வேலுண்டு வினையில்லை!

வேலுண்டு வினையில்லை!

6
திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த அவினாசிலிங்கம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது கதிர்காம வேலவர் ஆலயம். கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று அதிகாலையில், சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சக்தி விகடன் மற்றும் குன்றுதோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழுவின் சார்பில் வேல்மாறல் பாராயணம் பூஜை தொடங்கியது.

இப்பூஜையில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். காலை 9 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது இந்த பூஜை. வலையப்பேட்டை கிருஷ்ணன், பவ்யா ஹரிசங்கர் ஆகியோரின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட பாராயண இசை நிகழ்ச்சியில் பக்தர்களும் மெய்ம்மறந்து அவர்களோடு இணைந்து பாடியது, பூஜையின் உற்சாகத்தைப் பன்மடங்கு அதிகப்படுத்தியது.

வேல்மாறல் பாராயணத்தின் சிறப்பு குறித்துப் பகிர்ந்துகொண்டார் வலையப்பேட்டை கிருஷ்ணன்.

‘‘அருணகிரிநாதர் முருகக் கடவுளைப் பற்றி 25 வகுப்புகள் பாடியுள்ளார். அதில் ஒன்று, வேல் வகுப்பு. இது 16 அடிகள் கொண்டது. முருக வழிபாட்டின்போது இதைப் பாடிப் பாராயணம் செய்வார்கள். அப்படிப் பாடும்போது, பாடலின் ஒவ்வொரு அடி முடிவிலும், ‘எழுவாய்’ என்கிற பதம் சேர்க்கப்படவேண்டும் . 16 அடி வேல் வகுப்புச் செய்யுளை 64 முறை, 48 நாட்கள் பாடி, முருகனின் அருளைப் பூரணமாகப் பெறமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் வள்ளிமலை சுவாமிகள். அதன் அடிப்படையில்தான் அனைத்து முருகன் ஆலயங்களிலும் இந்த வேல் மாறல் பாராயணம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ‘வேல் வழிபாடு என்பதுதான் ஆரம்பம். அதன்பிறகுதான் முருக வழிபாடு ஏற்பட்டது. வேலுக்கு ஆற்றல் அதிகம். தனியாக வேல் பூஜை செய்தால் பலன் அதிகம்.

வேலுக்கு மூன்று சக்திகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒன்று இச்சா சக்தி; இரண்டாவது கிரியா சக்தி; மூன்றாவது ஞான சக்தி. இதில், இச்சா சக்தி வள்ளி என்றும், கிரியா சக்தி தேவசேனா என்றும், ஞான சக்தி வேல் என்றும் கூறப்படுகிறது. இதில், ஞான சக்தியான வேலின் அருளைப் பெறவேண்டித்தான் வேல்மாறல் பாராயணம் செய்யப்படுகிறது. வேலுக்கு வினை தீர்க்கும் ஆற்றல் உண்டு. மனித மனங்களைப் பீடித்துள்ள அனைத்துத் தீவினைகளும் தீர, இந்த வேல்மாறல் பாராயணத்தை தினந்தோறும் நிகழ்த்த வேண்டும். கூட்டுப் பிரார்த்தனைக்குப் பலன் அதிகம். அதுவும் இந்தப் பாராயணத்தில் பாடத் தொடங்கிவிட்டால் முழுமையாகப் பாடி முடிக்க, நினைத்தது நிறைவேறும்’’ என்கிறார் கிருஷ்ணன் சிலிர்ப்புடன்.

குன்றுதோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழுவின் தலைவர், திருப்பூரைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம். இந்தக் குழுவில் 200 பக்தர்கள் உறுப்பினர்களா இருக்காங்க. முருகன் கோயில் இருக்கிற இடமெல்லாம் சென்று எங்கள் குழு சார்பில் 16 வகை அபிஷேக பூஜைகள் செய்து, அலங்கார வழிபாடு நடத்தி வர்றோம். கடந்த 46 வருஷமா இத்திருப்பணியினைச் செய்துட்டிருக்கோம். இதுவரை 1,200 முருகன் கோயில்களுக்குச் சென்று, எங்கள் செலவில் சிறப்பான அபிஷேக வழிபாடு செய்திருக்கோம். கடந்த வருஷம் மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோயிலில் எங்கள் குழுவின் சார்பில் அபிஷேக பூஜைகள் நடத்திட்டு வந்தோம். அடுத்த மாசம் இலங்கை – கதிர்காம முருகன் கோயிலுக்குச் செல்ல இருக்கிறோம். ‘ஷோடச அபிஷேகம் என்கிற பால்,நெய், தயிர், மஞ்சள், இளநீர், தேன், கனிகள் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபடுவதுதான் எங்கள் குழுவின் சிறப்பு. இப்போது, சக்தி விகடன் இதழுடன் இணைந்து இந்த வேல்மாறல் பாராயண நிகழ்ச்சியை நடத்தியிருக்கோம். இனி, சக்திவிகடன் நடத்தும் இம்மாதிரியான ஆன்மிக சேவைகளுக்கு எங்களது வழிபாட்டுக் குழுவும் துணை நிற்கும்” என்றார் அவர் பெருமிதத்துடன்.

அவினாசிலிங்கம்பாளையம் கதிர்காம வேலவர் ஆலயத்தைச் சேர்ந்த நிர்வாகி அமுதீசன், “இந்தக் கோயில் நூறு வருஷங்களுக்கு மேலாக இங்கு உள்ளது. எங்க முப்பாட்டன் ஒருத்தர் தீவிர முருக பக்தர். அவர் இலங்கை சென்று, கதிர்காம முருகனை வழிபட்டு வந்துள்ளார். ஆனால், அடிக்கடி இலங்கை சென்று கதிர்காம முருகனை வழிபடும் வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை என்பதால், ஊருக்கு வந்தவர், தன்னுடைய சொந்த நிலத்தில் இந்தக் கோயிலை நிறுவி, வழிபாடு செய்து வந்துள்ளார். அதன் தொடர்ச்சியாக எங்கள் சந்ததியினர் இவ்வாலயத்தை நிர்வகித்து, வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறோம். இங்கே சக்திவிகடன் பத்திரிகை வேல்மாறல் பாராயண பூஜையை நடத்தியதில் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி! என்றார்.

இவ்விழாவில் கலந்துகொண்ட சக்திவிகடனின் வாசகி கவிதா, “நான் தீவிர முருக பக்தை. அதோடு, சக்தி விகடனின் நீண்ட நாள் வாசகியும்கூட. இந்த வேல்மாறல் பாராயணம் நிகழ்ச்சி குறித்து சக்திவிகடனில் படித்ததுமே, அவசியம் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி இன்று வந்தேன். இந்தப் பாராயண பூஜையில் கலந்துகொண்டு ஒருமுகப்பட்ட மனதுடன் இதைப் பாடியது உணர்வுபூர்வமாக இருந்தது. இதை நடத்திவைத்த கிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும், அழகான குரலில் பாடிய பவ்யா அவர்களுக்கும் என் நன்றி! என்றார் மகிழ்ச்சியும் நிறைவுமாக.

வேலும் மயிலும் துணை இருக்க, வேறென்ன வேண்டும் நமக்கு?

Leave a Reply