ஸ்நாப்டீல் நிறுவனம் ரூ.113 கோடி நிதி திரட்டியது
ஸ்நாப்டீல் நிறுவனம் 113 கோடி ரூபாய் நிதி திரட்டி இருக்கிறது. ஸ்நாப்டீல் நிறுவனமும் பிளிப்கார்ட்டும் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த நிதி திரட்டல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் நெக்ஸஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ் 96 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. தவிர நிறுவனத்தில் நிறுவனர்கள் குனால் பஹல் மற்றும் ரோஹித் பன்சால் இருவரும் இணைந்து ரூ.17 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். மொத்த முதலீடு ரூ.113 கோடியாகும்.
கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக பெரிய அளவிலான நிதி திரட்டும் பணியில் ஸ்நாப்டீல் முயற்சித்து வந்தாலும், முதலீட்டினை திரட்ட முடியவில்லை. இந்த துறையை சார்ந்தவர்கள் கூறும்போது, நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கு தேவை யான தொகையை ஸ்நாப்டீல் பெற்றிருக்கிறது என தெரிவித்தனர்.
இது குறித்து ஸ்நாப்டீல் மற்றும் நெக்ஸஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ் நிறுவனங்கள் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ஸ்நாப்டீலில் முதலீடு செய்திருக்கும் நெக்ஸஸ் வென்ச்சர் பார்டனர்ஸ், பிளிப்கார்ட் நிறுவனத்துடனான இணைப்புக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதேபோல ஸ்நாப்டீலில் முதலீடு செய்திருக்கும் இன்னொரு நிறுவனம் கலாரி கேபிடல். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வனி கோலா ஸ்நாப்டீல் இயக்குநர் குழுவில் இருந்து வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.