சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி பலியான 10 ராணுவ வீரர்கள் பட்டியல் அறிவிப்பு

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி பலியான 10 ராணுவ வீரர்கள் பட்டியல் அறிவிப்பு
siachen-large

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி பலியான 10 ராணுவ வீரர்கள் பட்டியல் அறிவிப்பு

கடந்த புதன்கிழமை சியாச்சின் பனிமலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கி 10 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது என்பதையும், அவர்கள் அனைவரும் சென்னை மற்றும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த பனிச்சரிவில் உயிரிழந்தவர்களில் 4 பேர் தமிழர்கள் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் படைப்பிரிவைச் சேர்ந்த ஓர் இளநிலை அதிகாரி மற்றும்  9  ராணுவ வீரர்களும் காஷ்மீரின் சியாச்சின் பனிமலைப் பகுதியில் பாகிஸ்தான் எல்லையையொட்டி இருந்த சாவடியில் கடந்த புதன்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 19,000 அடி உயரத்தில் இருந்த அந்த பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, 10 ராணுவத்தினர்களும் புதையுண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும், பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்பதற்காக அதிநவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் பல்வேறு ராணுவ மீட்புக் குழுவினர் கடந்த இரண்டு தினங்களாக மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்க இயலவில்லை. அவர்கள் அனைவரும் இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்தகவல், ராணுவத்தின் வடக்குப் பிராந்திய கமாண்டர் டி.எஸ்.ஹூடா வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் இந்த பனிச்சரிவில் சிக்கி பலியானவர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

1. வேலூர் மாவட்டம் துக்கம்பாறையைச் சேர்ந்த எழுமலை (ஹவில்தார்)
2. மதுரை மாவட்டம் சொக்கதேவன்பட்டியைச் சேர்ந்த கணேசன் (சிப்பாய்)
3. கிருஷ்ணகிரி மாவட்டம் குடிசாதனபள்ளியைச் சேர்ந்த ராமமூர்த்தி (சிப்பாய்),
4. தேனி மாவட்டம் குமணண்தொழுவை சேர்ந்த எஸ் குமார் (லான்ஸ் ஹவில்தார்)
5. லான்ஸ் நாயக் நாகேஷா (கர்நாடகா),
6. லான்ஸ் நாயக் சுதீஸ் (கேரளா),
7. சிப்பாய் மகேஷா (கர்நாடகா),
8. முஷ்டாக் அகமது (ஆந்திரா),
9. சிப்பாய் சூரியவன்சி (மகாராஷ்டிரா)
10. லான்ஸ் நாயக் ஹனமந்தப்பா (கர்நாடகா)

இந்த பட்டியலில் முதல் நான்கு பேர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply