வீட்டு லோனை அடைக்க எத்தனை வருடங்கள் அவகாசம் எடுத்து கொள்ளலாம்?

வீட்டு லோனை அடைக்க எத்தனை வருடங்கள் அவகாசம் எடுத்து கொள்ளலாம்?

இன்று வீடு வாங்குபவர்களில் பெரும்பாலும் லோன் போட்டு தான் வாங்கி வருகின்றார்கள். ஆனால் அதே நேரத்தில் நீண்ட கால தவணையில் வீடு வாங்குவது சரியா? குறுகிய காலத்தில் வீட்டு லோனை அடைப்பது சரியா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்

வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கியது சரி. வாங்கிய வீட்டுக் கடனை எப்போது அடைப்பது? பெரும்பாலும் பலரும் இ.எம்.ஐ. தொகை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக நீண்ட காலத்துக்கு தவணையைச் செலுத்தவே விரும்புகிறார்கள். ஒரு வேளை வீட்டுக் கடன் வாங்கியவர் 35 வயதுக்குள் இருந்தால், வங்கிகளும் வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்த அவருக்குத் தாராளமாக அவகாசம் அளிக்கின்றன. இ.எம்.ஐ.யை அடைக்க 20 அல்லது 25 ஆண்டுகள் எடுத்துக்கொள்வது லாபமா?

முன்பைவிட இப்போது வீட்டுக் கடன் வழங்குவது அதிகரித்திருக்கிறது. வங்கிகள் போட்டிபோட்டுக்கொண்டு வட்டிக் குறைப்பு செய்கிறார்கள். குறிப்பாக 2016-ம் ஆண்டுக்குப் பிறகு வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்தும் திறனும் வங்கிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்துவிட்டால், வீட்டுக் கடனை எளிதாகப் பெற்றுவிடலாம். வயது குறைந்தவர்களுக்கு வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த 25, 30 ஆண்டுகளுக்கு வங்கிகள் அவகாசம் வழங்குகின்றன. நீண்ட காலத்துக்கு வீட்டுக் கடனைத் திரும்பி செலுத்தும்போது அதில் சாதகம், பாதகம் என இரண்டு அம்சங்களுமே இருக்கின்றன.

பாதகம்

வீட்டுக் கடனில் மிகப் பெரிய சிக்கல் இருக்கிறது என்றால், அது அதிக அளவில் செலுத்தப்படும் வட்டிதான். உதாரணத்துக்கு ஒருவர் 25 ஆண்டுகளுக்கு 8.50 சதவீத வட்டியில் 30 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். அவருக்கான இ.எம்.ஐ. மாதந்தோறும் 24,157 ரூபாய். ஒரு வேளை அவர் 25 ஆண்டுகளுக்கும் இ.எம்.ஐ. செலுத்துகிறார் என்றால், வங்கிக்கு முழுவதும் கட்டும் தொகை 72,47,100 ரூபாய். இதில் அசல் தொகையான 30 லட்சத்தைக் கழித்துவிடுங்களேன். அப்படி என்றால், 25 ஆண்டுகளுக்குச் செலுத்தப்படும் வட்டித் தொகை மட்டுமே 42,47,100 ரூபாய். அதாவது அந்த நபர் வாங்கிய கடனைவிட சுமார் ஒன்றரை மடங்கு அதிகமாக வட்டி கட்ட வேண்டியிருக்கும்.

அதாவது வீட்டுக் கடனை நீண்ட காலத்துக்குக் கட்டும்போது வட்டித் தொகையை அதிகமாக செலுத்தக்கூடிய ஆபத்து தொடர்ந்துகொண்டே இருக்கும். 8.50 சதவீதத்தில் கடன் வாங்கியிருப்பீர்கள். பணவீக்கம், பொருளாதார நிலையைக் காரணம் காட்டி வட்டி விகிதம் இடையிடையே உயரவும் செய்யலாம். அப்படி வட்டி விகிதம் உயர்ந்தால், செலுத்தப்படும் இ.எம்.ஐ. தொகை கூடுதலாகும் அல்லது கடனைத் திரும்பச் செலுத்தும் காலத்தை மேலும் நீட்டித்துவிடுவார்கள். கடனை கட்டி முடிக்கும்வரை இந்த ஆபத்து இருந்துகொண்டே இருக்கும்.

சாதகம்

சிலர் வருமான வரிக்குக் கணக்குக் காட்ட முதலீடுகள் பெரிய அளவில் இருக்காது. நீண்ட காலத்துக்கு தவணையைச் செலுத்தும்போது அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை செலுத்தும் வட்டிக்கு விலக்குப் பெறலாம். அது 25 ஆண்டுகள் வரை கிடைக்கும் என்பது சாதகமான அம்சம்தான். ஆனால், குறைந்த தொகை விலக்கு பெறுவதற்காக அதிக அளவில் வட்டி கட்டுவது ஏற்புடையது அல்ல.

வழி என்ன?

வீட்டுக் கடனில் கூடுதல் வட்டியைச் செலுத்துவதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் சில வழிகளும் உள்ளன. வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்த 25 ஆண்டுகள்வரை அவகாசம் வாங்கியிருந்தாலும், கையில் பணம் கிடைக்கும்போதெல்லாம் அதைக் கொண்டு கடனை அடைத்துக் கொண்டே வர வேண்டும். இதனால் கடன் காலத்தைக் குறைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

குறைந்த இ.எம்.ஐ., வருமான வரி விலக்கு எனச் சில சலுகைகளுக்காக வீட்டுக் கடனை நீண்ட காலத்துக்கு செலுத்துவது நல்லதல்ல. விரைவாக வீட்டுக் கடனைச் செலுத்தி முடித்தால், இ.எம்.ஐ. தொகையை சேமிப்பாக மாற்றிக்கொள்ளலாம். இன்னொன்று, 30 லட்ச ரூபாயில் வாங்கிய வீட்டுக்கு முழுமையாக 72 லட்ச ரூபாயைச் செலுத்தினால், 25 ஆண்டுகள் கழித்து அந்த வீட்டின் மதிப்பு 72 லட்ச ரூபாய் அளவுக்கு உயர்ந்தால் மட்டுமே உங்களுடைய அசலுக்கு உத்திரவாதம் கிடைக்கும். இல்லையென்றால், சொந்த வீடு இருக்கிறது என்ற திருப்தியோடு இருந்துகொள்ள வேண்டியதுதான்.

Leave a Reply