பெர்த்தில் நடைபெற்ற 3-வது ஹாக்கி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்று முன்னிலை வகிக்கிறது. இந்தியாவின் எஸ்.வி.சுனில் 3-வது கால்மணி நேர ஆட்டத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். சர்தார் சிங் இல்லாததால் ருபிந்தர் பால் சிங் இந்திய அணியின் கேப்டனாகத் திகழந்தார். முதல் கால்மணி நேர ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அரணை இந்திய வீரர்கள் அச்சுறுத்தினாலும் கோல் போட முடியவில்லை. 2-வது கால்மணி நேர ஆட்டமும் கோல்கள் இல்லாமலே போனது. ஆனால் 3-வது கால்மணி நேர ஆட்டத்தில், 34-வது நிமிடத்தில் இந்தியாவின் எஸ்.வி.சுனில்,
ஆகாஷ்தீப் சிங் கொடுத்த அருமையான பாஸை கோலாக மாற்றினார். ஆஸ்திரேலிய வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகும் இந்தியா ஆக்ரோஷ ஆட்டத்தை கடைபிடித்து தொடர்ந்து ஆஸி. தடுப்பு வீரர்களுக்கு சவால் அளித்தது. அதே வேளையில் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய தடுப்பணையை மீறி உள்ளே நுழையத் திணறினர். இந்திய அணியின் கேப்டனாக இருந்த தடுப்பு வீரர் ருபிந்தர்பால் சிங் தனது 100-வது சர்வதேச போட்டியை இன்று விளையாடினார். ஃபுல் பேக் நிலையில் ஆடிவரும் ருபிந்தர் பால் சிங், பெனால்டி டிராக் பிளிக்கில் உலகில் சிறந்த வீரராக கருதப்படுபவர். இதுவரை 37 கோல்களை அடித்துள்ளார்.