ஹெச்பிசிஎல் நிறுவனத்தை வாங்க ஓஎன்ஜிசி திட்டம்

ஹெச்பிசிஎல் நிறுவனத்தை வாங்க ஓஎன்ஜிசி திட்டம்

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பிசிஎல்) நிறுவனத்தை வாங்குவதற்கு ஓஎன்ஜிசி ஆர்வமாக இருக்கிறது. இதன் மதிப்பு ரூ.42,254 கோடியாக இருக்கக்கூடும். மற்றொரு எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தின் சந்தை மதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் ஹெச்பிசிஎல் நிறுவனத்தை வாங்க ஓஎன்ஜிசி ஆர்வமாக இருக்கிறது.

ஹெச்பிசிஎல், பாரத் பெட்ரோலி யம் ஆகிய இரு நிறுவனங்களை கையகப்படுத்தும் திட்டத்தில் ஓஎன்ஜிசி இருந்தது. பாரத் பெட் ரோலியம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,01,738 கோடி. அரசாங் கம் வசம் இருக்கும் 54.93 சதவீத பங்குகளை வாங்க வேண்டும் என்றால் ரூ.55,885 கோடி தேவைப்படும்.

அதே சமயம் ஹெச்பிசில் நிறு வனத்தின் சந்தை மதிப்பு ரூ.54,797 கோடி மட்டுமே. அரசாங்கத்தின் வசம் இருக்கும் 51.11 சதவீத பங்கு களை வாங்குவதற்கு ரூ.28,006 கோடி மட்டுமே தேவைப்படும். மற்ற முதலீட்டாளர்களிடம் இருந்து `ஓபன் ஆபர்’ மூலம் 26 சதவீத பங்கு களை வாங்குவதற்கு ரூ.14,247 கோடி தேவைப்படும்.

பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் 25 சதவீதத்துக்கு மேல் ஒரு நிறுவனம் வாங்கும் போது `ஓபன் ஆபர்’ மூலம் 26 சதவீத பங்குகளை வாங்க வேண்டும் என்பது செபி விதியாகும். ஆனால் இரு பொதுத்துறை நிறுவனங்கள் இணையும் போது ‘ஓபன் ஆபர்’ வழங்க தேவையில்லை என்னும் கருத்தும் இருக்கிறது. கையகப்படுத்தும் செலவைக் குறைப்பதற்கான செபியிடம், ஓஎன்ஜிசி விதிவிலக்கு கேட்கும் என தெரிகிறது.

ஒருங்கிணைந்த எண்ணெய் நிறுவனங்களை உருவாக்குவது குறித்து கடந்த பட்ஜெட்டில் அருண் ஜேட்லி குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஏற்கெனவே ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இணைக்கப்பட்டது சிக்கலில் இருப்பதால் அந்த எண்ணத்தை மத்திய அரசு கைவிட்டதாக தெரிகிறது. அதனால் தற்போது நிறுவனங்களை இணைக்காமல் ஓஎன்ஜிசியின் துணை நிறுவன மாக ஹெச்பிசிஎல்-ஐ மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஓஎன்ஜிசியின் துணை நிறுவனமாக எம்ஆர்பிஎல் இருக்கிறது.

ஓஎன்ஜிசி வசம் ரூ.13,014 கோடி கையிருப்பு இருக்கிறது. குறைந்தபட்சம் ரூ.18,000 கோடி கடன் வாங்க வேண்டி இருக்கும். ஒருவேளை ‘ஓபன் ஆபர்’ கொடுக்க வேண்டி இருந்தால் கூடுதலாக கடன் வாங்க வேண்டி இருக்கும்.

Leave a Reply