உளுந்துார்பேட்டை அருகே, 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய மகாவீரர் சிலை, கண்டெடுக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, பாதுாரில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு பின்பகுதியில், ராயர் என்பவரது விவசாய நிலம் உள்ளது.
இதில், கடந்த சில நாட்களுக்கு முன், பைப் லைன் அமைக்க பள்ளம் தோண்டியபோது, பழமை வாய்ந்த சிலை கிடைத்தது.அச்சிலை, சமண மதத்தைச் சேர்ந்த, 24 தீர்த்தங்கரர்களில், கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் சிலை என தெரிய வந்தது. 1,200 ஆண்டுகள் பழமையான இந்த கற்சிலை, ஐந்து அடி உயரம், மூன்று அடி அகலத்தில், தியான நிலையில் அமைந்துள்ளது .புதுச்சேரியைச் சேர்ந்த, அகிம்சை நடை அமைப்பாளர் ஸ்ரீதரன் கூறுகையில், சமணர்கள் இப்பகுதியில் வசித்துள்ளனர் என்பதற்கு, இந்த சிலை சான்றாக உள்ளது. இச்சிலையை வேறு இடத்திற்கு கொண்டு சென்று, கோவில் கட்ட திட்டமிட்டுள்ளோம், என்றார்.
உக்கிரன்கோட்டையின் பழமை ஆய்வு: திருநெல்வேலி மாவட்டம், மானுார் அருகே சிற்றாற்றின் வடகரையில், உக்கிரன்கோட்டை கிராமம் உள்ளது. இந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு, உக்கிரபாண்டியன் என்ற மன்னன் ஆண்டுள்ளான். கி.பி., ஆறாம் நுாற்றாண்டு முதல், 10ம் நுாற்றாண்டு வரை, முற்கால பாண்டியர்கள் ஆண்ட இந்த பகுதியில், தொல்லியல் துறையினர், ஏற்கனவே செப்பேடுகள், கல்வெட்டுகள் கண்டெடுத்தனர்.கடந்த, 1970களில், மத்திய தொல்லியல் துறை சார்பில், கே.வி.சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். தற்போது, தமிழக தொல்லியல் துறையினர், ஆய்வைத் துவக்கியுள்ளனர்.
சென்னை, தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் வசந்தி, இயக்குனர் ரஞ்சித் தலைமையில் அகழாய்வுப் பணி நடக்கிறது.இவர்கள் கூறுகையில், இந்த கிராமத்தில், ஓடுகள், கூரைப் பகுதிகள், சுடுமண் சிற்பங்கள், சங்கு வளையல்கள், சீனப் பொம்மைகள் ஆகியவை, ஏற்கனவே கிடைத்துள்ளன. தற்போது நடக்கும் ஆய்வின் மூலம், உக்கிரன்கோட்டையின் முழுமையான தொன்மை குறித்து தெரியவரும் என்றனர்.