“10 எண்றதுக்குள்ள’ திரை விமர்சனம்

“10 எண்றதுக்குள்ள’ திரை விமர்சனம்
10 endrathukulla
ஹாலிவுட் படம் போல ஒரு விறுவிறுப்பான சேஸிங் படம் தமிழில் வருமா? என பல வருடங்களாக ஏங்கித்தவித்த ரசிகர்களின் கனவு தற்போது ’10 எண்றதுக்குள்ள’ படத்தில் நனவாகிவிட்டது. ஒரு அருமையான முழுக்க முழுக்க ஆக்சன் படத்தை விரும்புபவர்கள் தைரியமாக இந்த படத்தை பார்க்கலாம்.

கடத்தல் பொருள்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கடத்தி லட்சக்கணக்கில் சம்பாதித்து வரும் ஒரு கும்பலின் தலைவர் பசுபதி. இவர் கொடுக்கும் வேலையை கச்சிதமாக முடிப்பவர் விக்ரம். வெளியுலகத்திற்கு கார் டிரைவிங் பள்ளியில் பணிபுரிவது போல தெரிந்தாலும், விக்ரமின் முக்கிய தொழில் ‘பிரசாதம்’ என்ற பெயரில் கடத்தல் செய்வதுதான்.

இந்நிலையில் பொருட்களை கடத்தும் பசுபதிக்கு ஒரு பெண்ணை கடத்தும் பொறுப்பை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு டான் கொடுக்கின்றார். அந்த பெண் தான் படத்தின் ஹீரோயின் சமந்தா. ஏற்கனவே விக்ரமிடம் டிரைவிங் பழகி வரும் சமந்தா, தான் கடத்தப்படவிருக்கின்றோம் என்பது தெரியாமல் விக்ரமுடன் ஜாலியாக சண்டை போடுகிறார்.

இந்த வேலையை பசுபதியே களத்தில் இறங்கி சமந்தாவை கடத்தி காரில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக டிராபிக் போலீசிடம் மாட்டுகிறார். டிராபிக் போலீசார் காரில் சமந்தா மயக்கமுற்று இருப்பது தெரியாமல், காரை எடுத்து சென்றுவிடுகின்றனர். என்ன செய்வது என்று புரியாமல் இருக்கும் பசுபதிக்கு விக்ரம் ஞாபகம் வருகிறது. டிராபிக் போலீஸ் வண்டியில் இருந்து காரை மீட்டு, அந்த காரை உத்தரகாண்ட் சென்று ஒப்படைக்கும் பொறுப்பை விக்ரமிடம் கொடுக்கின்றார் பசுபதி. பசுபதி சொன்னதுபோலவே காரை டிராபிக் போலீஸ் வண்டியில் இருந்து எடுக்கும் விக்ரம், உத்தரகாண்ட் சென்றாரா? செல்லும் வழியில் என்ன நடந்தது? சமந்தாவை வில்லன் குரூப் எதற்காக கடத்தினார்கள்? சமந்தாவை விக்ரம் காப்பாற்றினாரா? என்பதுதான் மீதிக்கதை.

கிட்டத்தட்ட படம் முழுவதும் விக்ரமுக்கு கார் ஓட்டும் வேலைதான். சென்னையில் ஆரம்பிக்கும் கார், உத்தரகாண்ட் செல்லும் வரை என்ன ஆகின்றது? சமந்தாவுடன் ஏற்பட்ட காதல், வில்லனுடன் மோதல், என படம் முழுவதும் விக்ரம் தனது அபாரமான நடிப்பை அசால்ட்டாக தந்துள்ளார்.

சமந்தாவுக்கு இந்த படத்தில் இரட்டை வேடம். இரண்டாவது வேடம் என்ன என்பதை கடைசி வரை சஸ்பென்ஸ் உடன் வைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். கிட்டத்தட்ட முதல் காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரை விக்ரம் கூடவே பயணிக்கும் கேரக்டர் சமந்தாவுக்கு. முதல் கேரக்டரில் ஜாலியான பெண்ணாகவும், இரண்டாவது கேரக்டரில் சீர்யஸான பெண்ணாகவும் வித்தியாசமான நடிப்பை தந்துள்ளார்.

பசுபதி, அபிமன்யூ சிங், ராகுல்தேவ் என படத்தில் மூன்று வில்லன்கள். மூவருமே அசத்தியுள்ளனர். சார்மி ஒரே ஒரு குத்துப்பாடலுக்கு வந்து போகிறார். இமான் அண்ணாச்சி, மனோபாலா ஆகியோர்களுக்கு தலா ஒரு சீன் மட்டுமே

ஒரு விறுவிறுப்பான ஆக்சன் கதையை தொய்வில்லாத திரைக்கதை மூலம் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் விஜய் மில்டன். ஒளிப்பதிவாளர் பாஸ்கரன், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் பணிகளும் சிறப்பு

டி.இமானின் பாடல்கள் ஓகே. பின்னணி இசையை ‘கோலி சோடா’ இசையமைப்பாளர் அனுப் சிலின் போட்டுள்ளார். ஹாலிவுட் படம் பார்ப்பது போல் பின்னணி இசை இருந்தது.

மொத்தத்தில் ’10 எண்றதுக்குள்ள’ ஒரு அபாரமான ஆக்சன் விருந்து.

Leave a Reply