இதயத்துக்கு 10 கட்டளைகள்!

heart 1

கையளவு இதயத்துக்குள் கடலளவு நோய்கள் நுழைய வாய்ப்புகளை நாமே உருவாக்குகிறோம். இடைவிடாது துடிக்கும் இதயத்தை இதமாக வைத்திருக்க, இந்த 10 கட்டளைகளைப் பின்பற்றலாம்.

அதிக நேரம் டி.வியின் முன்பு அமர்ந்திருந்தபடி, கொழுப்பு நிறைந்த நொறுக்குத்தீனிகளைச் சாப்பிடுவதால், உடலுக்குப் போதிய உழைப்பு இன்றி, இதயம் பலவீனப்படும். 20 நிமிடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் உட்காராதீர்கள்.

கெட்ட கொழுப்பு அதிகம் சேரும்போது, இதய நோய்கள் ஏற்படும். உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலில் 90 சதவிகிதத்தை கல்லீரலே உற்பத்தி செய்துவிடுகிறது. மீதம் உள்ள 10 சதவிகிதம் மட்டுமே உணவு மூலம் தேவை.

அசைவ உணவுகள், பால், வெண்ணெய், நெய் ஆகியவற்றில்தான் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை பயன்படுத்தக்கூடாது.

கடின உழைப்பின்போது குறுகிப் போன ரத்தநாளங்கள் வழியாகப் போதுமான ரத்தம் இதயத்துக்குக் கிடைக்காமல்போகும். இதயம் அப்போது இறுக்கமான நிலையில் இருப்பதை உணர முடியும். அந்த நேரத்தில் உடைகளைத் தளர்த்திவிட்டு, ஓய்வு எடுத்தாலே இதயத்துக்குத் தேவையான ரத்தம், ஆக்சிஜன் கிடைத்துவிடும்.

குறைந்த கொழுப்புச் சத்துள்ள உணவு, நல்ல ஓய்வு, மருத்துவர் பரிந்துரைக்கும் உடற்பயிற்சி ஆகியவற்றைப் பின்பற்றினால், இதய நோய்களைத் தவிர்க்கலாம்.
மருத்துவரின் ஆலோசனை பெற்று ஏரோபிக், சைக்ளிங், டென்னிஸ், கைப்பந்து, நீச்சல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வது இதயத்தைப் பாதுகாக்கும்.

தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி, ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய செயல்பாட்டை சீராக்கும். மன அழுத்தம் குறையும். கெட்ட கொழுப்பு குறையும்.
நெருங்கிய சொந்தத்தில் திருமணம், கர்ப்பகாலத்தில் ஏற்படும் நோய்கள் மற்றும் சுய மருத்துவம் போன்றவை பிறவிலேயே இதயக் கோளாறு
களுக்கான வாய்ப்புகளை அதிகரித்துவிடும்.

மார்புப் பகுதியில் அழுத்துவது போல் கடுமையான வலி இருந்தால், அது மாரடைப்பாக இருக்கலாம். 20 நிமிடங்களுக்குள் இருந்தால் மைனர் அட்டாக், 20 நிமிடங்களுக்கு மேல் நீட்டித்தால் அது சீரியஸ் அட்டாக். மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போதே, பாதிக்கப்பட்டவருக்கு ஆஸ்பிரின் மாத்திரையைத் தருவதன் மூலம் ரத்தம் உறைதல் தடுக்கப்படும்.

ஃப்ளக்ஸ் விதைகள், பாதாம் பருப்பு, ஆலிவ் எண்ணெய், மீன் எடுத்துக் கொள்வது இதயத்துக்கு நல்லது. நிறைய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் எடுத்துக் கொள்வதும், சர்க்கரை, ரத்த அழுத்தம் இல்லாமல் இருப்பதும் இதயத்துக்கு நாம் செய்யும் நன்மைகளாக இருக்கும்.

Leave a Reply