ஹீரோ மோட்டோ கார்ப் நிகர லாபம் 14% சரிவு
இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன நிறுவனமான ஹீரோமோட்டோ கார்ப் நிகர லாபம் 14 சதவீதம் சரிந்து ரூ.717 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.833 கோடியாக இருந்தது. மொத்த வருமானமும் 7.55 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு ரூ.8,227 கோடியாக இருந்த மொத்த வருமானம், தற்போது ரூ.7,606 கோடியாக சரிந்திருக்கிறது.
வாகன விற்பனையும் 5.77 சதவீதம் சரிந்திருக்கிறது. கடந்த ஆண்டு 17,21,240 வாகனங்கள் விற்பனையாகி இருந்த நிலையில் தற்போது 16,21,805 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின.
ஆனால் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.3,112 கோடியாக இருந்த நிகர லாபம் 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.3,546 கோடியாக இருக்கிறது. 2016-17-ம் நிதி ஆண்டில் மொத்த வருமானம் ரூ.31,480 கோடியாக இருக்கிறது.
2018-19-ம் நிதி ஆண்டு வரை ரூ.2,500 கோடி விரிவாக்க பணிகளுக்காக முதலீடு செய் யப்படும். வங்கதேசத்தில் அமைக் கப்பட்டு வரும் ஆலை நடப்பு நிதி ஆண்டில் தொடங்கப்படும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் முன்ஜால் தெரிவித்தார். தவிர நடப்பு நிதி ஆண்டில் புதிய வெளியீடுகள் இருக்கும் என்றும் முஞ்சால் கூறினார். இறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 30 ரூபாய் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. இடைக்கால டிவிடெண்டாக ரூ.55 ஏற்கெனவே வழங்கப்பட்டது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 1 சதவீதம் உயர்ந்து 3,323 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.