வேம்பாக மீனாட்சி… அரச மரமாக சொக்கநாதர்!

வேம்பாக மீனாட்சி… அரச மரமாக சொக்கநாதர்!


மீனாட்சி என்ற பெயரைக் கேட்டதும் ‘நான்மாடக்கூடல்’ எனப் புராணங்கள் போற்றும் மதுரைதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், குமரி மாவட்டத்திலும் மீனாட்சியம்மன் அருளோச்சும் ஒரு புண்ணிய க்ஷேத்திரம் உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ‘பெருவிளை’ எனும் சிற்றூர். இந்த ஊரில்தான் சொக்கநாதரோடு திருக்கோயில் கொண்டிருக்கிறாள் அன்னை மீனாட்சி.

`பரசுராம க்ஷேத்திரம்’ எனப் போற்றப்படும் கர்மபூமியான கேரளாவில், சில நூற்றாண்டுகளுக்கு முன், திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்துவந்தார், மன்னர் ‘மார்த்தாண்டவர்மா’. ஒருநாள் அவரின் பேரனுக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வலியைப் போக்க, ராஜவைத்தியர்கள் பல்வேறு மருத்துவ முறைகளைக் கையாண்டும் பலனளிக்கவில்லை. அந்தத் தருணத்தில் தேவ பிரச்னம் பார்த்தார் மன்னர். சிவ பெருமானுக்கு ‘திருமதுர வழிபாடு’ செய்தால், பேரனின் வயிற்றுவலி குணமாகும் உத்தரவு கிடைத்தது தேவ பிரச்னத்தில். பாலும் தேனும் கலந்து அபிஷேகித்து செய்யப்படும் வழிபாட்டுக்கு திருமதுர வழிபாடு என்று பெயர்.

மன்னர் மார்த்தாண்டவர்மாவும் திருமதுர வழிபாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்யத் துவங்கினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த, அனைத்து சிவத்தலங்களின் பெயர்களையும் சீட்டில் எழுதி, எம்பெருமான் சிவனை வணங்கி சீட்டுக் குலுக்கிப்போட்டு பார்த்தார் மன்னர். அப்போது, ‘நாகர்கோவில் – பெருவிளை’ எனும் ஊரில் அமைந்துள்ள ‘சொக்கநாத ஸ்வாமி’ ஆலயத்தின் திருப்பெயர் வந்தது.

அதன்படியே, இந்தத் தலத்தில் அருளும் சிவபெருமானுக்கு இருமடங்காக ‘திருமதுர வழிபாடு’ (தேனும் பாலும் மட்டுமின்றி, கதலி வாழைப்பழம், சர்க்கரை ஆகியவற்றையும் கலந்து) செய்தார் மன்னர். பின்னர், வழிபாட்டில் கிடைக்கப்பெற்ற பிரசாதத்தை வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட பேரனுக்குச் சாப்பிடக் கொடுத்தார். அச்சிறுவனுக்கு வயிற்றுவலி குணமானது.

இந்தத் திருக்கதையை விவரிக்கும் பக்தர்கள், ‘‘இன்றைக்கும், குணமடையாத ரோகங்களையும், குணப்படுத்தும் வைத்தியராக பெருவிளை சொக்கநாதர் அருள்பாலிக்கிறார்’’ என்று நெகிழ்ச்சி யுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

கோயிலின் வளாகத்தில் வேப்ப மரமும், அரச மரமும் இணைந்து காணப்படுகின்றன. சிவனும் சக்தியுமே இப்படி அரச மரமாகவும் வேப்ப மரமாகவும் கைகோத்து அருள்வதாக ஐதீகம். திருமணத்தடை உள்ளவர்கள், இந்த விருட்சங் களைச் சுற்றிவந்து, பால் ஊற்றி வேண்டிக் கொண்டால், விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். அதேபோல், சோமவாரமாகிய திங்கட் கிழமை தோறும் இந்தக் கோயிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபட்டால், கல்வியறிவு மேம்படும், தீய சக்திகள் விலகியோடும் என்பது நம்பிக்கை.

ஆரம்பகாலத்தில் தம்பதி சமேதரராய் கோயில் கொண்டிருந் தாராம் சொக்கநாதர். அக்னீஸ்வரராக வீற்றிருந்த ஸ்வாமியின் உக்கிரம் தாங்கமுடியாமல் போகவே, ஆதிசங்கரரின் காலத்தில் மீனாட்சி அம்பாளை தெற்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்தனராம். இத்தலத்தில் கொடிமரம் இல்லாத தால் பள்ளியறை வழிபாடு, திருக்கல்யாணம் போன்ற உற்சவங்கள் நடைபெறுவது இல்லை.

நாகலிங்க மரமே இந்தத் திருக்கோயிலின் ஸ்தலவிருட்சமாகத் திகழ்கிறது. ஆரம்பகாலத்தில் ஸ்தலவிருட்சம் பட்டுப்போனதாம். இதனால் மனம் வருந்திய மக்கள், இங்கிருக்கும் சப்தகன்னியர் சந்நிதியில் பிரார்த்தித்துக்கொண்டு, இரண்டா வதாக ஒரு நாகலிங்க மரக்கன்றை நட்டுவைத்து வழிபட்டுள்ளார்கள். இந்த நிலையில், மூன்று வாரங்கள் கழித்து பட்டுப்போன மரம் மீண்டும் துளிர்த்ததாம்!

ஸ்வாமி, அம்பாள், சப்தகன்னியர்களையும் மட்டுமின்றி, கன்னி விநாயகர், ராகு-கேது ஆகியோரையும் இந்தக் கோயிலில் தரிசிக்கலாம். குமரிக்குச் சுற்றுலா செல்லும் அன்பர்கள், அப்படியே பெருவிளை தலத்துக்கும் சென்று, சொக்கநாதரையும், மீனாட்சியம்மையையும் தரிசித்து வாருங்கள்; உங்கள் வாழ்க்கை சொர்க்கமாகும்!

மூலவர்: ஸ்ரீசொக்கநாதர்

அம்பாள்: ஸ்ரீமீனாட்சியம்மன்

நடை திறந்திருக்கும் நேரம்: தினமும் காலை 5.30 முதல் 9 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை.

எப்படிச் செல்வது?: நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து பெருவிளைக்கு மினி பஸ்கள் நிறைய உள்ளன. 20 நிமிட பயண நேரத்தில் கோயிலை அடையலாம்.

Leave a Reply