கர்நாடக அரசின் மேல்முறையீட்டில் குறைபாடுகள். உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையானதை எதிர்த்து கர்நாடக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த மேல்முறையீட்டு மனுவில் 10 குறைபாடுகள் இருப்பதாகவும், அந்த குறைபாடுகளை உடனே நீக்கும்படியும் உச்சநீதிமன்றத்தில் பதிவாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாட அரசின் அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தலைமையிலான குழு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் உள்ள குறைகளை உச்ச நீதிமன்ற பதிவாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் பின்வருமாறு:
1. ‘கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் 1,223 மற்றும் 1,453 ஆகிய 2 பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளது.
2. 1,605-ம் பக்கத்தில் இருந்து 1,629-ம் பக்கம் வரை தாளின் மேற்பகுதியில் முறையாக பக்க எண் குறிப்பிடப்படவில்லை.
3. மனுவை விசாரணைக்கு ஏற்கும் வகையில் அசல் பிரமாணப் பத்திரத்தை இணைக்கவில்லை.
4. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை மற்றும் ரத்து செய்யக்கோரும் முக்கிய வேண்டுகோளில் ஆணை வெளியான தேதிகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
5. நீதிபதி குன்ஹா மற்றும் குமாரசாமி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பல முக்கிய அரசு சான்று ஆவணங்களை மனுவில் இணைக்கவில்லை.
6. சொத்துக்குவிப்பு வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
7. வழக்கில் வெளியான இறுதி தீர்ப்பு, மனு மீதான தீர்ப்பாணைகள், விசாரணை நீதிமன்றத்தின் முக்கிய குறிப்புகள், வெளியிடப்பட்ட அரசாணைகள், பின்இணைப்புகள், வழிகாட்டல்கள் ஆகியவை இணைக்கப்படவில்லை.
8. 28-4-2015 அன்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா நியமிக்கப்பட்டது தொடர்பான கர்நாடக அரசின் அரசாணை தாக்கல் செய்யப்படவில்லை.
9. மேல்முறையீட்டு மனு தயாரிக்கப்பட்ட தேதி, தாக்கல் செய்யப்பட்ட தேதி ஆகியவை குறிப்பிடப்படவில்லை’
மேற்கண்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம் உடனடியாக குறைகளை திருத்தி மீண்டும் மனுதாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அரசின் முக்கிய சட்ட நிபுணர்கள் தயாரித்த மேல்முறையீட்டு மனுவில் குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனு தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய சந்தேஷ் சவுட்டா, கர்நாடக அரசின் டெல்லி வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் கல்லப்பா ஆகியோரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து ஆச்சார்யா தலைமையிலான குழு மேல் முறையீட்டு மனுவை பல பிரிவுகளாக பிரித்து திருத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது.