ஷேர் மார்க்கெட் சூதாட்டமா?

ஷேர் மார்க்கெட் சூதாட்டமா?

தினசரி வாழ்வில் நான் கடந்துவரும் ஆள்களிடம் பங்குச் சந்தை தொடர்பான இரண்டு கேள்விகளை எதிர்கொள்கிறேன்.

‘‘சார்… ஷேர் மார்க்கெட்னா சூதாட்டம்னு சொல்றாங்களே, நீங்க ஏன் சார் எப்பப் பார்த்தாலும் அதைப் பத்தியே பேசறீங்க?’’

‘‘சார், இப்ப என்ன ஷேர் வாங்குனா நல்லாப்போகும்? சும்மா சொல்லுங்க சார், நாங்களும் நாலு காசு பார்க்கறோமே!’’

எந்தக் கேள்வியாக இருந்தாலும், அதை இடதுகையால் ஒதுக்கித் விடத் தேவையில்லை. வரலாறு நெடுகிலும் நாம் கண்டிருக்கிறோம். சில கேள்விகள் சில சாமானியர்களை ஞானிகளாக மாற்றியிருக்கின்றன. சிலரது தன்மானத்தை உசுப்பிவிட்டுக் கற்பனைக்கும் எட்டாத விஷயத்தைச் சாதிக்கத் தூண்டியிருக்கின்றன. சில சாம்ராஜ்யங்கள் சிதறுண்டு போகக் காரணமாக இருந்திருக்கின்றன. சிலரது அறிவுத் தேடலைத் முடுக்கிவிட்டு, மாபெரும் உயரங்களுக்குச் செல்ல உதவியிருக்கின்றன.

தற்போது தமிழகக் கல்வித் துறைச் செயலாளராக உள்ள உதயசந்திரனை நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் பெற்ற ரேங்கினை அறிவிப்பதில்லை என்கிற முடிவு உள்படப் பள்ளிக் கல்வித் துறையில் பல மாற்றங்களைப் புகுத்திவருவதில் அவரது பங்கு முக்கியமானது. ஆனால், அவர் ஐஏஎஸ் ஆனதற்கு முக்கியமான காரணம், அவர் பள்ளியில் படித்தபோது ஆசிரியர் கேட்ட கேள்விகளே.

அந்த ஆசிரியர், வகுப்பு ஆரம்பிக்கும் முன்னர் பாடம் சம்பந்தமான கேள்விகளைக் கேட்காமல், “பஞ்சாப் முதலமைச்சர் யார்?” என்ற ரீதியில் கேட்பாராம். அது பொது அறிவின் மீதான காதலை உதயசந்திரனுக்கு ஊட்டியிருக்கிறது. அப்படியொரு கேள்வியைக் கேட்பதால், தன் மாணவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாவார் என்றெல்லாம் அந்த ஆசிரியர் நினைத்திருக்கமாட்டார். எனினும் அவர் கேட்ட கேள்விக்கான பதிலைத் தேடும் பயணம், ஒரு மாணவனை எவ்வளவு தூரம் கொண்டுசெல்லும் என்பது உதயசந்திரன் வடிவில் நம் முன்னால் சான்றாக வந்து நிற்கிறது.

அப்படியொரு கேள்வியாகத்தான் ‘ஷேர் மார்க்கெட்னா சூதாட்டம்னு பேசிக்கறாங்களே?” என 19 வயது இளைஞர் ஒருவர் கேட்டார்.

நான் எழுதிய வாரன் பஃபெட்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்டு, அவரைப் போலவே பணக்காரன் ஆகும் கனவு வந்திருக்கிறது அந்த இளைஞருக்கு. வாழ்க்கையை ஆரம்பிக்கும் வயதில் இருந்த அவர், ஏதேனும் ஒரு துறையில் நுழைந்து அதில் நிபுணத்துவம் எய்தி, அந்தத் துறையின் உச்சத்துக்குச் செல்லலாம். ஆனால், அவருக்குப் பொறுமையில்லை.

”ஷேர் மார்க்கெட் பத்தி நல்லாத் தெரிஞ்சுக்கிட்டு அதுலகூட நீங்க ஈடுபடலாம்” என்றேன்.

“அது வேண்டாம் சார். சூதாட்டம்”

”யாரு சொன்னாங்க?”

இணையதளத்தில் இயற்கை உணவைப் பற்றி நிறைய கருத்து சொல்கிற ஒரு பிரபலம் சொன்னாராம். ‘‘ஷேர் மார்க்கெட் மாபெரும் சூதாட்டக்களம். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஷேர்களை ஏற்ற முடியும்; இறக்க முடியும்’’ – அந்தப் பிரபலம் சொன்னது அந்த 19 வயது பிஞ்சு மனதில் உறுதியாக இறங்கியிருந்தது.

‘‘அவர் அதுமாதிரி எத்தனை முறை மார்க்கெட்டை ஏற்றி, இறக்கியிருக்காரு தம்பி?’’ என்று கேட்டேன். அவரால் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால், சூதாட்டம் என்கிற விதை மட்டும் அவன் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. இப்படித்தான் தப்புத் தப்பான கற்பிதங்களை நம் மனதில் புகுத்தி, நம் சிந்தனையைச் சங்கிலி போட்டுக் கட்டிவிடுகிறார்கள். அதிலும், நாம் பேசுவதை நாலு பேர் கேட்கிறார்கள் என்கிற நினைப்பு வந்தவுடன் ஒட்டிக்கொள்ளும் மேதாவித்தனம் இருக்கிறதே… அப்பப்பா!

ஷேர் மார்க்கெட் ரிஸ்க் நிறைந்தது. அதனால் அதைச் சூதாட்டம் என்கிறோம் என்று வாதம் செய்தால், நீங்கள் மாநகர வீதியில் இரு சக்கர வாகனம் ஓட்டுவதும் ரிஸ்க் நிறைந்ததுதான். அப்படியானால் அதுவும் சூதாட்டமா?

நாட்டின் முதுகெலும்பாக நாம் நினைக்கும் விவசாயம்கூட ரிஸ்க் நிறைந்ததாக மாறிவிட்டது. மழை, வெயில், புயல், பூச்சிகள், நோய் தாக்குதல் என பல்வேறு சக்தி களோடுப் பகடையாடி வெள்ளாமையை விளைவித்தாலும் அது என்ன ‘விலை விற்கும்’ என்று தெரியாது. குடியானவன் போட்ட மூலதனம், அவனது உழைப்புக்கான கூலி என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால், சில நேரங்களில் நஷ்டமே மிஞ்சும்.

ஆனால், விவசாயிக்குத் தெரியும், எந்தப் பருவத்தில் பயிரிட வேண்டும், எப்போது மழைக் காலம், எப்போது கோடைக் காலம், எப்போது காற்று வீசும், எந்தக் காலத்தில் என்ன விதைக்கலாம், எந்தப் பருவத்தில் எது வளரும், எது அழுகும், எது கருகும், எது விற்கும் என்று. இயற்கையோடுப் பழகி ஓரளவுக்குப் புரிதலை உருவாக்கி வைத்திருக்கிறார் அவர். பாட்டனார் விவசாயம் செய்ததைப் பார்த்து வளர்ந்திருக்கிறார். தகப்பனார் விவசாயம் செய்ததை உடனிருந்து கற்றிருக்கிறார். அதனால் அந்த உழவுத் தொழிலின் நெளிவுசுழிவுகள் எல்லா விவசாயிகளுக்கும் தெரியும். அதையும் தாண்டி சில சமயங்களில் இயற்கையோ அல்லது சந்தையோ வஞ்சித்து விடுவதுண்டு. இந்த மாதிரியான ரிஸ்க் எல்லாத் தொழிலிலும் இருக்கும். அதை அறிந்துதான் ஒவ்வொரு விவசாயியும் கலப்பையைக் எடுத்துக்கொண்டு நிலத்தை உழத் தொடங்குகிறான். ஆனால், விவசாயம் பற்றி எதுவுமே தெரியாத ஒரு சாஃப்ட்வேர் ஆசாமி, ‘‘ப்ரோ, இந்த விவசாயிங்க என்னமா சம்பாதிக்கிறாங்க தெரியுமா?” என்று கிளம்புவதுதான் ரிஸ்க். அதாவது, ஒரு தொழிலைப் பற்றி எதுவுமே தெரியாமல் அது லாபகரமான தொழில் என்ற நினைப்பில் பணத்தைக் கொட்டிப் பத்து ஏக்கர் நிலம் வாங்குவதுதான் சூதாட்டம்.

அதேபோலத்தான் ஷேர் மார்க்கெட். எந்த நிறுவனம் என்ன தொழில் செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல், லாபம் கிடைக்கும் என்கிற பேராசையில் கைமாத்து வாங்கி, ஷேர் மார்க்கெட்டில் போடுவதுதான் சூதாட்டம்.

என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது சூதாட்டம் அல்ல. அதைப் பற்றிக் கொஞ்சம்கூட புரிந்துகொள்ள முயலாமல் ஒதுங்கிப் போவதுதான் சூதாட்டம். குதிரைக்குக் கடிவாளம் போட்ட மாதிரி உடும்புப் பிடியாக ஓர் எண்ணத்தை உருவாக்கி வைத்துக் கொண்டு, புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கு முட்டுக்கட்டை போட்டு, மூளை துருப்பிடித்துப் போக அனுமதிக்கிறோமே, அதுதான் சூதாட்டம்.

பங்குச் சந்தையைக் கவனிக்கத் தொடங்குகிற ஒருவனின் அறிவு அங்குலம் அங்குலமாக விரியும். அவ்வாறு அறிவு அகலமாகாமல் தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் ஆப்புக்குப் பெயர்தான் ‘ஷேர் மார்க்கெட் சூதாட்டம்’ எனும் மனத்தடை.

ஷேர் மார்க்கெட்டில் நுழைவது எப்படி, நுழைந்து என்ன செய்ய வேண்டும், பங்குகளை எப்படித் தேர்வு செய்ய வேண்டும், லாபத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் தெரிந்துகொள்ளும்முன், ‘இது சூதாட்டம்’ என்கிற எண்ணத்தை உங்கள் மனதிலிருந்து அழுந்தத் துடைத்து எறிந்துவிடுங்கள். அப்போது தான் புதுப்புது விஷயங்களை இன்னும் விரிவாக, தெளிவாகக் கற்றுக்கொள்ள முடியும்.

Leave a Reply