வைக்கோலில் கட்டுமானப் பொருள்
கட்டுமானத் துறையில் பல்வேறு விதமான புதிய பொருள்கள் அறிமுகமாகி வருகின்றன. உதாரணமாகக் கட்டுமானக் கல்லாகப் பெரும்பாலும் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் அவற்றுக்கு மாற்றாகச் சுற்றுச்சுழலுக்கு உகந்த மாற்றுக் கற்கள் பயன்படத் தொடங்கியிருக்கின்றன. உதாரணமாகப் பறக்கும் சாம்பலில் தயாரிக்கப்படும் ப்ளாக் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இப்படியான புதிய மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் இன்று நடைபெற்றுவருகின்றன. பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து டைல் தயாரித்தல், கூரைகள் தயாரித்தல் ஆகிய முறைகள் இன்றைக்குக் கண்டுபிடிக்கப்பட்டு, புழக்கத்துக்கும் வந்துள்ளன. அப்படியான கட்டுமானப் பொருள்களுள் ஒன்றுதான் ‘கிரீன் வுட்’. இதைக் கண்டுபிடித்தவர் 18 வயதான பிஸ்மன் என்னும் பள்ளி மாணவி.
பிஸ்மன் குடும்பத்துக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு அருகில் விவசாய நிலங்கள் இருந்தன. அவர்கள் கோதுமையும் நெல்லும் பயிரிட்டுவந்தார்கள். ஐந்து டன் நெல்லுக்கு ஒரு டன் வைக்கோல் கிடைக்கிறது. விலை குறைவான, அதே சமயம் சுற்றுச் சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும் என முயன்றுகொண்டிருந்த பிஸ்மனுக்கு இது கவனிக்கத்தக்க விஷயமாக இருந்தது. இந்த வைக்கோல் குப்பையைப் பயன்படுத்திக் கட்டுமானப் பொருளைக் கண்டுபிடிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறார்.
“தந்தையுடனான ஒரு மாலை நடைப்பயணத்தில்தான் எனக்கு இந்த யோசனை வந்தது. இந்த வைக்கோல் கொண்டு மரப் பொருளுக்கு மாற்றான கட்டுமானப் பொருள் தயாரிக்கலாம் என நினைத்தேன். இந்த வைக்கோலுக்கு அந்தத் தன்மை இருப்பதை அறிந்துகொண்டேன். எல்லோரும் வாங்கும்படியான விலையில் இந்தக் கட்டுமானப் பொருள் இருக்கும் என நம்புகிறேன். மேலும் வீடு கட்டுவதற்காக மரங்கள் வெட்டப்படுவதும் குறையும்” என்கிறார் பிஸ்மன்.
வைக்கோலை அழுத்தி அதைப் பலகையாக உருவாக்கியுள்ளார் பிஸ்மன். இது பார்ப்பதற்கு பிளைவுட் போல இருக்கும். இந்தக் கண்டுபிடிப்புக்கு கிரீன் வுட் என அவரே பெயரிட்டுள்ளார். இதைக் கண்டுபிடித்ததற்காக பிஸ்மனுக்கு யுனிசெஃப் விருது வழங்கிக் கவுரவித்துள்ளது.