100 யூனிட் இலவச மின்சாரம் யார் யாருக்கு பொருந்தும். மின்வாரிய அதிகாரிகள் தகவல்
நேற்று தமிழக முதல்வர் ஆறாவது முறையாக பதவியேற்று கொண்ட பின்னர் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். ஒருசில ஊடகங்கள் இந்த இலவச மின்சாரம் 100 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தவறாக தகவலை வெளியிட்டுள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: “இது அனைத்து வீட்டு இணைப்பு மின் நுகர்வோருக்கும் பொருந்தும். 100 யூனிட்களுக்கு அதிகமாக பயன்படுத்துவோர், கூடுதலாக பயன்படுத்தும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் பழைய கணக்கீடுப்படி, கட்டணத்தை செலுத்த வேண்டும். அதாவது, 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் அடுத்த 100 யூனிட்களுக்கு தலா ரூ.1 வீதம் செலுத்த வேண்டும். இலவச 100 யூனிட்கள் தவிர கூடுதலாக 200 யூனிட் பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.1.50 வசூலிக்கப்படும். இதேபோல், நாம் பயன்படுத்தும் முதல் 100 யூனிட்டை கழித்துவிட்டு, மீதமுள்ள யூனிட்டுகளுக்கு பழைய கட்டணத் தொகையே வசூலிக்கப்படும். இது தொடர்பான தெளிவான கட்டண முறை விரைவில் வெளியாகும்” என்று கூறினார்.
மின்வாரிய தொழிற்சங்கத்தினர் இதுகுறித்து கூறும்போது, “100 யூனிட்களுக்குள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டண முறை அதிக பயன் தரும். மின் வாரியத்தில் கணக்கீட்டாளர் பற்றாக்குறை உள்ளது. 100 யூனிட் அளவை கணக்கிட பணியாளர் செல்வதற்கான செலவு அதிகம் என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம்’ என்று கூறினர்.
எனவே முதல்வரின் உத்தரவை சரியாக கவனிக்காமல் செய்தி வெளியிடும் ஊடகங்களை கண்டுகொள்ள வேண்டாம் என்றும் அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் இலவசம் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.