வெற்றியாளர்கள் விட்டொழிக்க வேண்டிய 10 குணங்கள்!

வெற்றியாளர்கள் விட்டொழிக்க வேண்டிய 10 குணங்கள்!

வெற்றி அடைய வழிகள், வெற்றிகரமான ஆளாக இருப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் நிறைய படித்திருப்பீர்கள். வெற்றிக்கான சூத்திரங்களை பல வெற்றியாளர்களின் வாழ்வில் இருந்து அறிந்திருப்பீர்கள்.

வெற்றிக்கு, ‘இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்’ என்று இருப்பது போல, செய்யவே கூடாத பட்டியலும் இருக்கிறது. இவற்றைச் செய்பவர்கள் பல விஷயங்களில் தோல்வியே அடைந்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

வெற்றி

எல்லாவற்றிலும் ஏதாவதொரு குறையைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்காதீர்கள்.

நீங்கள் வேலை கொடுத்தவர் ஒரு வேலையை முடித்தால், ‘எல்லாம் சரி… ஆனா இது சரியில்லை.. அது சரியில்லை’ என்று ஏதாவது ஒரு குறை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உங்களுக்கு ஒரு வேலையை யாரும் குடுத்தால், ‘அதெல்லாம் இப்படிப் பண்ணினா சரியா வராதே’ என்று வேலை கொடுத்தவரையே குழப்பாதீர்கள்.

கருணை காட்டாமல் இருக்காதீர்கள்.

யாராவது சின்ன தவறு செய்தாலும் கருணையே காட்டாமல், கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். இன்னொரு முறை அவன் உங்கள் பக்கமே வராத அளவுக்கு உங்கள் நடவடிக்கை இருப்பது, வெற்றிக்கான அடையாளமே அல்ல.

பழைய பாணியை பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்காதீர்கள்.

நீங்கள் செய்யும் துறையில் நிறைய புதிய புதிய டெக்னிக்குகள் வந்திருக்கலாம். ம்ஹும். ‘இப்படித்தான் நான் பலவருடமாகச் செய்து வந்திருக்கிறேன்’ என்று பிடிவாதமாக இருக்காதீர்கள். புதிய முறைகளை வரவேற்று, அவற்றை ஊக்கப்படுத்துங்கள்.

முன்பே முடிவெடுத்துவிடாதீர்கள்.

ஒருவருக்கு ஒரு வேலை கொடுத்திருக்கிறீர்கள். ‘எப்படியும் இப்படித்தான் முடிக்கப்போறான்’ என்று இமேஜ் வளர்த்துக் கொள்ளாதீர்கள். அவர் வேலையை முடித்துவிட்டு வந்ததும், ‘எனக்குத் தெரியும் இதை நீ இப்படித்தான் செய்வன்னு. ஆனா நான் எப்படி எதிர்பார்த்தேன் தெரியுமா?’ என்று ஒரு பெரிய லெக்சர் கொடுத்து அவரை சங்கடத்திற்கு உள்ளாக்காதீர்கள்.

எதுவும் அதுவாக நடக்கும்வரை காத்திருக்காதீர்கள்!

நீங்களாக எதையும் முயன்று செய்யாமல், ‘எப்படியும் அது தானாக நடக்கும்’ என்று காத்திருப்பது மிகவும் தவறு. ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணித்து, மேம்பட உதவுங்கள்.

தோல்வி

எல்லாவற்றிலும் இருக்கும் பிரச்னையைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

எந்த ஒரு திட்டம் ஆரம்பித்தாலும், அதில் ஆரம்பகட்டத்தில் ஒருசில பிரச்னைகள் இருக்கும். அதை ஊதிப் பெரிதாக்கிப் பேசி, ‘இந்தத் திட்டத்தைக் கைவிடலாம் போலயே’ என்று உங்கள் பாஸ் நினைக்கும் அளவுக்கு நடந்து கொள்ளாதீர்கள்.

மறைந்து கொள்ளாதீர்கள்.

எங்கு இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை ரகசியமாகவே வைத்திருப்பது வெற்றியாளர்களின் குணம் அல்ல. எப்போதும் உங்களைத் தேடிக்கொண்டே இருந்தால், வெற்றி உங்களுக்கு எட்டாக்கனி ஆகிவிடும்.

ஒப்பிடாதீர்கள்.

உங்களுக்கு கிடைக்கும் புராஜெக்ட், பதவி உயர்வு, ஊதிய உயர்வு இவற்றையெல்லாம் பிறரோடு ஒப்பிடவே ஒப்பிடாதீர்கள்!

விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக இருக்காதீர்கள்

நீங்கள் எதாவது தவறு செய்துவிட்டாலும், விட்டுக்கொடுக்காமல் ‘அது என் தப்பில்லை’ என்று உறுதியாய் இருந்தால், பலரின் விரோதத்திற்கு ஆளாவீர்கள்.

பேசவிடாமல் தடுக்காதீர்கள்

யாராவது ஒரு விளக்கத்தை அளிக்க முன்வந்தால், அவர்களைப் பேசவிடாமல் உடனடியாக பதில் சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள். அவர்கள் பேசுவதை முழுவதுமாக நீங்கள் கேட்பதே பாதி பிரச்னையைத் தீர்க்கும் என்பதை உணருங்கள்.

Leave a Reply