வீட்டை அழகாக்கும் விளக்குகள்

வீட்டை அழகாக்கும் விளக்குகள்

வீட்டுக்குள் அழகைத் தருபவை வண்ணங்கள் மட்டுமல்ல, விளக்குகளும்தான். ஆனால் முன்புபோல எல்லா அறைகளுக்கும் ஒரேவிதமான விளக்குகளைப் பயன்படுத்தாமல் ஒவ்வொரு அறைக்கும், பயன்பாட்டுக்கும் தகுந்தாற்போல் வெவ்வேறு விதமான விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

அறைக்குத் தேவையான ஒட்டுமொத்த வெளிச்சத்தையும் தரப் பயன்படும் விளக்குகளை முதன்மை விளக்குகள் என்கிறார்கள். வீட்டின் மையத்தில் இந்த விளக்குகள் பொருத்தப்படும்.

இந்த விளக்கின் வெளிச்சம் அந்த அறையில் புழங்குபவர்கள் மனநிலையை இதமாக்க உதவும். எனவே மனத்திற்கு இதமான உணர்வைத் தரும் விளக்குகளை இப்படியான அறைகளில் பொருத்துவது நல்லது.

பெரும்பாலும் இத்தகைய விளக்குகள் தேவாலயங்களில் காணப்படுவது போல் அறையின் நடுவில் வீட்டின் கூரைகளின் உட்புறம் தொங்க விடப்படும். இந்த விளக்குகளில் வெளிச்சம் பிரகாசமாக இருக்க வேண்டும் அதே சமயத்தில் அறையில் உள்ளவர்கள் கண்களைக் கூசவைக்ககூடிய அளவில் அதிக பிரகாசமும் நல்லதல்ல.

ஆகவே முதன்மை விளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னர் இதைப் போன்ற விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அன்றாட வேலைகளை மேற்கொள்ள, வேலைக்கான விளக்குகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வேலைகளைப் பார்க்கத் தேவையான வெளிச்சத்தை நமக்களிக்கும் விளக்குகள் இவை.

குறிப்பிட்ட ஒரு பகுதியில் செறிவான ஒளியைப் பெற இந்த விளக்குகளே பயன்படும். எடுத்துக்காட்டாக அறையில் அமர்ந்து படிக்கும்போது அறை விளக்கை ஒளிரவிடுவதைவிட மேசை விளக்கை ஒளிர விட்டுப் படிப்பதால் நமது புத்தகத்திற்குப் போதுமான வெளிச்சம் அதன் மேல் வந்துவிழும்.’

புத்தகத்தின் மீது போதிய வெளிச்சம் விழுந்தால் உறுத்தலின்றிப் படிக்க முடியும். இதேபோல் ஒப்பனை செய்துகொள்ளும் கண்ணாடி முன் நிற்கும்போது நம்மீது செறிவான வெளிச்சம் விழ உதவுபவையும் இத்தகைய விளக்குகளே. நிழல்விழாத வகையில் இவை அமைக்கப்பட வேண்டும். இவற்றின் வெளிச்சத்தால் கண்கள் கூசக் கூடாது மங்கலாக இருந்துவிடவும் கூடாது.

வீட்டை அழகுப்படுத்த சுவர்களில் ஓவியம், காட்சிப் பொருள்கள் போன்றவற்றைத் தொங்க விட்டிருப்போம். இவற்றின் மீது வெளிச்சத்தைப் படர விட்டுக் காண்போரைக் கவர்ந்திழுக்க இந்த விளக்குகள் உதவும்.

இந்த விளக்குகள் அலங்கார விளக்குகள் என அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் இவை கண்களை ஈர்க்கும் வகையிலும், அதே நேரத்தில் கண்களுக்குக் குளுமையான உணர்வைத் தரும் வகையிலும் அமைய வேண்டியது அவசியம்.

வீட்டின் முகப்பில் அமைக்கும் விளக்குகளை வரவேற்பறை விளக்குகள் என அழைக்கிறோம். வீடுகளின் நுழையும் நண்பர்களும் விருந்தினர்களும் வந்தமருவது வரவேற்பறையிலேயே.

ஆகவே இங்கு ரம்மியமான ஒளி படர்ந்திருந்தால் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு சந்தோஷமான உணர்வு கிடைக்கும். மிதமான வெளிச்சம் தரத்தக்க விளக்குகளை இந்த அறையில் இடம்பெறச் செய்ய வேண்டும். கலைநயமிக்க அலங்காரமான விளக்குகளை இங்கு பொருத்தினால் நமது ரசனை வெளிப்படும்.

நண்பர்களிடம் நமது மதிப்பும் உயரும். குறைந்த அடர்த்தி கொண்ட ஒளியைத் தரும் ஹேலோஜன் விளக்குகளை இங்கு பொருத்தலாம். ஒளியைக் கூட்டிக் குறைக்கும் வகையிலான விளக்குகளை இங்கு அமைத்தால் தேவையைப் பொறுத்து நாம் வெளிச்சத்தைக் கூட்டிக்கொள்ளவோ குறைத்துக்கொள்ளவோ முடியும்.

சமையலறையில் பயன் படுத்தப்படும் விளக்குகள் சமையல் மேடையை நன்கு ஒளியூட்ட வேண்டும். அதேபோல் அறை முழுவதும் நன்கு வெளிச்சம் படர வேண்டியதும் முக்கியம். இந்த அறையுடன் இணைந்திருக்கும் பகுதியில் உணவு மேசைக்கு மேலே தொங்கும் விளக்குகளை அமைத்தால் சாப்பிடும்போது நல்ல வெளிச்சம் கிடைக்கும்

படுக்கையறையில் மெல்லிய வெளிச்சம் பாய்ச்சும் விளக்குகள் அமைய வேண்டும். மனதுக்கு அமைதி தரும் வகையிலான வண்ணத்தில் ஒளியைப் படர விடும் விளக்குகளை இங்கே பொருத்த வேண்டும். குறைந்த ஆற்றலிலும் அதிக வெளிச்சம் தரும் சிஎஃப்எல் பல்புகளைக் குளியலறையில் பொருத்தலாம்.

இதுபோக ஷேவிங் போன்றவற்றுக்கு உதவ வாஷ் பேசின் மேலே வெளிச்சத்தைப் படர விடும் வகையில் பிரத்யேக பல்பைப் பொருத்திக் கொள்ளலாம்.

தனி வீடுகளுக்கு பிரத்யேகமான அழகை அளிக்கவும் விளக்குகள் உதவுகின்றன. வீட்டைச் சுற்றி அமைக்கப்படுபவை இவை. இரவு முழுவதும் ஒளிர வேண்டியவை என்பதால் அதிக மின்னாற்றல் தேவைப்படாத விளக்குகளை இங்கே அமைக்கலாம்.

Leave a Reply