வேண்டும் வரம் அருளும் விண்ணளந்த பெருமாள்!

வேண்டும் வரம் அருளும் விண்ணளந்த பெருமாள்!


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, கொங்குமண்டலத்தில் பல ஊர்கள் வெப்பத்தின் காரணமாகப் கொடும் பாலை நிலமாக மாறின. அதன் காரணமாகப் பல ஊர்களுக்குக் கொடுமுடி, கொடுமலை, கொடுவாய் என்பது போன்ற பெயர்கள் ஏற்பட்டன.

கொடுவாய் என்பது முற்காலத்தில் கொடுவாயூர், கொடுவாயில், கோட்டை வாயில் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டு, தற்போது `கொடுவாய்’ என்று அழைக்கப்படுகிறது. திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கொடுவாய்.

இந்தத் தலத்தில்தான் வாமனனாக வந்து உலகளந்த பெருமாள், ஸ்ரீவிண்ணளந்த பெருமாள் என்னும் திருப்பெயருடன் காட்சி தருகிறார்.

இந்தக் கோயில் எப்போது, யாரால் எழுப்பப்பட்டது என்பது யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. ஆனால், கோயிலில் உள்ள கல்வெட்டுகளின்படி 10-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் இந்தக் கோயிலைப் புனர்நிர்மாணம் செய்திருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும் கி.பி. 1212-ல் வீர ராஜேந்திரன் என்ற சோழ அரசர் இந்தக் கோயிலுக்கு அர்த்த மண்டபம் கட்டித் தந்ததாகவும் தெரியவருகிறது. கி.பி. 13-ம் நூற்றாண்டு கால கட்டத்தில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்குமான போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்ட கொடுவாயில் இருந்த ஸ்ரீவிண்ணளந்த பெருமாள் கோயில் பாண்டிய படைகளால் சிதைக்கப்பட்டது. பின்னர் கி.பி. 1489-ல் இப்பகுதியை ஆட்சிபுரிந்த குறுநில மன்னர் வீர நஞ்சராயர்தான் இக்கோயிலை மீட்டெடுத்துக் கட்டிமுடித்தார். பல்லாண்டுகள் கழித்து, இவர் காலத்தில்தான் விண்ணளந்த பெருமாள் வீதி உலாவுக்காக எழுந்தருளினார்.

பொதுவாக விண்ணளந்த பெருமாள் ஒரு திருவடியை மகாபலியின் தலையில் வைத்தும், ஒரு திருவடியை விண்ணை அளக்கும் கோலத்திலும்தான் தரிசனம் தருவார். ஆனால், இந்தக் கோயிலில் பகவான் தம் திருவடிகள் இரண்டையும் ஊன்றிய நிலையில் அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அபய ஹஸ்தம் திகழ, அலர்மேலுமங்கை நாச்சியார் சமேதராக அருள்கிறார். தனிச் சந்நிதியில் அருளும் மகாலட்சுமி தாயாரும் சிறந்த வரப்பிரசாதி. கோயிலின் மகா மண்ட பமும் தசாவதார விமானமும் எழிலுடன் திகழ்கின்றன. பகவானின் தசாவதாரத் திருக்கோலங்கள் அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ள காட்சி கண்ணையும் கருத்தையும் கவரும்படித் திகழ்கிறது.

தாமரை பீடத்தில் வராஹர், ஹயக்ரீவர், யோக நரசிம்மர் ஆகிய தெய்வங்களின் சக்தி ஆவாஹனம் செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்ட லட்சுமி நரசிம்மர், தனிச் சந்நிதியில் எழுந்தருளி இருக்கிறார். அவரை ஆலிங்கனம் செய்தபடி தாயார் திருக்காட்சி தருகிறார்.சுவாதி மற்றும் பிரதோஷ தினங்களில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால், பிரச்னைகளால் பிரிந்திருக்கும் தம்பதியரின் பிரச்னைகளைக் களைந்து, அவர்கள் மீண்டும் ஒற்றுமையாக வாழ அருள்புரிகிறார். மேலும் தொழிலில் ஏற்பட்ட கடன்கள் தீரவும், கல்வியில் சிறக்கவும் பக்தர்கள் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வருகிறார்கள்.

இந்த ஆலயத்தில் ஸ்ரீவியாசராயர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர், வாலின் நுனியில் மணியுடன், ஒரு கரத்தில் சௌகந்திகா மலரை ஏந்தியபடியும், ஒரு கரத்தில் பக்தர்களுக்கு வரம் அளிக்கும் வர ஹஸ்தமும் காட்டி அருள்கிறார். இத்திருக்கோயிலில் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் பெரிய கருடன் சந்நிதியும் அமைந்திருக்கிறது. 11 நாகங்கள் கருடனின் உடலைச் சூழ்ந்திருக்க, தன் இரண்டு கரங்களால் நாகர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரிய கருடனை, பஞ்சமி தினத்தில் வழிபட்டால் நாகதோஷம் நீங்கி, திருமண வரம் கிட்டும் என்பது நம்பிக்கை.

இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் கிணறு, 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்ததாகும். வீரசோழன் கலிமூர்க்கன் என்ற அரசன் இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் தாகம் தீர்க்க, மிகப் பெரிய இந்தக் கிணற்றைக் கட்டியிருக்கிறார். இன்றளவும் இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்தக் கிணற்று நீரைப் புனிதத் தீர்த்தமாகவே பருகி வருகிறார்கள்.

இத்திருக்கோயிலில் ஸ்ரீராமாநுஜர் ஜயந்தி, லட்சார்ச்சனை, வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி, மகர சங்கராந்தி, ஆடிப் பெருக்கு, தமிழ் வருடப் பிறப்பு போன்ற முக்கிய விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.

விண்ணளந்த நாயகன் வாமனனாகத் திருக் காட்சி அருளும் ஸ்ரீவிண்ணளந்த பெருமாளைத் தரிசித்து வழிபட்டால், நம் மனதில் இருக்கும் அகந்தையை ஒடுக்கி, பல நன்மைகளை நமக்கு அருள்வார்.

Leave a Reply