் மாறுபடும் வட்டி (ஃப்ளோட்டிங் ரேட்) விகிதத்திலே வழங்கப்படுகின்றன. வட்டிக் குறைப்பு செய்யப்படும்போது மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்கு தவணைத் தொகை மாறாமல் பழைய நிலையிலே தொகை வசூலிக்கப்படும். ஆனால், தவணைக் காலம் குறைக்கப்படும். இதற்கு முன்பு நிலையான வட்டி விகிதத்திலும் (ஃபிக்ஸட் ரேட்) கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்படி நிலையான வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்களுக்குத் தவணைத் தொகையும் குறையாது. தவணைக் காலமும் குறையாது. பொதுவாக நிலையான வட்டி விகிதம் 3 அல்லது 5 வருடங்களுக்கு நிர்ணயிக்கப்படும். இதன் பிறகு, வேண்டுமானால் மாறுபடும் வட்டி விகிதத்துக்கு மாறி அன்றைய நிலவர கடன் வட்டி விகிதத்துக்கு மாறிகொள்ளலாம்.

ஆனால், இந்த வட்டிக் குறைப்பு புதிதாகக் கடன் பெறுபவர்களுக்கு நிச்சயம் பயன் அளிக்கும். எடுத்த எடுப்பிலேயே அவர்கள் குறைவான வட்டி விகிதத்தில் கடன் பெறுவார்கள் என்பதால் தவணைத் தொகையும் குறைவாகவே இருக்கும்.

வட்டிக் குறைப்பில் சில வங்கிகள் வேறு விதத்தில் செயல்படுகின்றன. ஏற்கெனவே பழைய வட்டி விகிதத்தில் கடன் பெற்றவர்களுக்குப் பெயரளவில் வட்டிக் குறைப்பைச் செய்துவிட்டு, வாடிக்கையாளர் தாமாக முன்வந்து முழு வட்டிக் குறைப்பைச் செய்துகொள்ள வைக்கின்றன. உதாரணத்துக்கு இப்போது வட்டி விகிதம் 8.90 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதாக வைத்துக்கொள்வோம். ஏற்கெனவே ஒருவர் 9.65 சதவீதத்துக்கு தவணை செலுத்தி வந்தால், தற்போது 9.50 சதவீதமாக வட்டியை வங்கிகள் குறைத்துவிடுகின்றன. ஆனால், 8.90 சதவீதமாகக் குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தைப் பெற புதிய வட்டி முறைக்கு மாற சொல்கின்றன. அப்படி மாறும்போது அதற்குச் சில கட்டணங்களையும் வங்கிகள் வசூலிக்கின்றன.

தற்போது ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமாக வட்டியைக் குறைத்துள்ளதால், வங்கி மாறிக்கொள்ளாமா என்ற எண்ணமும் வரக்கூடும். நிலையான வட்டி விகிதத்தில் கடன் வாங்கி வட்டிக் குறைப்பின் பயன் கிடைக்காதவர்களுக்கு இந்த எண்ணம் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். ஆனால், கடன் பெற்ற வங்கியிலே தொடர்­வதா அல்­லது வேறு வங்­கிக்கு மாறு­வதா என்பதைத் தீர்­மா­னிக்கும் முன்பு, கடனுக்கான வட்டி விகிதம் மற்றும் பலன்­களை ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுப்பது அவசியம். குறைந்தபட்சம் ஒரு சதவீதம் அளவுக்கு வட்டி விகிதம் குறையும் என்றால் மாறலாம். அதற்கும் குறைவு என்றால் அதைத் தவிர்ப்பதே நல்லது. மேலும் வங்கி மாறும்போது சேவை வரி, பரிசீலனைக் கட்டணம், புதிதாக பத்திர அடமானம் கட்டணம் என செலவும் பிடிக்கும். இதையெல்லாம் யோசித்து முடிவெடுப்பது நல்லது.

Leave a Reply