வீட்டை குளிர்ச்சியாக வைக்க சில டிப்ஸ்
வெயில் காலம் ஆரம்பித்துவிட்டதால் உஷ்ணத்தின் தாக்கத்தை சமாளிக்க பல்வேறு தடுப்பு முறைகளை வீடுகளில் கடைப்பிடிப்பது வழக்கம். கத்திரி வெயில் நமது சக்தியை உறிஞ்சிவிட்டது போன்ற உணர்வுதான் நமக்கு மதிய வேளைகளில் ஏற்படும். குளிர்ந்த தண்ணீர் அல்லது குளிர் பானங்களை அடிக்கடி அருந்துவது, பருத்தி ஆடைகள் அணிந்துகொள்வது, இரண்டு முறைகள் குளிப்பது அல்லது மதிய நேரங்களில் வெளியே செல்வதை தவிர்ப்பது என்ற பல்வேறு முறைகளில் வெயில் பாதிப்புகளை தவிர்க்க முயற்சி செய்கிறோம். வீடுகளில் சில விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் வீட்டுக்குள் குளிர்ச்சி நிலவும்படி செய்யலாம். அவை என்னவென்று கவனிக்கலாம்.
• உபயோகம் இல்லாத பொருட்கள், மற்ற குப்பைகள் போன்றவை வீட்டுக்குள் சேரவிடாமல் தடுக்க வேண்டும். அப்படிப்பட்ட பொருட்கள் காற்றோட்டமான வீட்டு சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
• காற்று நன்றாக வந்து செல்லும்படி ஜன்னல்கள் நன்றாக திறந்து வைக்கப்பட வேண்டும். ஒரு பக்கத்திலிருந்து வரக்கூடிய காற்று மறுபக்கம் வெளியே போவது முக்கியம். அதன் வாயிலாக வீட்டுக்குள் இருக்கும் வெப்பமான காற்றும் வெளியே சென்றுவிடும்.
• குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறைகள் தவிர மற்ற அறைகளை காலையும், மாலையும் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு திறந்து வைக்கலாம். அதனால் வெளிப்புறத்தில் உள்ள குளிர்ந்த காற்று வீட்டுக்குள் எளிதாக வரும். வெப்பமான மதிய நேரங்களில் கதவை திறந்து வைப்பது கூடாது. வெளியே உள்ள சூடான காற்று உள்ளே புகுந்து வீட்டுக்குள் வெப்பம் அதிகமாகி விடும்.
• மின்சார சாதனங்களின் பயன்பாட்டை இயன்ற அளவுக்கு குறைத்து விடுவது முக்கியம். அவற்றின் தொடர்ந்த பயன்பாடு காரணமாக வீட்டுக்குள் வெப்ப நிலை அதிகமாகும். டி.வி பார்க்காதபோது அதன் மின் இணைப்பை நிறுத்தி விடவும். டியூப் லைட், மைக்ரோவேவ் ஓவன் ஆகியவற்றையும் பயன்பாட்டில் இல்லாதபோது மின் இணைப்பை துண்டித்து வைக்க வேண்டும்.
• பால்கனி மற்றும் ஜன்னல்களுக்கு மூங்கிலால் வடிவமைக்கப்பட்ட தட்டிகளை திரையாக பயன்படுத்தலாம். அவ்வப்போது அவற்றின் மீது நீர் தெளித்து வைத்தால் காற்று குளிர்ச்சியாக உள்ளே வருவதற்கு உதவியாக இருக்கும். வீடும் குளுகுளுவென இருக்கும்.
• மின் விசிறிகள், மற்ற ‘எக்ஸ்ஹாஸ்ட் பேன்கள்’ ஆகியவற்றை அவ்வப்போது துடைத்து தூசிகள் இல்லாமல் சுத்தமாக பராமரிப்பது அவசியம்.
• பழைய குண்டு பல்புகள் வீட்டில் இருந்தால் அதை மாற்றிவிட வேண்டும். எரியும்போது அவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பத்தால் அறைகளின் உஷ்ணம் அதிகமாகும். அதற்கு மாற்றாக சி.எப்.எல் பல்புகள் அல்லது வெண்மை நிற குழல் விளக்குகள் பயன்படுத்துவது நல்லதாகும்.
• வீட்டின் நடுவில் அகலமான மண் தொட்டி அல்லது பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து அவற்றில் பூக்களை போட்டு அலங்கரித்து வைக்க வேண்டும். அது வீட்டில் குளிர்ந்த சூழலை தருவதோடு பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.