வேலைநிறுத்தம் செய்த நாட்களுக்கு சம்பளம் உண்டா இல்லையா? குழப்பத்தில் தமிழக அரசு
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் 19-ம் தேதி வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த பத்து நாட்களிலும் பணிகள் முற்றிலும் முடங்கியது. எனினும் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளை அடுத்து அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பினர். இருப்பினும் வேலை நிறுத்தம் செய்த பத்து நாட்களுக்கு சம்பளம் உண்டா? இல்லையா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவே பழைய ஜெயலலிதாவாக இருந்தால் கண்டிப்பாக சம்பளத்தை பிடித்தம் செய்ய தயங்க மாட்டார். ஆனால் தற்போது தேர்தல் சமயமாக இருப்பதால் இதுகுறித்து எவ்வித முடிவும் எடுக்காமல் அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் இல்லை என்று சுப்ரீம்கோர்ட் ஏற்கெனவே தெளிவாக ஒரு உத்தரவை வழங்கியுள்ளதால் வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு சம்பளம் வழங்கினால் அது நீதிமன்ற அவமதிப்பாக மாற வாய்ப்புள்ளது. ஆனால் அதே நேரத்தில் பத்து நாட்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்தால் தேர்தல் நேரத்தில் ஊழியர்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும். இதனால், அரசு இந்த விஷயத்தில் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்காமல் தமிழக அரசு அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது.