​தொழில் செழிக்க உதவுவார்…சொர்ணமலை கதிரேசன்!​

​தொழில் செழிக்க உதவுவார்…சொர்ணமலை கதிரேசன்!​

வெறிஅறி சிறப்பின் வெவ் வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும்’

என ‘வேல்’ பற்றிய குறிப்பைச் சொல்கிறது தொல்காப்பியம். அதாவது தலைவனின் பிரிவால், தன் தலையில் காந்தள் மலரைச்சூடிக்கொண்டு, கையில் வேல்கொண்டு ஆடும் பெண் ஒருத்தியின் நடனம், மனதை உருக்குவதாக இருக்கும் என்பதே மேற்கூறிய இந்தப் பாடல்வரிகளின் பொருள். மேலும் சங்க இலக்கியங்களான குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு போன்றவற்றிலும் வேலின் சிறப்பை உணர்த்தும் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. முருகப் பெருமானுக்கு எண்ணற்ற பல தலங்களில் கோயில்கள் இருக்கின்றன. ஆனால், முருகனின் ஆயுதமாகத் திகழ்வதும், இலக்கியங்களில் சிறப்பித்துச் சொல்லப்பட்டு இருப்பதுமான வேலுக்கு ஒரு கோயில் அமைந்திருக்கும் திருக்கதை உங்களுக்குத் தெரியுமா?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியின் தென்புறத்தில் சுமார் 1.5 கி.மீ தொலைவில், அமைந்திருக்கிறது, சுமார் 150 அடி உயர ‘சொர்ண மலை’. இந்த மலை மீது கோயில் கொண்டிருக்கும் மூலவரான முருகர் இங்கு வேலாகவே அருள்பாலிக்கிறார்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் இருந்த தமிழர்கள், திரைகடல் ஓடி திரவியம் தேட, வியாபாரத்துக்காக கடல் கடந்து இலங்கைக்குப் புறப்பட்டனர். அப்படி சென்ற மக்கள், ஒவ்வொரு முறையும் வியாபாரத்துக்குச் செல்லும் முன், கண்டி ‘கதிர்காம முருகனின்’ திருத்தலத்துக்குச் சென்று, கூட்டாக எம்பெருமான் முருகனை வணங்கிவிட்டுச் செல்வது வழக்கம். இப்படி, கதிர்காம முருகனின் அருளால், அவர்கள் தமிழகத்தில் இருந்து கொண்டுசென்ற அனைத்துப் பொருட்களும் நல்லவிலையில் விற்று, நல்ல லாபத்துடன் வீடு திரும்பமுடிந்தது. இதனால், அவர்கள் வாழ்வும் குறைவிலா வளம் பெற்றது.
எனவே,தங்களின் வியாபாரம் செழிக்க உதவிய, தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானை, இலங்கை செல்லாதவர்களும் வழிபட, ஏதுவாக தங்கள் ஊரிலேயே ஆலயம் இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினார், முருகபக்தர் ‘சுப்பிரமணியர்’ என்னும் பெரியவர். அப்படி எண்ணியவர், கண்டி – கதிர்காம முருகன் தலத்திலிருந்து, பிடிமண் எடுத்து வந்து, முருகனை ‘வேலாக’ பாவித்து, சொர்ணமலையில் கோயில் எழுப்பியதாக அமைகிறது தலவரலாறு. இத்தல முருகனின் திருநாமம் ‘கதிரேசன்’ என்பதாகும். சொர்ணமலையில் அமைந்திருப்பதால், இத்தலத்தை சொர்ணமலை முருகன் என அழைக்கின்றனர், இப்பகுதி மக்கள்.
இங்கு முருகப்பெருமானை ‘6 அடி’ ஐம்பொன்னால் ஆன, வேல் வடிவில் தரிசிக்கலாம். சந்நிதிக்கு நேர்எதிரில், அழகிய தோகை கொண்ட மயில் காட்சி தருகின்றது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் இந்த தலத்தில் வாயு மூலையில் தண்டாயுதபாணியும், கிழக்கு நோக்கி மாணிக்க விநாயகரும், ஈசான்ய மூலையில் தெற்கு நோக்கிய கால பைரவரும் அருள்புரிகிறார்கள்.

நிறைவேறும் பிரார்த்தனைகள்

தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள் ஆறு விளக்குகளில் நெய்தீபமேற்றி, செவ்வரளி மாலை, எலுமிச்சைப்பழம் வாங்கி வந்து அர்ச்சனை செய்தால் தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை. தவிர,மாதம்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து, அர்ச்சனை செய்து, அன்னாபிஷேகம் செய்து கிடைக்கப்பெற்ற உணவை, உண்டுவந்தால் குழந்தை பாக்கியம் அமையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. மேலும், இங்கு கந்த சஷ்டி லட்சார்ச்சனை, திருக்கல்யாண வைபவம், தைப்பூசம், மாசி மகாமகம், திருக்கார்த்திகை ஆகிய தினங்கள் வெகு சிறப்பாக கொண்டாப்படுகின்றன.இத்தலத்தில் ஒவ்வொரு நாளும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் விசேஷ தினங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன.

வினை தீர்க்கும் வேல் வடிவில் எழுந்தருளி பக்தர்களின் தொழில் செழிக்க வரம் அருளும் முருகப்பெருமானை மனதில் நினைத்து வழிபட்டு, வாழ்வாங்கு வாழ்வோம்.

தகவல் பலகை:
ஸ்வாமி: அருள்மிகு சொர்ணமலை கதிரேசன்
பிரார்த்தனைச் சிறப்பு: தொழில் நஷ்டம் நீங்க நெய் விளக்கு வழிபாடு,குழந்தைப் பாக்கியம் பெற அன்னாபிஷேகம் செய்து, நைவேத்தியம் செய்யப்பட்ட அன்னத்தை பிரசாதமாக உண்ணுதல்.
வழித்தடம்: கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வீரவாஞ்சி நகர் செல்லும் மினி பேருந்தில் ஏறி, சுமார் 1.5கி.மீ சென்றால் சிறிது நேரத்தில் ஏறிவிடலாம் சொர்ணமலையில்.
திறந்திருக்கும் நேரம்: ஒவ்வொரு நாளும், காலை 6.30 மணியிலிருந்து 11.30 மணி வரையிலும்,மாலை 4.30 மணியிலிருந்து 8.30 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும்.மற்ற விசேஷ தினங்களில் கூடுதலான நேரம் திறந்திருக்கும்.

Leave a Reply